‘பப்பு’ இப்போ சூப்பரப்பு!

ராகுல் நடைபயணமும்... காத்திருக்கும் அரசியல் திருப்பங்களும்!
‘பப்பு’ இப்போ சூப்பரப்பு!

கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் நடைபயணம் தொடங்கியபோது பாஜக பரிகாசம் செய்தது. ஆனால், 100 நாட்களை கடந்த ராகுல் காந்தியின் நடைபயணம், அண்மையில் டில்லிக்குள் நுழைந்தபோது தலைநகர் குலுங்கியது. பரிகாசம் போய் பதற்றத்தில் ஆழ்ந்திருக்கும் பாஜக, கரோனா கட்டுப்பாடுகள் முதல் ராகுலுக்கான பாதுகாப்பு நிமித்தம் வரை நடைபயணத்துக்கு முட்டுக்கட்டை போடப் பார்க்கிறது.

பாஜக மட்டுமல்ல... காங்கிரஸ் கட்சியினரே எதிர்பார்த்திராத மாற்றங்கள் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் வெளிப்பட்டிருக்கின்றன. அதிகாரத்தின் ருசி இழந்ததில் கரைந்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு, மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்ற நம்பிக்கையும் துளிர்த்திருக்கிறது.

‘நாட்டு மக்கள் மத்தியில் ஒரு நடைபயணம் மூலமாக மாற்றங்களை விதைத்துவிட முடியுமா? கலகலத்து கிடக்கும் காங்கிரஸ் கட்சி கட்டியெழுப்பப்படுமா? அடுத்த அரை நூற்றாண்டுக்கு எங்கள் ஆட்சிதான்’ என்ற பாஜகவின் இறுமாப்பில் விரிசல் விழுகிறதா? ராகுலின் அடுத்தக்கட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும்? பதற்ற பாஜக மற்றும் நம்பிக்கை துளிர்க்கும் காங்கிரஸார் மத்தியில், தொடரும் ராகுல் நடைபயணத்தில் குறிப்பிடத்தக்க அரசியல் திருப்பம் எதிர்படுமா..? பார்ப்போம்!

யாத்திரைகளும் அரசியல் சாத்தியங்களும்

“நடைபயணத்தின் மூலம் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறாராம்...” என்று குஜராத் தேர்தல் பிரச்சார களத்தில் ராகுல் காந்தியை அமித் ஷா கேலி செய்தார். ஆனால், பாஜக உட்பட ’யாத்திரை’ என்ற வியூகத்தின் மூலமாக கட்சி மற்றும் ஆட்சியின் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டவர்கள் ஏராளம் இருக்கின்றனர்.

ஆன்மிக யாத்திரைகளுக்கு பழகிய தேசத்தில், மகாத்மா காந்தி முன்னெடுத்த பாத யாத்திரைகள் பிரசித்தி பெற்றவை. ’தண்டி யாத்திரை’க்காக1930-ல் காந்தியின் பாதம் பின்பற்றி 385 கிமீ தொலைவுக்கு தேசம் நடைபோட்டது ஓர் உதாரணம். அப்படி திரண்ட மக்கள் வெள்ளமும், அவர்களின் உணர்வு பெருக்கும் நாட்டு விடுதலைக்கான போராட்டத்தின் இறுதிச்சுற்றுக்கு எளிதில் மடை மாற்றப்பட்டது. அங்கே தொடங்கி அதன் பிறகு நாடு கண்ட பாதயாத்திரைகள் பலவும் நம்பியோரை கைவிட்டதில்லை.

தண்டி யாத்திரை
தண்டி யாத்திரை

காந்திய வழிவந்த வினோபா பாவே, தனது பூமிதான இயக்கத்துக்காக தேசம் நெடுக பத்தாண்டுக்கும் மேலாக பல்லாயிரம் கிமீ நடந்தார். தொடர்ந்து, தேசம் தழுவியதாகவும், பிராந்திய அளவிலும் வகைதொகையாய் பாத யாத்திரைகள் நீண்டிருக்கின்றன. முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் நாடு தழுவிய 6 மாத நடைபயணம் முதல் பாலிவுட் நடிகர் சுனில்தத்தின் பயணம் பஞ்சாப்புக்குள் முடிந்தது வரை அவை வேறுபடும்.

