ஆடு, மாடு பிடிக்கணும்... சைக்கிள் ஓட்டணும்... இன்டர்வியூவுக்கு தயாராக வந்த பட்டதாரிகள்!

48 காலிப் பணியிடங்களுக்கு 5906 பேர் விண்ணப்பம்
ஆடு, மாடு பிடிக்கணும்... சைக்கிள் ஓட்டணும்... இன்டர்வியூவுக்கு தயாராக வந்த பட்டதாரிகள்!
மாடு பிடிக்கும் சோதனை படம்: வின்னிங்ஸ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள 48 கால்நடை உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. பத்தாம் வகுப்புத் தகுதியான இந்த வேலைக்கு குமரிமாவட்டத்தில் 5906 பேர் விண்ணபித்துள்ளனர். இவர்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று தொடங்கியது. இதில் பள்ளிப்படிப்பு மட்டுமே படித்தவர்களுக்கு இணையாக பட்டதாரிகள் பலரும், கையில் தங்களது கல்விசான்றிதழ் சகிதம் கலந்துகொண்டது ஆச்சரியத்தையும், வேலையின்மையின் மீதான கள யதார்த்தத்தையும் உணரவைத்துள்ளது.

சைக்கிள் ஓட்டும் திறன் சோதிக்கப்பட்டது
சைக்கிள் ஓட்டும் திறன் சோதிக்கப்பட்டதுபடம்: வின்னிங்ஸ்

’கால் காசு சம்பளம் என்றாலும் சர்க்கார் சம்பளம்’ என்னும் வார்த்தைப் பிரயோகம் குமரிமாவட்டத்தில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இயல்பாகவே அரசுப்பணியின் மீது மக்களுக்கு இருக்கும் மோகம் ஒருபக்கம் இருந்தாலும், படித்த இளைஞர்களுக்கு பெரிய அளவில் வேலைவாய்ப்புக்கான சூழல் இல்லாததும் தங்கள் படிப்புக்கேற்ற வேலையைவிட கிடைத்த வேலையை செய்யும் மனப்பாங்கையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் கால்நடை உதவியாளர் பணிக்கு பட்டதாரிகள் பலரும் படையெடுத்தனர். குமரிமாவட்டத்தில் காலியாக உள்ள 48 பணியிடங்களுக்கு இன்றுமுதல் பத்துநாள்கள் நேர்முகத்தேர்வு நடக்கிறது.

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடக்கும் இந்த நேர்முகத்தேர்விற்கு 5906 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் விண்ணப்பத்தாரர்களுக்கு சரியாக சைக்கிள் ஓட்டத் தெரிகிறதா? மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை சரியாகக் கையாளத் தெரிகிறதா? என்பது உள்ளிட்ட சோதனைகள் நடைபெற்றன. பட்டதாரிகள் பலரும் போதிய வேலைகிடைக்காததால் கால்நடை உதவியாளர் பணியிடத்திற்காக சைக்கிள் ஓட்டவும், மாடுகளை கையாளவும் செய்தனர். அதில் பொறியியல், எம்.பி.ஏ பட்டதாரிகளும் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விண்ணப்பதாரர்களின் திறனை அதிகாரிகள் மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கினர்.

காத்திருக்கும் கூட்டம்
காத்திருக்கும் கூட்டம் படம்: வின்னிங்ஸ்

இன்று மாலை 5.30 வரை நடக்கும் இந்த நேர்முகத் தேர்வுக்கு 750 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. வரும் 29-ம் தேதிவரை இந்த நேர்முகத் தேர்வு நடக்கிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 600 முதல் 750 பேர்வரை கலந்துகொள்கிறார்கள். 29-ம் தேதி வரை நடக்கும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கு வரும் 30-ம் தேதி, மதியம் ஒருமணிவரை மட்டும் கலந்து கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெண்களும் அதிகளவில் நேர்முகத்தேர்வில் கலந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.