சசிகலா பாஜகவுக்கு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில்
அண்ணாமலை
அண்ணாமலை

தினம் ஒரு போராட்டம், அறிக்கை, பேட்டி என தமிழக அரசியல் களத்தில் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. தங்களது இடத்தை இவர் ஆக்கிரமித்து விடுவாரோ என அதிமுகவினரே அச்சப்படும் அளவுக்கு ஆக்டிவ் பாலிடிக்ஸ் செய்துகொண்டிருக்கும் அண்ணாமலை காமதேனு மின்னிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியிலிருந்து…

'இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்' பிரச்சாரம் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவிற்கு எந்த அளவுக்கு கைகொடுக்கும்?

இந்த திட்டத்தை விளம்பரப்படுத்தாமல், கட்சி உறுப்பினர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு செய்ய வேண்டும் என்பது கட்சி தலைமையின் எதிர்பார்ப்பு. ட்விட்டர், ஃபேஸ்புக் என சமூக ஊடங்களில் இந்த பிரச்சாரம் வராது. எவ்வித ஆடம்பரமும் இல்லாமல் பாஜகவினர் சத்தமில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டுமே இப்போது சொல்ல முடியும்.

இதற்கு முன்பு தமிழக பாஜக தலைவர்களாக இருந்தவர்களிடம் தென்பட்ட மிதவாதம் தங்களிடம் இல்லையே..?

உண்மையைச் சொல்லப்போனால், மோடி என்ற மனிதர் இல்லாதபோது பாஜகவின் தோற்றம் தமிழகத்தில் வேறு மாதிரியாக இருந்தது. இப்போது மோடி வந்த பிறகு குறிப்பாக பாஜக தமிழகத்தில் எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது. தமிழிசை, எல்.முருகன் ஆகியோர் காலத்தில் கடுமையாக உழைத்து கட்சியை வளர்த்துள்ளனர். இப்போது அதை விட வேகமாக கட்சியை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது எனக்கு முன்பு உள்ள மிகப்பெரிய வேள்வி. திமுகவின் பொய் அரசியலை அம்பலப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் மோடியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகளாகி விட்டது. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் முழுமையடைந்திருக்கின்றன. பாஜகவிற்கு தற்போது தமிழகத்தில் சூழல் அருமையாக இருக்கிறது. எனவே, தலைவராக வேகமாக செயல்பட வேண்டிய அவசியமிருக்கிறது.

'சசிகலா பாஜகவுக்கு வந்தால் அவரை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நிச்சயம் அது எங்களுக்கு உறுதுணையாக இருக்கும்' என்கிறாரே உங்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன்... சசிகலா வந்தால் வரவேற்பீர்களா?

முழுக்க முழுக்க இது நயினார் நாகேந்திரனின் தனிப்பட்ட கருத்து. இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, அவரும் இது என் தனிப்பட்ட கருத்து என்றே கூறியுள்ளார்.

அடுத்த வாரம் ஆதாரங்களுடன் 2 திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று சொல்லி இருக்கிறீர்கள். எதற்கு இந்த காலக்கெடு?

தமிழகத்தைப் பொறுத்தவரை இதுவரை இருந்த அரசியல் கட்சிகள், அரசுகள் ஊழல் பட்டியலை வெளியிட்டது கிடையாது. ஒரு ஆட்சி போய் இன்னொரு ஆட்சி வரும். அவர்கள் சொல்லியதன் அடிப்படையில் வன்மத்தோடு ரெய்டு நடக்கும். ஆனால், தமிழக அரசியலை மாற்ற வேண்டும் என்பது எங்களின் முயற்சி. ஆளும்கட்சி தவறு செய்யும் போது நாம் அதுகுறித்து பேசிவிட்டு போவதைவிட, அந்த கட்சியின் ஊழல் பட்டியலை எடுத்து மக்கள் மன்றத்தின் முன் வைக்க வேண்டும் என நினைக்கிறோம். இதன் மூலம், ஆளும்கட்சி தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என கருதுகிறோம்.

ஏனெனில், அவர்கள் சுருட்டுவது மக்களின் வரிப்பணம். ஆளும்கட்சியினர் மட்டுமின்றி அதிகாரிகளும் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்கள். அதற்காகத் தான் பாஜக முதலில் இரண்டு அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடப் போகிறது. எதற்கு இதற்கு ஒரு வார காலம் என கேட்கிறீர்கள். இப்போது நாங்கள் ஆரம்பிப்பதை நிறுத்தப்போவதில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகள் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வந்து கொண்டேயிருக்கும்.