ஆந்திராவில் என்.டி.ராமராவ், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி போன்றோர் முதல்வராக அவர்கள் மேற்கொண்ட யாத்திரைகளே காரணமாயின. மத்திய பிரதேசத்தில் திக் விஜய் சிங் தொடங்கிய நர்மதா யாத்திரையின் முடிவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தபோதும், முதல்வர் பதவியில் கட்சி தலைமை கமல்நாத்தை அமர்த்தியது.

அத்வானி ரத யாத்திரையில் மோடி
அத்வானி ரத யாத்திரையில் மோடி

பாஜகவுக்கு பிரபல்யம் சேர்த்த ரத யாத்திரை

அத்வானி முன்னெடுத்த சோம்நாத் முதல் அயோத்யா வரையிலான ரத யாத்திரையே பாஜகவின் எழுச்சிக்கு அச்சாரமிட்டது. அரசியலில் உரிய விகிதத்தில் மதத்தைக் கலக்கும் உத்திகளையும், யாத்திரையின் முடிவில் கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தும் சூத்திரத்தையும் பாஜக கண்டடைந்தது. யாத்திரையின் வழியெங்கும் மூண்ட கலவரங்கள் பாஜகவுக்கான தொண்டர்களை ஒருங்கிணைத்தன.

அத்வானியின் அடுத்த ரத யாத்திரை வாராணசியில் தொடங்கி 1992, டிச.2 அன்று அயோத்தியில் முடிந்தபோது, பாபர் மசூதி இடிக்கப்பட்டு பாஜக விஸ்வரூபம் கண்டது. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷியின் ரத யாத்திரைகளில் களப்பணியாற்றிய வகையில், பாஜக தலைமையிடத்து கவனம் பெற்று, அதன் அடிப்படையில் தனது அரசியல் எதிர்காலத்தை செதுக்கிக்கொண்டவர் மோடி! இந்த வகையில் இன்றைய மோடி சகாப்தத்தின் பின்னேயும் யாத்திரை புகழ் ஒளிந்திருக்கிறது.

ராகுல் யாத்திரையும், பாஜக நித்திரையும்

கடந்த 8 ஆண்டுகளாக பாஜகவுக்கு எதிரான போராட்ட களங்கள் பல இருந்தும் அவற்றை அலட்சியமாக காங்கிரஸ் தவிர்த்து வந்தது. விவசாயிகள் போராட்டம் முதல் விலைவாசி உயர்வு வரை அறிக்கைகளுக்கு அப்பால், காங்கிரஸ் கள்ள மவுனமே சாதித்தது. நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா - ராகுல் காந்திகளை அமலாக்கத்துறை நெருக்கியபோது, காங்கிரஸ் கட்சியினர் வீறுகொண்டு வீதிக்கு வந்தனர். அப்போதுதான் ராகுல் வட்டாரத்தில் பாத யாத்திரை என்பது பெரிதாய் பரிசீலிக்கப்பட்டது.

செப்.7 அன்று ராகுலின் நடைபயணத்தையொட்டி, கன்னியாகுமரியில் பகடி செய்த பாஜக, கேரளத்தின் எழுச்சிக்குப் பிறகு திரும்பிப் பார்த்தது. தெலங்கானாவை தொடர்ந்து கர்நாடகத்திலும் ராகுல் சூறாவளி மையம் கொண்டபோது எதிர்வினையாற்றத் தொடங்கியது. மராட்டிய மண்ணில் சாவர்க்கர் சர்ச்சையின்போது திருப்பியடிக்க ஆரம்பித்தது. காங்கிரஸ் ஆட்சியிலிருக்கும் ராஜஸ்தான் குலுங்கியபோது, பாஜகவினர் விழித்துக்கொண்டனர்.

12 மாநிலங்கள், 150 நாட்கள், சுமார் 3,750 கிமீ என ராகுலின் நடப்பு நடைபயணம், ஜனவரி 26 அன்று ஸ்ரீநகரில் நிறைவடைய இருக்கிறது. ஆனபோதும், அதன் அடுத்தடுத்த சீஸன்கள் தொடரும் என காங்கிரஸ் முடிவெடுத்ததில் பாஜக பதறியது. மேலும், பெண்களைக் குறிவைத்து காங்கிரஸின் தேசிய பொதுச்செயலர் பிரியங்கா காந்தி தலைமையிலான தனி பாத யாத்திரை, மாநிலங்களின் தலைநகர்கள் எங்கும் நடத்தப்பட இருப்பதும் பாஜகவின் பதற்றத்தைக் கூட்டியது. இதனால் பாத யாத்திரை குறித்தான கிண்டல்களை ஒதுக்கிவிட்டு, அதற்கான சாத்தியங்களை பாஜகவினர் ஆலோசிக்க ஆரம்பித்துள்ளனர். முந்திக்கொண்டவராக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது நடைபயணத்துக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

’பப்பு’ இப்போ ’சூப்பரப்பு’!

