`நீதிமன்றத்தை நீங்கள் நிர்ப்பந்திக்க முடியாது'- ஓபிஎஸ்சுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி `குட்டு'

`நீதிமன்றத்தை நீங்கள் நிர்ப்பந்திக்க முடியாது'- ஓபிஎஸ்சுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி `குட்டு'

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரிய வழக்கை உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்திய நிலையில், நீதிமன்றத்தை நிர்பந்திக்க முடியாது என்று குட்டு வைத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார்.

சென்னை வானகரத்தில் வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தனித்தனியே மனு தாக்கல் செய்துள்ளனர். ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ள மனுவில், "கட்சி விதிப்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட அதிகாரமுள்ளது. மற்ற யாருக்கும் அந்த அதிகாரம் இல்லை. எனவே ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்துள்ள மனுவில், "பொதுக்குழுவை கூட்ட 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அந்த விதிகளை பின்பற்றாமல், பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், "ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவைக் கூட்டலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், வேறு நிவாரணங்களுக்காக உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று தெரிவித்துள்ளது” என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "வேறு என்ன நிவாரணம் கோரியிருக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். அப்போது, ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், "பொதுக்குழுவுக்கு தடை கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை நாளை தாக்கல் செய்கிறோம். எனவே விசாரணையை நாளைக்கு தள்ளிவைக்க வேண்டும் என வாதிட்டார். அப்போது நீதிபதிகள், "உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென நீதிமன்றத்தை நிர்பந்திக்க முடியாது" என்றார்.

அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், "இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும். கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது" என்றார். இதையடுத்து நீதிபதி, உச்ச நீதிமன்றம் உத்தரவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in