உள்ளாட்சி தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க சென்னையில் கூடுதல் பறக்கும் படைகள்

கரோனா பாதித்தோர் பாதுகாப்பாக 5 மணிக்குமேல் வாக்களிக்க ஏற்பாடு
உள்ளாட்சி தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க சென்னையில் கூடுதல் பறக்கும் படைகள்
ககன்தீப் சிங் பேடி ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 3 நாட்களே உள்ள நிலையில், பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையுடன் சென்னை மாநகராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ககன்தீப் சிங் பேடி இன்று ஆலோசனை நடத்தினார்.

ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா அரங்கத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மாநகராட்சி மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குப் பின் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “வாக்களிக்கும் தேதிக்கு முன்பாக 72 மணி நேரத்துக்கு கூடுதல் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள். சென்னையில் அமைதியான முறையில் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.

ஆலோசனை கூட்டத்தில் காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர்
ஆலோசனை கூட்டத்தில் காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர்

தொடர்ந்து பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி, “சென்னையில் 45 பறக்கும் படை செயல்பட்டு வந்த நிலையில், அதை அதிகரித்து ஒரு மண்டலத்துக்கு 3 குழு தினமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளது. ஒரு மண்டலத்துக்கு 3 குழுக்கள் வீதம் மொத்தம் 15 பறக்கும் படை குழுக்கள் வரும் 17-ம் தேதி காலை முதல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் பணப்பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார்களை இலவச புகார் எண்ணான 1800 4257 012-ல் தெரிவிக்கலாம். தேர்தல் விதிமுறைகள் மீறியதாக இதுவரை 59 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 5,794 வாக்கு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நாளைமுதல் நடைபெறும்.

தேர்தல் பணியில் ஈடுபடும் 27,812 அதிகாரிகளுக்கு கணினி மூலம் 18-ம் தேதி பயிற்சியளிக்கப்பட உள்ளது. அன்று மாலை வாக்குப்பதிவு மையத்துக்குத் தேவையான உபகரணங்கள் அந்தந்த அதிகாரிகளுக்கு வழங்கப்படும். சென்னையில் உள்ள மொத்த வாக்குப்பதிவு மையங்களில் 1,198 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 267 நுண் பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பதற்றமான மையங்களில் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் இதுவரை தேர்தல் பறக்கும் படையால் 1.45 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 27-ம் தேதி முதல் இன்று காலை 6 மணி வரை 14 இடங்களில் 18.13 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும், 8 இடங்களில் 1.27 கோடி பரிசுப் பொருட்களாகவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

மேலும், “கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் தகுந்த பாதுகாப்புகளுடன் மாலை 5 மணிக்குமேல் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக 1,368 சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடிகளில் தயார் நிலையில் வைக்கப்படும். வாக்குச்சாவடிகளில் இதற்காக சாய்தளமும் அமைக்கப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் மேலும் கூடுதலாக சாய்தளம் அமைக்கப்படும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.