அதிகாலையில் உதிக்கும் சூரியனோடு ராகுல் காந்தி குழுவினர் பயணத்தை தொடங்கி விடுகின்றனர். அதனை ’காலை நடைபயிற்சி’ என்றே பாஜகவும் தொடக்கத்தில் விமர்சித்தது. இடையில் இளைப்பாறலுக்கு பின்னர் மீண்டும் மாலையில் நடக்கிறார்கள். இப்படி தினத்துக்கு 20 முதல் 25 கிமீ கடக்கிறார்கள். வழியெங்கும் ஆரவாரமான வரவேற்பு கிடைக்கிறது. கட்சியினர், சாமானியர் மட்டுமன்றி திரைக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், எழுத்தாளர்கள், மாற்று கட்சியினர், அறிவு ஜீவிகள் என பல்துறைகளை சேர்ந்தவர்கள் ஆங்காங்கே உடன் சேர்கிறார்கள். சில இடங்களில் சேர்க்கவைக்கப்படுகிறார்கள்.

செல்ஃபி மோகத்தில் எட்டிப்பார்க்கும் இளைஞர்களில் சிலர் அப்படியே சில கிமீ-களுக்கு ஜோதியில் ஐக்கியமாகிறார்கள். ’ராகுல்... ராகுல்...’ என்று எவரேனும் குரல் எழுப்பினால் செவிமெடுக்கிறார். செல்ஃபி எடுத்துக்கொள்கிறார். கிரிக்கெட், கால்பந்து விளையாடுகிறார். கராத்தே மாணவனின் நுணுக்கங்களை ஒரு மாஸ்டராக திருத்துகிறார். எம்ஜிஆர் போல தாய்மார்களை அரவணைக்கிறார். உடன் ஓடிவரும் குழந்தைகளை, கிராமத்து தகப்பனாக கழுத்தில் இருத்திக்கொண்டு விரைகிறார். மழையோ வெயிலோ குளிரோ ஒதுக்கப்பட்ட இடத்தில் காத்திருப்போரை ஏமாற்றாது மைக் பிடிக்கிறார்.

ஆக, ’பப்பு’ என்று பாஜகவும், அதன் ஊதுகுழல்களான சில தொலைக்காட்சிகளும் மக்கள் மனதில் வரைந்து வைத்திருந்த கேலிக்குரிய பிம்பம் திருத்தி எழுதப்படுகிறது. பத்திரிகையாளர்கள் மட்டுமன்றி ஜனத்திரளில் எவரும் சந்திக்க வாய்ப்பான ராகுல் காந்தியின் எளிமையும், எந்த தலைப்பிலும் தன்னுடைய கருத்தை உடனுக்குடன் பதிவு செய்யும் பாங்கும் நடப்பு அரசியலில் அரிதானது.

தன்னுடைய நடைபயணத்தை தேர்தல் அரசியலுக்கான குறிக்கோளாக அன்றி, நாட்டில் அதிகரிக்கும் வெறுப்பு, அச்சம், வன்முறை ஆகியவற்றுக்கு எதிரான நகர்வாக, சமூக அரசியலுக்கான நோக்கத்துடன் ராகுல் முன்னெடுப்பதும் கவனம் ஈர்க்கிறது. செல்லும் இடமெல்லாம் நாட்டை பிளவுபடுத்தும் அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகளை பேசுகிறார். விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட நடைமுறை நிதர்சனங்களை பூசிமெழுகி, ஒற்றை இந்தியா, மதம், ஆன்மிகம் என நாட்டு மக்களை ஏமாற்றும் போக்குக்கு எதிராக விளாசுகிறார்.

நடைபயணத்தை வேடிக்கை பார்க்கும் பாஜகவினருக்கு பறக்கும் முத்தங்கள் பரிசளிக்கிறார். பாஜக சாடிய ’சதாம் உசேன்’ தாடியும், பாத யாத்திரை தொடங்கியதிலிருந்தே அதே நிறத்திலான கால்சராய் மற்றும் டீ-ஷர்ட் உடன் வலம் வருகிறார். டெல்லியின் கொல்லும் குளிரில் கம்பளியாடை இன்றி வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தி வந்தார். ’ராகுலுக்கு ஏன் குளிரவில்லை?’ என்று கேள்வியில் பாஜகவினர் குளிர் காய்ச்சல் கண்டனர். ’குளிரவில்லையா என்ற கேள்வியை ஏன் ஏழைகளிடம் கேட்கவில்லை?’ என்ற ராகுலின் கேள்வி, பிட்டுக்கு மண் சுமந்தவர் பெற்ற பிரம்படியாய் சகலமானோரையும் உலுக்கி இருக்கிறது.

