
’’அழகு, கம்பீரம், அறிவு, துணிச்சல், ஆளுமை என ஜெயலலிதா போன்று இன்னொரு பெண்மணியை பார்க்க முடியாது’’ என நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘’மதிப்புக்குரிய அமரர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களுடைய 75-வது பிறந்தநாளில் அவர் இப்போது நம்மோடு இல்லையே என்ற வருத்தத்தோட அவரை நினைவூட்டி கொள்கிறேன்.
ஜெயலலிதா போன்று இன்னொரு பெண்மணியை பார்க்க முடியாது. அவரது அழகு, கம்பீரம், ஆளுமை, அறிவு, துணிச்சல் யாருக்கும் வராது. புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு புரட்சித்தலைவர் என பெயர் வந்தது அனைவருக்கும் தெரியும். தனி ஒரு நடிகனாக இருந்து ஒரு மாநிலத்தில் கட்சி ஆரம்பித்து, ஆட்சியை பிடித்து முதலமைச்சர் ஆனார். மிகப்பெரிய புரட்சி.
அவர் மறைவுக்கு பின் அந்த கட்சி பிளவுப்பட்டப் போது, அந்த கட்சியில் திறமையான தலைவர்கள் இருந்த போது தனி பெண்மணியாக பிளவுப்பட்ட கட்சியை ஒன்றாக்கி இன்னும் பலமாக்கி, பெரிய கட்சியாக்கி தமிழ்நாட்டை ஆண்டவர். அதனால்தான் அவர் புரட்சித்தலைவி.
இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் ஜெயலலிதாவை மதித்தார்கள். அவருடைய திறமையைப் பார்த்து பிரமித்தார்கள். ஒரு காலக்கட்டத்தில் அவருக்கும் எனக்கு மனதஸ்தாபம். அவருக்கு எதிராக நான் பேச வேண்டிய காலக்கட்டம் ஏற்பட்டது. ஆனால் அதனையெல்லாம் மறந்து என்னுடைய பெண் கல்யாணத்திற்கு வந்து நடத்திக் கொடுத்தார். அவ்வளவு பெரிய கருணை உள்ளம் கொண்டவர். அவருடைய நாமம் வாழ்க’’ என குறிப்பிட்டுள்ளார்.