’மேலே ஸ்ரீ ஹரி என எழுதிவிட்டு, கீழே மருந்துகளின் பெயர்களை எழுதுங்கள்’ - மருத்துவர்களுக்கு ம.பி முதல்வர் அறிவுரை

’மேலே ஸ்ரீ ஹரி என எழுதிவிட்டு, கீழே மருந்துகளின் பெயர்களை எழுதுங்கள்’ - மருத்துவர்களுக்கு ம.பி முதல்வர் அறிவுரை

மருந்துகளின் பெயர்களை இந்தியில் ஏன் எழுதக்கூடாது. மேலே ஸ்ரீ ஹரி என்று எழுதிவிட்டு, மருந்துகளின் பெயர்களை கீழே எழுதவும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் உள்ள பாரத் பவனில் இந்தி வியாக்யான் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய சிவராஜ் சிங் சவுகான், ஆங்கிலத்தில் மருந்துகளை ஏன் பரிந்துரைக்க வேண்டும் என்று கடுமையாகக் குரல் எழுப்பினார். மேலும் மருந்துச் சீட்டில் குரோசின் என இந்தியில் எழுதுவதில் என்ன பிரச்சினை எனவும் கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “அரசு ஆங்கிலத்திற்கு எதிரானது அல்ல, ஆனால் தேசிய மொழி குறித்த விழிப்புணர்வு அவசியம். இன்று ஆங்கிலம் இல்லாமல் வேலை செய்ய முடியாது என்ற இந்த மனநிலை தவறானது. பல மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆங்கிலம் சரியாக தெரியவில்லை என்பதற்காக மருத்துவக் கல்லூரியை விட்டு வெளியேறுவதை நான் பார்த்திருக்கிறேன். சில நாடுகளில் தாய்மொழிகளில் கல்விப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெரும் முன்னேற்றங்களைச் செய்துள்ளன.

ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, சீனா போன்ற நாடுகளில் யார் ஆங்கிலம் பேசுகிறார்கள்?. நாம் அடிமைகளாகி விட்டோம். அமெரிக்கா சென்றபோது, ​​ஆங்கிலத்தில் பேசியவர்களை விட இந்தியில் பேசி பாராட்டு பெற்றேன்" என்றார்.

மேலும், “இது ஒரு சமூகப் புரட்சி. முடியாதது எதுவுமில்லை. இந்தியில் எம்பிபிஎஸ் படிப்பு என்று நான் அறிவித்தபோது சிலர் சிரித்தனர், ஆனால் இப்போது அதைச் செய்து காட்டியுள்ளோம்" என்று அவர் கூறினார்.

உடற்கூறியல், உடலியல், உயிர்வேதியியல் ஆகிய 3 பாடங்களுக்கான மருத்துவப் பாடப்புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் அக்டோபர் 16ம் தேதி மத்திய பிரதேசத்தில் வெளியிட உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in