காவல் துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகள், திறமையற்றவர்கள்!

சென்னை உயர் நீதிமன்றம் வேதனை
காவல் துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகள், திறமையற்றவர்கள்!
சென்னை உயர் நீதிமன்றம்

‘‘ஊழல் அதிகாரிகளைக் களைந்து, திறமையற்ற அதிகாரிகளுக்கு போதிய பயிற்சி வழங்கவேண்டிய தருணம் இது’’ என்று உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர் நடேசன், ராஜவேலு ஆகியோருக்கு எதிராக நில விற்பனை தொடர்பான புகார் ஒன்றை மாவட்டக் குற்றப்பிரிவில் அளித்தார். இந்தப் புகாரை விசாரித்த போலீஸார், வசந்தி தவறான புகார் அளித்ததாகக் கூறி புகாரை முடித்து, நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அறிக்கையை ஏற்று நாமக்கல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, வசந்தி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தார். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புகார் மீது மறுவிசாரணை செய்ய உத்தரவிட்டது. அதன்படி வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் பாக்கியலட்சுமி, தவறான புகார் என வழக்கை முடித்து வைத்து, நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவின்படி மறுவிசாரணை நடத்தாமல், வழக்கை முடித்து அறிக்கை அளித்ததாகக் கூறி, பாக்கியலட்சுமிக்கு எதிராக வசந்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆய்வாளர் பாக்கியலட்சுமி தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், நில விற்பனை சிவில் வழக்கு என்பதால் வழக்கை முடித்து வைத்ததாகவும், மறுவிசாரணை நடத்தப்பட்டதாகவும் வாதிட்டார். மேலும், தவறு செய்திருப்பதாக நீதிமன்றம் கருதினால் மன்னிப்பு கோருவதாக ஆய்வாளர் பாக்கியலட்சுமி தரப்பில் பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வேல்முருகன், “நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கவில்லை” எனக் கூறி, அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தார்.

மேலும், “நிலத்தை விற்பனை செய்தவர் உயிருடன் இருந்தபோதே விசாரித்திருந்தால், முழு உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கும். தற்போது காவல் துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளனர்.

10 சதவீத அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உள்ளனர். ஊழல் அதிகாரிகளைக் களைந்து, திறமையற்றவர்களுக்கு போதிய பயிற்சி வழங்கவேண்டிய நேரம் இது” என தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.