10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்: காரணம் இதுதான்?

10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்: காரணம் இதுதான்?

பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் நீலகிரி மாவட்டத்தில் கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்துள்ளன. இதனால், கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதை சார்ந்துள்ள 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், மலை காய்கறிகள் மற்றும் தேயிலையை தவிர அனைத்து உணவு, கட்டுமானம் உட்பட்ட பொருட்களுக்கு சமவெளிப்பகுதிகளையே நம்பியுள்ளது. இதனால் மாவட்டத்தில் அனைத்து பொருட்களின் விலையும் சமவெளிப்பகுதிகளைவிட சற்று கூடுதலே. தக்காளி, வெங்காயத்துக்கு மைசூரையும், அரிசிக்கு தஞ்சையையும், பிற காய்கறிகளுக்கு பிற மாவட்டங்களையும் நம்பியுள்ளது.

ஐ.நசீர்
ஐ.நசீர்

இதேபோல கட்டுமான பொருட்களான மணலுக்கு கரூரையும், செங்கலுக்கு சென்னை, காஞ்சி மற்றும் கோவையையும், கம்பிகளுக்கு கோவையையும் நீலகிரி மாவட்டம் நம்பியுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் வீடு கட்டினால் சமவெளிப்பகுதிகளைவிட இரண்டு மடங்கு பணம் தேவை. இந்நிலையில், கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தால் நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலானோர் வீடு கட்டுவது கனவாகிவிட்டது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக மணலின் விலையேற்றம் நீலகிரி வாழ் மக்களின் ‘கனவு வீடு’ கனவாகவே மாறிவிட்டது.

இந்நிலையில், நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. சமவெளிப்பகுதிகளை காட்டிலும் நீலகிரி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று உதகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.113.06க்கும் டீசல் ரூ.102.81க்கும் விற்பனையானது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாடகை வாகனங்கள், சரக்கு வாகனங்களின் வாடகை கட்டணம் அதிகரித்து உள்ளது. இதுதவிர கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்து இருக்கிறது.

நீலகிரி மாவட்டத்துக்கு செங்கல், மணல், ஜல்லி போன்ற கட்டுமான பொருட்கள் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் பிற இடங்களில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. இவற்றின் விலை திடீரென உயர்ந்துள்ளது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட கட்டுமானப் பொருட்கள் விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஐ.நசீர் கூறுகையில், "உதகையில் ஒரு செங்கல் ரூ.13-ல் இருந்து ரூ.14 ஆக விலை உயர்ந்து உள்ளது. எம்.சாண்ட் மணல் ஒரு யூனிட் ரூ.6,500 ஆயிரத்தில் இருந்து ரூ.7,000 ஆகவும், ஆற்று மணல் ஒரு யூனிட் ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாகவும், 50 கிலோ சிமென்ட் மூட்டை ரூ.430-ல் இருந்து ரூ.460 ஆகவும், ஜல்லி ஒரு யூனிட் ரூ.5,500லிருந்து ரூ.6,000 ஆகவும் விலை அதிகரித்து இருக்கிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு லாரியில் கட்டுமான பொருட்கள் கொண்டு வர ரூ.8,000 ஆக இருந்த வாடகை டீசல் விலை உயர்வால், ரூ.10 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் வெளியிடங்களில் இருந்து உதகைக்கு வரும் கட்டுமான பொருட்கள் அளவு குறைந்து இருக்கிறது. இதனால் அதை நம்பி பணிபுரிந்து வரும் டிரைவர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

நீலகிரி மாவட்டத்தில் கட்டிட தொழிலில் சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் எனவும், இவர்களில் பலர் வேலை இழந்துள்ளனர் என கட்டிட தொழிலாளர்கள் சங்க நிர்வாகி வாசு கூறுகிறார். ஏற்கெனவே வடமாநிலத்தினர் குறைந்த கூலிக்கு கட்டிட தொழிலில் ஈடுபட்டு வருவதால், மாவட்டத்தில் உள்ள கட்டிட தொழிலாளிகள் பலர் வேலை இழந்து வரும் நிலையில், தற்போது கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தால் மாவட்ட கட்டுமான தொழில் முடங்கியுள்ளதால் தொழிலாளிகளின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறிவிட்டதாக வாசு கவலை தெரிவிக்கிறார்.

கட்டுமானப்பொருட்கள் விலை உயர்வால் நீலகிரி மாவட்டத்தில் பல கட்டிடங்கள் பாதிலேயே நிற்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in