ஆண்டுக்கு ரூ.50 கோடி வசூல் அள்ளித்தரும் மொய் விருந்து!

மதுரையில் களைகட்டும் 'இல்ல விழாக்கள்'
இல்ல விழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சி.
இல்ல விழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சி.

புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களைப் போன்று மதுரையிலும் மொய் விருந்து திருவிழா களைகட்டி நடந்து வருகிறது. ஓர் ஆண்டிற்கு குறைந்தது 50 கோடி ரூபாய்க்கு மேல் இவ்விழாக்களில் வசூலாகிறது.

‘கெடாவெட்டு, காது குத்து’ என்ற வாசகங்களில் ‘வெட்டு, குத்து’ என்ற வாசகங்களைப் பெரிதாக்கி போஸ்டர், பிளக்ஸ்களில் வித்தியாசமாக மிளிர வைக்கும் மதுரையில் முன்பு அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்த மொய் விருந்து தற்போது நூற்றுக்கணக்காக அதிகரித்துள்ளது. ‘வாடிப்பட்டி கொட்டு, வடக்கம்பட்டி வேட்டு’ இல்லாமல் இந்த விழாக்கள் நடப்பதில்லை. 'கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை செல்லூரில் நடைபெற்ற மொய் விருந்து திருவிழாவில் வசூலான தொகை 60 லட்ச ரூபாய் தெரியுமா?' என ஒருவர் சொல்ல, ‘இதைக்கேட்டு அசந்தா எப்படி? போன வாரம் நடந்த நம்ம பங்காளி வீட்டு மொய் விருந்துல வசூலு 1 கோடி ரூபாப்பே..’ என்று மீசை முறுக்கினார் மற்றொரு மதுரைக்காரர்.

இல்ல விழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் ஒரு காட்சி.
இல்ல விழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் ஒரு காட்சி.

வட்டியில்லாத கடன் வாங்கும் விழாக்களாக நடக்கும் இந்த மொய் விருந்து நிகழ்ச்சிகள் மதுரையில் ஆண்டு முழுவதும் நடத்தப்படுகிறது. அயலானிடம் கடன் வாங்கி அசிங்கப்படுவதை விட உற்றானிடம் விசேஷம் நடத்தி அதற்குரிய மொய்வாங்கி அதைத்திருப்பிச் செஞ்சா போதும், பிழைத்துக் கொள்ளலாம் என்பது தான் இந்த மொய் விருந்தின் மையக்கருத்தாக உள்ளது. இந்த விழாக்களால் குபேரனானவர்களும் உண்டு. குசேலனானவர்களும் உண்டு.

இல்ல விழாவில் நடக்கும் அசைவ விருந்து.
இல்ல விழாவில் நடக்கும் அசைவ விருந்து.

மொய் விருந்து பற்றி மதுரை செல்லூரைச் சேர்ந்த ரமேஷ் கூறுகையில், ``முன்பெல்லாம் நோட்டு போட்டு தான் மொய் எழுதுவோம். இப்போது கம்ப்யூட்டர் வைச்சு மொய் எழுதுறோம். ஒரு கம்ப்யூட்டரில் 600 பேரின் பெயர்கள் வரை ஏற்ற முடியும் என்பதால், இருவரை நிகழ்ச்சியன்று அழைத்து வருவோம். ஒருவருக்கு ரூ.2500 சம்பளம். நம்ம விரும்புற மாதிரி சிடி, பென்ட்ரைவ்ல பெயர்களைப் பதிவு செஞ்சு தந்திடுவாங்க. யாருக்கு மொய் செஞ்சுருக்கோம், யாரு நமக்கு மொய் செஞ்சுருக்காங்க என ஒரு நிமிஷத்தில் இதை வைச்சு பார்த்திடலாம்'' என பெருமையாகச் சொல்கிறார்.