’காங்கிரஸ்’ ஒற்றுமை பயணம்

உத்திரபிரதேச காங்கிரஸ் தலைவர் பூபேந்திர சிங் சௌத்ரி, “இது இந்தியாவுக்கானது மட்டுமல்ல; காங்கிரஸ் கட்சிக்கான ஒற்றுமை பயணமும் கூட!” என்று வர்ணித்தார். தொண்டர்களை விட தலைவர்களை அதிகம் கொண்ட கட்சியாக வர்ணிக்கப்படும் காங்கிரஸில், ஜனநாயகம் என்ற போர்வையில் மூலைதோறும் குழாயடி சண்டைகள் அதிகம். காங்கிரஸ் தலைமைக்கு எதிராக போர்க்கொடி பிடித்த 23 சீனியர்களுக்கு அப்பால், மாநிலந்தோறும் நடந்தேறும் குடுமிபிடிச் சண்டைகளை பஞ்சாயத்து செய்வதற்கே காங்கிரஸ் தலைமைக்கு தாவு தீர்ந்துவிடும். ஆனால், அவர்கள் எவரையும் பொருட்படுத்தாத ராகுல் காந்தி, தனது ஒற்றுமை பயணத்தின் ஊடாக இளம் தலைவர்களை அடையாளம் கண்டு வருகிறார். இவர்களைக் கொண்டு கட்சியின் உள்கட்டமைப்பில் விரைவில் பெரும் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

கட்சித் தலைவராக பொறுப்பேற்க விடாப்பிடியாய் மறுத்ததோடு, அப்பதவிக்கு தேர்வான கார்கேக்கு முழுமனதாய் ஒத்துழைப்பு நல்குவதும் ராகுலை தனித்துக் காட்டுகிறது. பொறுப்பில் கார்கே போன்ற சீனியரை அமரவைத்து, களத்தில் ராகுல் இறங்கியிருப்பதும் கட்சியின் இளம் தலைமுறையினருக்கு உற்சாகம் தந்திருக்கிறது.

இந்திரா, சோனியா மற்றும் ராகுல்
இந்திரா, சோனியா மற்றும் ராகுல்

இந்திரா முதல் சோனியா வரை ’காந்தி’ குடும்பத்தினர் பலரும், கட்சி தலைமையின் வெற்றிடத்தை நிரப்புவதற்கான வற்புறுத்தலில் வந்தவர்கள். ராகுலும் அப்படி தென்பட்டாலும், ஆட்சியில் இல்லாதபோதும் கட்சியின் மீட்சிக்காக களமிறங்கியதில் முந்தைய காந்திகளை விஞ்சியிருக்கிறார். இப்படி கடந்த 60 வருடங்களில் தன்னிச்சையாய் கட்சிக்காக மெனக்கிட்டது ராகுல் ’காந்தி’ மட்டுமே என்று அவரது ஆதரவாளர்கள் சிலாகிக்கின்றனர். மேலும், காங்கிரஸ் கட்சியினருக்கு நேரு குடும்பத்தை விட்டால் வேறு போக்கிடம் இல்லை என்பதால், ராகுலுக்கு என தனி ஒளிவட்டத்தை மீட்டதில் கட்சி தலைவர்களுக்கும் மகிழ்ச்சியே.

நடைபயணத்தின் அரசியல் திருப்பங்கள்

பாஜக முன்வைக்கும் சித்தாந்தங்களுக்கு முற்றிலும் எதிர் திசையில் தனது அரசியல் பயணத்தை தீர்மானிக்கும் ராகுல், பாஜகவை இயக்கும் ஆர்எஸ்எஸ் தத்துவார்த்தங்களின் பாணியில், காங்கிரஸ் கட்சிக்கும் தனித்துவ சித்தாந்தங்கள் அவசியம் என கருதுகிறார். காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான கொள்கைகள் நாடு விடுதலை அடைந்ததுமே நீர்த்துப் போய்விட்டன. தற்போது காங்கிரஸ் கட்சிக்கான புதிய நூற்றாண்டின் தத்துவார்த்தங்களை வடிவமைப்பது அவசியமாகிறது. இந்தியா எனும் பன்மைத்துவம் வாய்ந்த தேசத்தின் தனிப்பட்ட அடையாளங்கள் மற்றும் தேவைகளை முன்வைத்து இவை செதுக்கப்பட்டும் வருகின்றன. பாஜகவினருக்கு முத்தங்களை பறக்கவிட்டது முதல், வாஜ்பாய்க்கு நேரில் நினைவஞ்சலி செலுத்தியது வரை ராகுல் காட்டிய வித்தியாசங்களும் இவற்றில் சேரும்.

