`உன் நண்பன் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறான்'- இரவில் ஓடோடி வந்த வாலிபர் அதிர்ச்சி

`உன் நண்பன் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறான்'- இரவில் ஓடோடி வந்த வாலிபர் அதிர்ச்சி
கொல்லப்பட்ட ராகுல்

சென்னை போதை மாத்திரை வாங்கி தருவதாக கூறி 20 ஆயிரம் பணம் பெற்று ஏமாற்றிய வாலிபரை 3 பேர் படுகொலை செய்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

சென்னை கொருக்குப்பேட்டை ஹரி நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் ராகுல்(19). நேற்று இரவு 10.30 மணியளவில் ராகுல் பழைய கிளாஸ் பேக்டரி ரோட்டில் ரத்த காயங்களுடன் சாலையில் கிடப்பதாக அவரது நண்பர் விக்னேஷ் என்பவரிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போனில் தெரிவித்துள்ளார். உடனே விக்னேஷ் சம்பவயிடத்திற்கு சென்று ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த ராகுலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராகுல் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் ஆர்.கே.நகர் போலீஸார் மருத்துவமனைக்கு சென்று ராகுல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று அதிகாலை ராகுலை கொலை செய்ததாக கூறி 3 பேர் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த ரகுமான்(20), சங்கர் என்ற கௌரிசங்கர் (25), தண்டையார்பேட்டையை சேர்ந்த சரவணன் (20) என்பது தெரியவந்தது. மேலும் கொலை செய்யப்பட்ட ராகுல் போதை மாத்தி்ரை விற்று வந்ததுள்ளார். போதை பழக்கத்திற்கு அடிமையான சங்கர், ரகுமான், சரவணன் ஆகிய 3 பேரும் கடந்த 15-ம் தேதி ராகுலிடம் போதை மாத்திரை கேட்டு 20 ஆயிரம் பணம் கொடுத்துள்ளனர்.

பணத்தை பெற்று கொண்ட ராகுல் போதை மாத்திரை வாங்கி தராமல் ஏமாற்றி வந்ததால் ஆத்திரமடைந்த 3 பேரும் ராகுலிடம், போதை மாத்திரை கொடு, இல்லையென்றால் பணத்தை திருப்பி கொடு என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சங்கர், ரகுமான், சரவணன் ஆகிய 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராகுலை சரமாரி வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேர் மீது கொலை வழக்கு பதிவுசெய்த போலீஸார் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in