மதுரை அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்த ஜிம் செந்தில் கூறுகையில், ' மொய் விருந்து மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. சமையல் மாஸ்டர்கள், சமையல் கலைஞர்கள், அவர்கள் உதவியாளர்கள், கொட்டடிப்பவர்கள், பந்தல் அமைப்பாளர்கள், வீடியோ - போட்டோ எடுப்பவர்கள், வெடி வெடிப்பவர்கள், மண்டபம் நடத்துபவர்கள், பலசரக்கு கடை நடத்துபவர்கள், இறைச்சி கடை நடத்துபவர்கள் என ஏராளமானோரின் பிழைப்பு இதன் மூலம் நடக்கிறது. கரோனா காலக்கட்டத்தில் இவர்களின் பொருளாதர நிலை அதிகம் பாதிக்கப்பட்டது. தற்போது கரோனா தாக்கம் குறைந்து விட்டதால் மீண்டும் மதுரையில் மொய் விருந்து திருவிழாக்கள் களைகட்டியுள்ளது'' என்று கூறினார்.

இதுகுறித்து மக்கள் சட்ட உரிமை இயக்க மாநில தலைவர் அண்ணாத்துரையிடம் பேசினோம். மதுரையில் இந்த மொய் விருந்து எப்போது துவங்கியது என்று கேட்டதற்கு, ``15 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால், சமீபகாலமாகத் தான் இது அதிகரித்துள்ளது. பூப்பூனித நீராட்டு விழா, காதணி விழா, திருமண விழாக்கள் போல் இல்லாமல் வருமானம் பெற வேண்டும் என்று நடத்துவதற்காக வசந்த விழா என்ற பெயரில் முதலில் நடத்தினார்கள். இப்போது இல்லவிழா என்று நடத்துகிறார்கள்'' என்று கூறினார்.

மதுரையில் உசிலம்பட்டி, பேரையூர், கருமாத்தூர், செல்லூர், நாகமலை, கீழக்குயில்குடி உள்ளிட்ட பகுதிகளில் மொய் விருந்து அதிகம் நடப்பதாக தெரிவித்த அவரிடம், ஒரு வருடத்தில் எத்தனை இல்லவிழாக்கள் நடக்கும் என்று கேட்டதற்கு, ``அதிகபட்சமாக 500 விசேஷங்கள் நடைபெறும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விசேஷம் நடத்துபவர்களும் உண்டு. இதன் மூலம் ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டப்படுகிறது. வறுமையில் உள்ள ஒருவருக்கு உதவிடும் நோக்கில் மொய் செய்து அவரை உயர்த்தி விடும் ஒரு சமூக விழா தான் இது. ஆனால், அப்படி வசூலான பணத்தை நல்ல முறையில் வைத்துக் கொள்ள முடியாமல் ஊதாரியாகச் செலவழித்து செய்முறை செய்ய முடியாமல், ஊரை விட்டு ஓடிப்போனவர்களும் உண்டு'' என்று கூறினார்.

செய்முறை செய்ய மறுத்தவர்கள் குறித்து காவல்துறையிடம் புகார் செய்யும் நடைமுறை உண்டா? என்று அவரிடம் கேட்டதற்கு, ``உறவினர்கள் என்பதால் பெரும்பாலும் போலீசுக்கு போக மாட்டார்கள். கஷ்டப்படுபவர்கள் மொய் செய்யாவிட்டால், எப்படியாவது அடுத்த விசேஷம் நடத்தி திருப்பி செய்து விடுவார் என விட்டு விடுவார்கள். ஆனால், ஏமாற்ற நினைப்பவர்களிடம் தான் கறார் தன்மையோடு ஆளை விட்டு பணத்தைக் கேட்டு விடுவார்கள். இவ்வளவு மொய் செய்யுங்கள் என டிமாண்ட் செய்து வசூல் செய்து ஏமாற்றுபவர்களைத் தான் போலீஸில் புகார் செய்யும் நிலை உள்ளது'' என்று கூறினார். இசைக்கச்சேரி, நடன நிகழ்ச்சி என கோயில் திருவிழாவைப் போல மதுரையில் ஒரு சமூக மக்களிடம் நடக்கும் மொய் விருந்து திருவிழாக்கள் கலாச்சாரத்தன்மை குறையாமல், காரசார உணவு ருசி குறையாமல் நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in