
எடியூரப்பாவின் மகன் விஜேந்திரா தான் கர்நாடகா மாநிலத்தின் அடுத்த முதல்வராக வேண்டும் என்று மக்கள் விரும்புவதால் அவருக்குப் பசுவை பரிசாக அளிக்கிறேன் என்று கட்சி நிர்வாகி பசுவை பரிசளிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் பாஜக நிர்வாகி ஒருவர், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜேந்திராவுக்கு பசு ஒன்றை இன்று பரிசாக வழங்கினார். கர்நாடகா மாநிலத்திற்கு விஜேந்திரா தான், அடுத்த முதல்வராக வேண்டும் என மக்கள் விரும்புவதால் இந்த பசுவை அவருக்குப் பரிசளித்தேன் என்று பாஜக கட்சி நிர்வாகி கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடகாவில் வருகிற மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதுவரை பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. முன்னாள் முதல்வராக எடியூரப்பா இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார். ஏனெனில், கர்நாடக முதல்வராக அவர் நான்கு முறை பதவி வகித்துள்ளார். முதன் முதலில் 2007 நவம்பர் மாதம் முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். ஆனால், அவரது பதவிக்காலம் 7 நாட்கள் மட்டுமே நீடித்தது. இதற்கு அடுத்து 2008 மே மாதம் இரண்டாவது முறையாக கர்நாடகாவின் முதல்வராக பதவியேற்றார். அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு காரணமாக 2011 ஜூலையில் பதவியை அவர் ராஜினாமா செய்தார். அவர் மீண்டும் 2018-ல் கர்நாடக முதல்வராக மீண்டும் பதவியேற்றார். ஆனால், இந்த முறை அவரது அரசு இரண்டரை நாட்கள் மட்டுமே நீடித்தது. இதையடுத்து நான்காவது முறையாக, 2019 ஜூலையில் எடியூப்பரா முதல்வராகப் பொறுப்பேற்றார்.
இதன் தொடர்ச்சியாக தலைமை மாற்றம் காரணமாக, பாஜகவால் கர்நாடகாவின் அடுத்த முதல்வராக பசவராஜ் பொம்மை நியமிக்கப்பட்டார். தற்போது கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருவதாக பாஜக உயர்மட்ட தலைமை மகிழ்ச்சியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் எடியூரப்பாவின் மகன் விஜேந்திராவை முதல்வராக்க வேண்டும் என்று கட்சிக்குள் கலகக்குரல் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த 2018 சட்டப்பேரவைத் தொகுதியில் மைசூரில் உள்ள வருணா தொகுதியில் போட்டியிட விஜேந்திரா விரும்பினார். ஆனால், அவருக்குப் போட்டியிட வாய்ப்பு கிட்டவில்லை. இதன் காரணமாக அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.