தமிழகத்தில் எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ஆனால், பாஜகவுக்கு சப்ஸ்டிடியூட் போலவே செயல்படுகிறதே அதிமுக?

எங்களின் தோழமைக்கட்சி அதிமுக. அண்ணன் எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராக சட்டப்பேரவையில் அவர் பணியைச் செய்து கொண்டிருக்கிறார். அதேசமயத்தில் பாஜக சார்பில் வலிமையான அரசியல் நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். திமுகவின் தாக்குதல் எங்கள் மீது மட்டும் தான் இருக்கிறது. பொய்யைச் சொல்லித் தான் திமுக காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி கொடுப்பது மட்டுமல்ல, திமுகவை கேள்வியும் கேட்க வேண்டும் என்பது தான் எங்கள் அரசியல் களமாய் மாறியிருக்கிறது. பாஜக தொண்டர்கள் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை பாஜக மீது பொய்யான பிம்பத்தை திமுக வைத்து வந்தது. அதை நாங்கள் முறியடித்து திமுக செய்யக்கூடிய தவறுகளை மக்கள் மன்றத்தில் சுட்டிக்காட்டுகிறோம். திமுக தன் பிரதான எதிரியாக கருதுவது பாஜகவைத் தான். அதனால் அதற்கு நாங்கள் பதிலடி கொடுத்துத்தானே ஆக வேண்டும்?

இன்னும் 750 நாட்கள் தான் திமுக அரசு இருக்கும் என்று கூறியுள்ளீர்களே… அதற்குள் என்ன நடக்கப் போகிறது?

தமிழகத்தில் 2024-ல் பாஜக 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்ற பிறகு, திமுக அரசில் இருந்தால்கூட மக்கள் மனதில் இருந்து அதிகாரத்தை இழந்திருக்கும். அதனால் தான் 750 நாட்கள் என்று சொன்னேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்து விடும். அப்போது திமுகவின் ஆட்சியின் மிச்சமிருக்கின்றன நாட்களில் அவர்கள் சும்மா தான் இருக்கப்போகிறார்கள்.

நூறாண்டுகளுக்கும் மேலாக திராவிட கருத்தியல் வேரூன்றி நிற்கும் தமிழகத்தில் 25 நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜகவால் வெற்றி பெறுவது சாத்தியமா?

திராவிடம் என திமுக சொல்வது சமூகநீதியைத் தான். எங்களை விட திமுக சமூகநீதியில் எந்த அளவிலும் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. பாஜகவில் எப்படிப்பட்ட அமைச்சர்களை வைத்துள்ளோம், எப்படிப்பட்ட தலைவர்களைக் கொண்டு வந்துள்ளோம், எப்படிப்பட்டவர்களை ப்ரமோட் செய்கிறோம், பத்மஸ்ரீ விருதை யார் யாருக்குக் கொடுத்துள்ளோம், அரசின் திட்டங்கள் யாரை நோக்கிப் போகிறது என பார்த்தாலே பாஜகவின் சமூகநீதியைப் புரிந்துகொள்ள முடியும்.

அடுத்ததாக, திராவிட அரசியலில் மிக முக்கியமாகச் சொல்வது தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதாகும். பாஜகவை பொறுத்தவரை இவற்றில் திமுகவிற்கு இம்மியளவுகூட குறையவில்லை. இவற்றை வைத்து திமுக இத்தனை காலம் அரசியலை கபடி போல விளையாடியிருக்கிறது. திமுகவைப் போல குடும்ப அரசியல் பாஜகவில் இல்லை. ஜனநாயகம் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படிப்பட்ட கட்சியாக பாஜக இருக்கிறது. ஆனால், திமுகவைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் குறுநில மன்னர்களாக மாறியுள்ளனர். இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, 21-ம் நூற்றாண்டில் உள்ள பட்டதாரி மாணவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, பாஜக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 25 இடங்களைக் கைப்பற்றும் என்ற பெரு நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

கன்னட 'அரபி' படத்தில் நடித்தது போல, தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளதா?

எனக்கும் நடிப்புக்கும் ரொம்ப தூரம். என்னுடைய படத்தை நான் தான் பார்க்க வேண்டும். 'அரபி' படம் காவல்துறையில் இருந்து ராஜினாமா செய்தவுடன் நான் நடித்தது. பாரா ஒலிம்பிக் நீச்சல் வீரரின் கதை அது. இந்தியாவின் நீச்சல் பயிற்சியாளராக இப்படத்தில் நடித்துள்ளேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in