நேற்று கே.எஸ்.அழகிரி ஆதரவு; இன்று செல்வப்பெருந்தகை எதிர்ப்பு: 10% இடஒதுக்கீட்டில் காங்கிரஸ் நிலைதான் என்ன?

நேற்று கே.எஸ்.அழகிரி ஆதரவு; இன்று செல்வப்பெருந்தகை எதிர்ப்பு: 10% இடஒதுக்கீட்டில் காங்கிரஸ் நிலைதான் என்ன?

உயர்சாதி ஏழைகளுக்கு 10 இடஒதுக்கீட்டை தமிழக காங்கிரஸ் இதயப்பூர்வமாக ஆதரிக்கிறது என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருந்த நிலையில், இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இடஒதுக்கீட்டை எதிர்ப்பதாக அக்கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று கடந்த 8-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து. இந்தத் தீர்ப்பை பாஜக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றன. இதே நேரத்தில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், "பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்ப்பது என்பதும் சமூக நீதியாகாது. ஏனெனில், ஐந்தாயிரம் ஆண்டுகாலமாக சிரமப்பட்ட பெரும்பகுதி சமுதாயத்துக்கு சமூகநீதி வழங்கப்படவில்லை. இப்பொழுது எங்களுக்கும் வழங்குங்கள் என்று கேட்பது சரியானதாக இருக்கும். ஆனால், எங்களைப் போலவே பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினரும் சங்கடப்பட வேண்டும் என்று கூறுவது சமூகநீதியாகாது. சமூகநீதி என்பது மனிதகுலத்திற்கே பொதுவானதேயொழிய எந்தவொரு தரப்பிற்கும் அது உரியதல்ல. எனவே, 10 சதவீத இடஒதுக்கீடு சரியான நடவடிக்கை என கருதி, தமிழக காங்கிரஸ் அதனை இதயப்பூர்வமாக வரவேற்கிறது" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினையடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்திட சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி இந்த கூட்டத்தில் பங்கேற்றது. கூட்டத்தில் காங்கிரஸ் சார்பாக பங்கேற்ற எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்க்கும் தீர்மானத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும். சமூக நீதி நிலைநாட்ட தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்" என்று தெரிவித்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது சரி என்று அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதற்கு எதிராக காங்கிரஸ் நிலைப்பாடு எடுத்திருக்கிறது. இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன? என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in