ஆனால், ராகுல் பேச்சைக் கேட்கும்போது, இவருக்கு உண்மையிலேயே காங்கிரஸை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தும் எண்ணமெல்லாம் இருக்கிறதா என்ற சந்தேகம் காங்கிரசாருக்கே எழும். ’நாமிருவர் நமக்கிருவர்’ என அம்பானி - அதானிக்காக மெனக்கிடும் மோடி - அமித் ஷா மீதான ராகுலின் தாக்குதல் இதற்கு முந்தைய காங்கிரஸ் காணாதது. இத்தனைக்கும் காங்கிரஸ் ஆட்சியின் ஆசியோடே அம்பானிகள் இத்தனை உயரம் தொட்டிருக்கின்றனர். ஊடுபாவாக அரசியல் மற்றும் அதிகார மட்டங்களில் ஆதிக்கம் செலுத்தும் இந்த குஜராத் பண முதலைகளை நேரடியாக எதிர்த்து ராகுல் அரசியல் செய்வதும் ஆச்சரியத்துக்கு உரியது.

அடித்து ஆடலாமா?

தெலங்கானா முதல் திரிபுரா வரை 2013-ல் 9 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. அவற்றுக்கான ஆயத்தங்களும், அந்த தேர்தல்களின் முடிவை ஒட்டியும், 2024-ன் மக்களவை தேர்தல் வியூகங்களை அரசியல் கட்சிகள் வடிவமைக்கும். ராகுலின் நகர்வுகள் எதுவும் தேர்தல் அரசியலை நோக்கியதாக தெரியவில்லை. சமூக அரசியலுக்கான மாற்றத்துக்காகவே மெனக்கிடுவதாக காட்சியளிக்கிறார். சமூக மாற்றம் நிகழாது தேர்தலை நோக்கிய பாதையில் காங்கிரஸ் சுகப்படாது என்பதையும் அறிந்து வைத்திருக்கிறார்.

அதுவரை உங்களால் முடிந்ததை நடத்துங்கள் பார்த்துவிடுவோம் என்று பாஜக ஆட்சியாளர்களுக்கு எதிராக நெஞ்சு நிமிர்த்தி நிற்கிறார். கட்சி கரைவதோ, சந்தர்ப்பவாத தலைகள் கழன்று கொள்வதோ ராகுலுக்கு கவலை இல்லை. ஆர்எஸ்எஸ் - பாஜக முன்வைக்கும் சித்தாந்தத்துக்கு எதிரான தேவை நாட்டில் நீடிப்பதும், அதனை காங்கிரஸ் மட்டுமே கொடுக்க முடியும் என்றும் தீர்மானமாக நம்புகிறார்.

இப்படியொரு இளம் தலைவர் கையில் தேசத்தை தந்தால் எப்படியிருக்கும் என்ற மாற்று சிந்தனைகளை, ஒற்றுமை யாத்திரையானது மக்கள் மனதில் விதைத்திருக்கிறது. இந்த ராகுல் இத்தனை காலமாய் எங்கிருந்தார் என்ற கேள்விகள் சமூக ஊடகங்களில் வலம் வருவதே இதற்கான சாட்சி. மோடிக்கு ராகுல் மாற்றா என்ற கேள்விக்கு இதுவரை மறுதலித்தவர்கள், இப்போது யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தேசிய அளவில் எதிர்கட்சிக்கான முழுமுகமே இல்லாத சூழல் மாறத் தொடங்கியிருக்கிறது. தற்போதைய அரசியல் ’பல்ஸ்’ பிரகாரம், காங்கிரஸ் கட்சிக்கு உடனடியாக தேர்தல் அனுகூலங்கள் கூட வாய்ப்பில்லை. ஆனால், இதே வேகத்தில் காங்கிரஸ் மீண்டெழுந்தால், பாஜகவுக்கு நிச்சயம் சிம்ம சொப்பனமாகும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in