13 கோடி டெபாசிட்... குறுஞ்செய்தியால் பதறிய வாடிக்கையாளர்கள்: உஷாரான வங்கி

13 கோடி டெபாசிட்... குறுஞ்செய்தியால் பதறிய வாடிக்கையாளர்கள்: உஷாரான வங்கி

சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலை பர்கிட் சாலை சந்திப்பில் எச்டிஎஃப்சி வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்று காலை அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் 100 பேரின் வங்கிக் கணக்குகளில், வங்கியில் இருந்து 13 கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டது. 13 கோடி டெபாசிட் செய்யப்பட்டது குறித்து வந்த குறுஞ்செய்தியை பார்த்த வாடிக்கையாளர்கள் அத்தனை பேரும் அதிர்ச்சியடைந்து சில வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட எச்டிஎஃப்சி வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டனர்.

இந்த தகவலை கேட்டு அதிர்ந்து போன வங்கி அதிகாரிகள் உடனடியாக 13 கோடி ரூபாய் பணம் செலுத்தப்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கை முடக்கியதுடன் 13 கோடி ரூபாயை அந்த வங்கிக் கணக்கில் இருந்து வேறு எங்கும் செல்லாதவாறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பின்னர் பணம் செலுத்தப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து மீண்டும் பணத்தை வங்கிக்கு மாற்றம் செய்யும் பணி முடிக்கிவிடப்பட்டது. இன்று அந்த பணி முடிந்து வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்கப்பட்ட அனைத்து பணமும் மீண்டும் வங்கிக்கு வரவு வைக்கப்பட்டது.

இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், சாப்ட்வேர் அப்டேட் செய்யும்போது ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக 90 வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கு 13 கோடி ரூபாயும், 10 வாடிக்கையாளருக்கு 5 முதல் 10 ஆயிரம் பணம் சென்றதாகவும், ஆனால் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிற்கு வெறும் குறுந்தகவல் மட்டுமே சென்றதாகவும், பணம் செல்வதற்குள் அதனை முடக்கி சீர் செய்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

முகமது அலி
முகமது அலி

இந்நிலையில் தனது வங்கிக் கணக்கில் 13 கோடி ரூபாய் வந்தவுடன் அதிர்ச்சியடைந்து முதல் ஆளாக எச்டிஎஃப்சி வங்கி அதிகாரிக்கு தகவல் கொடுத்துள்ளார். கோடம்பாக்கத்தை சேர்ந்த முகமது அலி. இது குறித்து முகமது அலி கூறுகையில், "கடந்த 10 ஆண்டுகளாக எச்டிஎஃப்சி வங்கியில் கணக்கு வைத்துள்ளேன். நேற்று காலை திடீரென தனது வங்கிக் கணக்கில் 13 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக குறுந்தகவல் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இதை சோதனை செய்ய தனது நண்பருக்கு 2 லட்சம் அனுப்பிய போது அது நிஜமென்று தெரிந்தது. உடனடியாக எச்டிஎஃப்சி வங்கி அதிகாரியை தொடர்பு கொண்டு, இது குறித்து சொன்னபோது தவறு நடக்க வாய்ப்பில்லை என்று மறுத்தார்கள்.

பின்னர் 13 கோடி வந்ததற்கான ஆவணத்தை அனுப்பியவுடன் அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள் வங்கிக் கணக்கை முடக்கினர். பின்னர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 13 கோடி ரூபாய் வந்ததாகவும், உடனடியாக சரி செய்யப்படும் எனவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து சில மணி நேரத்தில் 13 கோடி ரூபாய் வங்கிக் கணக்கிற்கு மாற்றம் செய்து சீர் செய்யப்பட்டு விட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்ததாகவும், அது உழைத்து சம்பாதித்த பணம் இல்லை என்பதால் உடனடியாக வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தேன்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in