‘இன்னுயிர் காப்போம்; நம்மை காக்கும் 48’ திட்டம்

முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்
‘இன்னுயிர் காப்போம்; நம்மை காக்கும் 48’ திட்டம்

தமிழகத்தில் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க ‘இன்னுயிர் காப்போம்; நம்மை காக்கும் 48’ என்ற புதிய மருத்துவ அவசர உதவி திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.

விபத்து ஏற்படும் சமயங்களில் உயிரிழப்பைத் தடுக்க ‘இன்னுயிர் காப்போம்; நம்மை காக்கும் 48’ என்ற புதிய திட்டத்தை, நாளை மேல்மருவத்தூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் நடைபெறும் சாலை விபத்துகளில் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்படக் காரணம், அவர்களை உடனடியாக மருத்துவமனைகளில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்காததுதான். இதைத் தடுக்கவும், விபத்தில் சிக்குவோரின் சிகிச்சைக்காக உதவும் வகையிலும் ‘இன்னுயிர் காப்போம்; நம்மை காக்கும் 48’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்த உள்ளார்.

இதற்காக தமிழகம் முழுதும் 610 மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் விபத்து நடந்தாலும் விபத்து நடந்த பகுதியில் விபத்துக்கு உள்ளானவரை மருத்துவமனையில் சேர்க்கும் நபருக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகையும், விபத்தில் சிக்கியவருக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் சிகிச்சையும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய திட்டத்தை மேல்மருவத்தூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மைதானத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(டிச.18) தொடங்கி வைத்துப் பேசுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in