
கொடைக்கானல் அருகே பெருமாள்மலை வனப்பகுதிக்குள் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. 500 ஏக்கருக்கும் மேலாக எரிந்துவரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பெருமாள்மலை வனப் பகுதி அமைந்துள்ளது. இந்த வனப் பகுதியில் இருந்து தோகை வரையும், மயிலாடும் பாறை மற்றும் மச்சூர் வனப்பகுதிகளில் 500 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் திடீரென காட்டுத் தீ பரவியது. நேற்று நள்ளிரவில் எரியத் தொடங்கிய இந்த காட்டு இன்று வரை எரிந்து கொண்டிருக்கிறது. மயிலாடும் பாறை, மயில் தோகை வரை, குருசடி பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீ வேகமாக பரவி வருவதால் கடும் புகை மூட்டம் காணப்படுகிறது.
வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டுத் தீயால் பல உயிரினங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விலங்கியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். உலங்கூர்தி ஹெலிகாப்டர் உதவியுடன் எரியும் காட்டுத்தீயை அணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.