இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் வாகனங்களுடன் கைதானவர்கள்

ஆந்திராவிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 2 கோடி மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களும், அதை ஏற்றி வந்த வாகனங்களும் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. அத்துடன் கஞ்சா கடத்தியவர்கள் மட்டுமல்லாது வாங்கி விற்பனை செய்பவர்கள், அதை இலங்கைக்கு கடத்துபவர்கள் உட்பட அனைவரையும் கூண்டோடு காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுப்பதற்காக, தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஏ.கயல்விழி உத்தரவின்பேரில், டெல்டா மாவட்டங்களில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களில் ஒரு பிரிவினர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தஞ்சாவூரில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை தனிப்படையினர் நிறுத்தி சோதனையிட்டனர். அதில், பீகாரில் உள்ள அனல் மின் நிலையத்திலிருந்து பழுது பார்ப்பதற்காகத் தமிழ்நாட்டுக்கு இயந்திரம் கொண்டு வரப்படுவது தெரியவந்தது.

இருப்பினும் சந்தேகத்தின் அடிப்படையில் தனிப்படையினர் இயந்திரத்தை முழுமையாகச் சோதனையிட்டபோது, அதில் 250 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருப்பது கண்டறியப்பட்டது. அதுகுறித்து மினி லாரியில் வந்தவர்களிடம் தனிப்படையினர் நடத்திய விசாரணையின் மூலம் வேதாரண்யம், பட்டுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த கஞ்சா பொட்டலங்களை வாங்கி இலங்கைக்கு அனுப்பும் நபர்கள் குறித்த தகவல்கள் தெரியவந்தது.

இதுதொடர்பாக உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதில் சம்பந்தப்பட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா பொட்டலங்கள்
கஞ்சா பொட்டலங்கள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கடத்தி வரப்படும் இந்த கஞ்சா பொட்டலங்கள், வேலூர் வழியாகத் தமிழ்நாட்டுக்குள் வந்து நாகை மாவட்டத்திலுள்ள வேதாரண்யம், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்பவானோடையிலிருந்து கள்ளத் தோணிகள் மூலம் இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளதாக தனிப்படை போலீஸார் தெரிவித்தனர்.

விசாகப்பட்டினத்திலிருந்து கிலோ ரூ. 3,000 வீதம் வாங்கப்படும் இந்த கஞ்சா, இலங்கை நபர்களிடம் ரூ. 20,000 வீதத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. அது இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு கிலோ ரூ. 50,000-க்கு விற்கப்படுகிறதாம். எனவே, பறிமுதல் செய்யப்பட்ட இந்த கஞ்சா பொட்டலங்களின் மதிப்பு ரூ. 1.25 கோடி என்றும், வாகனங்களையும் சேர்த்து மொத்தம் ரூ. 2 கோடி ரூபாய் எனவும் தனிப்படை போலீஸார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.