அணுகு சாலை இல்லாவிட்டால் அவதியைத் தீர்க்காது 50 கோடி ரூபாய் பாலம்!

அணுகு சாலை இல்லாவிட்டால் அவதியைத் தீர்க்காது 50 கோடி ரூபாய் பாலம்!

மதுரை ரிங் ரோட்டில் 50 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்துக்கு அணுகு சாலை அமைக்காவிட்டால் போக்குவரத்து நெரிசலை தீர்க்கமுடியாது என சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

மதுரையுடன் தென் மாவட்டங்களை இணைக்கும் ரிங் ரோட்டில் பாண்டிகோயில் - சிவகங்கை ரோடு சந்திப்பு, கருப்பாயூரணி ரோடு சந்திப்பு ஆகிய பகுதிகள் வழியாக 50 கோடி ரூபாயில் மதுரை -திருச்சி நான்குவழிச் சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் மந்தகதியில் நடக்கின்றன. இந்த நிலையில், இந்த உயர் மட்ட மேம்பாலம், திருச்சி, சென்னை செல்வோருக்கு மட்டுமே உதவும் என்றும், மதுரை ரிங் ரோட்டில் எந்த போக்குவரத்து நெரிசலையும் தீர்க்காது என்றும் ஆதங்கம் தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மணிகண்டன், “இந்த மேம்பாலத்தால் பாண்டிக்கோயில் - சிவகங்கை சாலை ஜங்ஷன், கருப்பாயூரணி சாலை ஜங்ஷன் பகுதியில் எந்த போக்குவரத்து நெரிசலும் குறையப்போவதில்லை. சென்னை, திருச்சியில் இருந்து ரிங் ரோடு வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்வோருக்கும், அங்கிருந்து திருச்சி மற்றும் சென்னை செல்வோருக்கும் மட்டுமே இந்த மேம்பாலம் உதவியாக இருக்கும். பாலத்தில் எந்த அணுகு சாலையும் அமைக்கப்படாததால் மதுரை கே.கே.நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தும், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்தும் கருப்பாயூரணி ஜங்ஷன் வழியாக சிவகங்கை செல்லும் வாகனங்களும், ராமநாதபுரம், தூத்துக்குடி, அருப்புக்கோட்டை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களும் வழக்கம்போல் கருப்பாயூரணி ஜங்ஷன் பகுதியில் நின்றுதான் செல்ல வேண்டிய இருக்கும். அங்கு அதற்காக சிக்னல் அமைத்து போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

இப்படித்தான் மதுரை காளவாசல் பகுதியில் சரியான திட்டமிடல் இல்லாமல் 50 கோடி ரூபாயில் மேம்பாலம் கட்டி மக்கள் பணத்தை வீணடித்தார்கள். அதே ரீதியில் இந்தப் பாலத்தையும் கட்டுகிறார்கள். குறைந்தபட்சம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்களும், தென் மாவட்டங்களில் இருந்து மாட்டுத்தாவணிக்கு வந்து செல்லும் வாகனங்களும் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இந்தப் பாலத்திற்கு அணுகு பாலமாவது அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பாலத்தால், மதுரைக்கு வந்து செல்லும் மக்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இருக்காது” என்றார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in