‘யுவன் கருப்பு; நான் அண்டங்காக்கை கருப்பு!’: அண்ணாமலை பரபர பேட்டி

‘யுவன் கருப்பு; நான் அண்டங்காக்கை கருப்பு!’: அண்ணாமலை பரபர பேட்டி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்குப் பதிலளிக்கும் வகையில், ' கருப்பு திராவிடன்; பெருமை மிகு தமிழன் என்று கருப்பு உடையுடன் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா பதிவிட்டிருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ' யுவன் கருப்புதான்; நான் அண்டங்காக்கை கருப்பு' என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

" பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி செயல்பாடுகளைக் கண்டு அம்பேத்கரே பெருமைபடுவார்" என இசையமைப்பாளர் இளையராஜா ஒரு நூலுக்கு முன்னுரை எழுதியதாக கூறப்படுகிறது. இதற்கு இளையராஜாவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள்,தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பான விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில், இளையராஜாவின் மகனும், இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ' கருப்பு திராவிடன்; பெருமை மிகு தமிழன் என்று கருப்பு உடையுடன் தனது புகைப்படத்தை இன்று பதிவிட்டிருந்தார். சில நாட்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,' நானும் திராவிடன் தான்' என்று பேட்டியளித்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் இருந்த யுவன்சங்கர் ராஜாவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சென்னை போரூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர், “குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கும் மாநிலங்களைவை உறுப்பினர்களுக்கும், பாஜகவிற்கும் சம்பந்தம் இல்லை. அதைப் பற்றி நான் கருத்து சொல்ல முடியாது" என்றார். " இளையராஜா பாஜகவை சார்ந்தவர் அல்ல. எனவே, பாஜகவின் சார்பில் அவரை மாநிலங்களவை உறுப்பினராக்குவார்கள் என்று சொல்லமுடியாது. இளையராஜாவிற்கு எம்.பி பதவி கொடுத்து அடக்கி விட வேண்டாம். அவருக்கு பாரதரத்னா கொடுப்பது தான் பொருத்தமாக இருக்கும்" என்று கூறிய அண்ணாமலை, "இதுகுறித்து தேவைப்பட்டால் பாஜக தலைமைக்கு கடிதம் எழுத தமிழக பாஜக தயாராக உள்ளது" என்று கூறினார்.

" நீட் தேர்வு குறித்த ஏகே ராஜன் கமிட்டியின் அறிக்கையை ஏற்று கொள்ள முடியவில்லை. அதில் தொழில்நுட்ப குறைபாடுகள் உள்ளன. திருவாடுதுறை செல்லும் தமிழக ஆளுநருக்கு , திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு காட்டுவது தவறு. அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநரை மிரட்டுகிறார்கள். ஆளுநரைத் தடுத்து நிறுத்தினால், விளைவுகள் மோசமாக இருக்கும்" என்று அவர் கூறினார். " யுவன் சங்கர் ராஜாவை விட கருப்பு நான். நானும் கருப்பு திராவிடன் தான். எனக்கு சத்தியமாக இந்தி தெரியாது. அவர் கருப்பு தான், ஆனால் நான் அண்டங்காக்கை கருப்பு” என்று யுவனின் இன்ஸ்டாகிராம் பதிவிற்கு அண்ணாமலை பதிலளித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in