‘என்னை நீக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை’ -சீமானுக்கு எதிராக கொந்தளிக்கும் மாநில நிர்வாகி!

வெற்றிக்குமரன்
வெற்றிக்குமரன்

நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியும் சீமானின் தென்மண்டல தளபதியுமான வெற்றிகுமரன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், தன்னை நீக்கும் அதிகாரம் சீமானுக்கு இல்லை என வெற்றிகுமரன் அறிக்கை வெளியிட்டுள்ளது நாம் தமிழர் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீமானுடன் வெற்றிக்குமரன்
சீமானுடன் வெற்றிக்குமரன்

நாம் தமிழர் ஒரு இயக்கமாக இருந்து பின்னர் கட்சியாக உருமாறியது. நாம் தமிழர் இயக்கம், கட்சி என ஒவ்வொரு படிநிலையிலும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பக்க பலமாக இருந்தவர் வெற்றிக்குமரன். இதனாலேயே சீமானின் தென் மண்டல தளபதி என அவர் அடையாளப்படுத்தப்பட்டார்.

நாம் தமிழர் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில்- அதாவது சீமானுக்கு அடுத்த பதவியில் இருந்தவர் வெற்றிக்குமரன். கடந்த சில மாதங்களாக கட்சியிப் பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். அண்மையில் மதுரையில் கட்சி சீரமைப்பு பணிகளில் சீமான் பங்கேற்றபோதும் வெற்றிக்குமரன் பங்கேற்கவில்லை எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் காவிரி பிரச்சனையில் நாம் தமிழர் கட்சியினர் நேற்று தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்தில் தாம் மதுரையில் பங்கேற்பதாக வெற்றிக்குமரன் அறிவித்திருந்தார். ஆனால் போராட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக, வெற்றிக்குமரன் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில், வெற்றிக்குமரன் வெளியிட்டுள்ள கடிதத்தில், ‘’பதவிக்காகவும், இன்ன பிற சுகத்திற்காக காத்துக் கிடப்பவன் தான் காலில் விழுந்து கிடப்பான். நான் நல்லவன். நேர்மையானவன். யாரிடத்திலும் மண்டியிட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொண்டு மேற்கூறிய கேள்விகளுக்கு உங்களிடம் இருந்து வரும் பதிலுக்காக காத்திருக்கிறேன். இன்னொரு முக்கியமான விஷயம். எல்லாம் தெரிந்த உங்களுக்கு நம் கட்சியின் விதிகள் தெரியாதது கவலை அளிக்கிறது.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருக்கும் நாம் தமிழர் கட்சி விதிமுறைகளின்படி, என்னை நீக்குவதற்கு உங்களுக்கு அதிகாரம் கிடையாது. மாநிலப் பொறுப்பில் இருக்கும் என்னை பொதுக்குழுவை கூட்டித்தான் நீக்க முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே நாம் தமிழராகவே தொடர்கிறேன்’’ என அந்தக் கடிததத்தில் வெற்றிக்குமரன் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in