காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக துணிச்சலான முடிவை அதிமுக எடுத்தது. ஆனால் திமுக அவ்வாறு இல்லை என ஈபிஎஸ் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், ’துணிச்சலை எங்களுக்கு நீங்கள் சொல்ல வேண்டாம்’ என ஆவேசமாக கூறினார்.
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ், ‘’காவிரி நீரை பெறுவதற்காக பல வழக்குகள் தொடுக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்று தடை ஆணை பெற்றார்கள். உச்சநீதிமன்றத் தீர்ப்புபடி கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும். நமக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா உரிய முறையில் திறந்து விடுவதுதான் நியாயமானது.
உச்சநீதிமன்ற தீர்ப்புபடி கர்நாடகா அரசு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற வார்த்தையை தீர்மானத்தில் இணைக்க வேண்டும். பயிர்கள் கருகிவிட்டது. அதற்கு யார் பொறுப்பு. திமுக எம்பிக்கள் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை. இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றபோது நட்பின் அடிப்படையில் கேட்டிருக்கலாம். நாங்கள் மத்திய அரசு மீது அவதூறு வழக்கு போட்டோம். ஆனால் எங்களிடம் இருந்த துணிச்சல் உங்களிடம் இல்லை’’ என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர், ’’எங்கள் துணிச்சல் பற்றி நீங்கள் பேச வேண்டாம். உங்கள் துணிச்சல் என்னவென்று எங்களுக்கு தெரியும். திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி அவையை முடக்கிய ஆதாரம் எங்களிடம் உள்ளது. அதனால் ஏதோ வாய்க்கு வந்ததெல்லாம் பேசக்கூடாது’’ என்றார்.