ஃபுட் பாய்சனானது சிக்கன் பிரியாணி: அடுத்தடுத்து 40 பேர் மருத்துவமனையில் அட்மிட்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அசைவ உணவகத்தில் வாங்கப்பட்ட சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 40 பேரும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி செந்தமிழ் நகரை சேர்ந்த சித்திரைவேலு சொந்தமாக வீடு கட்டி வருகிறார். நேற்று அவரது வீட்டிற்கு மேல் பகுதியில் கான்கிரீட் போடும் பணி நடைபெற்றது. கான்கிரீட் போடுவதற்காக வந்திருந்த தொழிலாளர்களுக்கு பிரியாணி உணவு வழங்க முடிவு செய்தார். அதற்காக அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்த வினோத் (42) என்பவர் மூலமாக அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் உள்ள பிரியாணி கடையிலிருந்து 40 பிரியாணி பார்சல்களை வாங்கி வந்து பணிக்கு வந்த 40 பேருக்கும் வழங்கினார்.

அவர்கள் அனைவரும் மதிய உணவுக்கு முன்பு வேலை முடிந்து விட்டதால் பிரியாணியை வீட்டிற்கு கொண்டு சென்று வீட்டில் உள்ளவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு அந்த பிரியாணி ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதனையடுத்து அவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். இப்படி பலருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு ஒவ்வொருவராக மருத்துவமனைக்கு வர தொடங்கினர். நேற்று இரவு வரை 27 பேர் இப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து உடனடியாக அந்த கடைக்கு விரைந்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஜேம்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் அறந்தாங்கி போலீசார் முன்னிலையில் உணவு மாதிரிகளை எடுத்துக் கொண்டு கடைக்கு `சீல்' வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை பிரியாணி சாப்பிட்டவர்களில் மீதமுள்ளவர்களில் 13 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களும் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு இன்று காலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் பரபரப்பையும் தொழிலாளர் குடும்பங்களில் பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in