
நேற்று வரை ஓபிஎஸ் பக்கம் இருந்த அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் இன்று ஈபிஎஸ் பக்கம் சென்றுவிட்டார். ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவு குறைந்துவருவதால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், ஒற்றைத் தலைமை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒற்றைத் தலைமையை ஏற்க வேண்டும் என்று ஈபிஎஸ்சுக்கு ஆதரவு குவிந்து வருகிறது. அதே நேரத்தில் ஓபிஎஸ்சுக்கு ஆதரவு குறைவாகத்தான் இருக்கிறது. ஓபிஎஸ், சசிகலா தரப்பு ஆதரவாளர் என ஈபிஎஸ் தரப்பு பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகிறது. ஓபிஎஸ்சுக்கு 15 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இருப்பதாக தகவல் வெளியானது. தற்போது, அவருக்கு 6 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ் தரப்பில் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இவர்கள் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தபோது அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் உடனிருந்தார். இதனால், தன்னை ஓபிஎஸ் ஆதரவாளர் என பகிரங்கமாக காட்டிக் கொண்டார் மைத்ரேயன். இந்நிலையில், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்ஸை இன்று திடீரென சந்தித்து ஆதரவு தெரிவித்தார் மைத்ரேயன். இதேபோல், தென்சென்னை தெற்குகிழக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக் தனது ஆதரவாளர்களடன் ஈபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதன் மூலம் பிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 6 ஆக குறைந்துள்ளது.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மைத்ரேயன், "95 சதவீதம் பேர் எடப்பாடி பழனிச்சாமியின் பக்கம் நிற்கின்றனர். அதில் நான் என்னையும் இணைத்துக் கொண்டுள்ளேன் சசிகலாவை பதவியிலிருந்து நீக்கி, ஒருங்கிணைப்பாளர்களுக்கு எப்படி அதிகாரத்தை பொதுக்குழு கொடுத்ததோ, அதேபோல தற்போதும் கொடுக்கலாம்" என்றார்.