உ.பி முதல்வராக நாளை பதவியேற்கும் யோகி!

துணை முதல்வராக 4 பேர் பதவியேற்க வாய்ப்பு
உ.பி முதல்வராக நாளை பதவியேற்கும் யோகி!

உத்தர பிரதேச முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் யோகி ஆதித்யநாத்தின் பதவியேற்பு விழா, லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகனா கிரிக்கெட் மைதானத்தில் நாளை மாலை 4 மணிக்கு நடக்கிறது.

பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள். பாலிவுட் நட்சத்திரங்களான அக்‌ஷய் குமார், கங்கனா ரனாவத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோரும் பங்கேற்கிறார்கள். சமீபத்தில் வெளியாகி, பாஜகவினரின் பாராட்டுகளைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தில் பணிபுரிந்த நடிகர் அனுபம் கெர், இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

பதவியேற்பு விழாவுக்காக, மைதானம் முழு வீச்சில் தயாராகியிருக்கிறது. மைதானத்தின் அருகில் இருக்கும் பகுதிகளிலும், சாலைகளின் இருபுறமும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. சுவர்களுக்குப் புதிதாக வண்ணம் பூசப்பட்டு பொலிவுடன் காட்சியளிக்கின்றன.

தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்கும் யோகி ஆதித்யநாத், முன்னதாக அமைச்சரவை குறித்து ஜே.பி.நட்டா, அமித் ஷா உள்ளிட்ட பாஜக முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கியிருக்கும் கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அமித் ஷா உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

சென்ற முறை கேசவ் பிரசாத் மவுரியா, டாக்டர் தினேஷ் சர்மா ஆகிய இருவரும் துணை முதல்வர்களாகப் பதவிவகித்தனர். இந்த முறை 4 துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கேசவ் பிரசாத் மவுரியா, இந்தத் தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் அவர் மீண்டும் அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருடன் டாக்டர் தினேஷ் சர்மா, பேபி ராணி மவுரியா, பிரிஜேஷ் பாடக் ஆகியோரும் துணை முதல்வராவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in