செங்கோல், முருகன் சிலை, குழந்தைக்கு ஆசி: தொடரும் சசிகலாவின் ஆன்மிக பயணம்

நாச்சியார் கோயிலில் வழிபட்ட சசிகலா
நாச்சியார் கோயிலில் வழிபட்ட சசிகலா

தனது ஆன்மிக பயணத்தை தொடர்ந்து வரும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று கும்பகோணம் பகுதியில் உள்ள நாச்சியார்கோயில் மற்றும் திருச்சேறை கோயில்களில் தரிசனம் செய்தார்.

இழந்த அதிகாரத்தை பெறுவதற்காகவும், அதிமுகவை தன் வசம் கொண்டு வருவதற்காகவும் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களுக்கு சசிகலா ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டு வருகிறார். அதன்படி கும்பகோணம் அருகில் உள்ள கோயில்களுக்கு வழிபடுவதற்காக அவர் இன்று வந்தார்.

கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோயில் வஞ்சுவல்லிதாயார் சமேத சீனிவாசப்பெருமாள் கோயிலுக்கு வந்த சசிகலா அங்குள்ள பிரசித்தபெற்ற கல்கருட பகவானை தரிசனம் செய்தார். அவருக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்று பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர், தரிசனத்தை முடித்து விட்டுவெளியில் வந்தவரை அணுகிய ஒரு பெண்மணி பத்மபிரியா என்ற தனது குழந்தைக்கு இன்று முதலாவது பிறந்த நாள் என கூறினார்.

அதையடுத்து அந்த குழந்தைக்கு ரூ.100 அன்பளிப்பாக வழங்கி ஆசி தெரிவித்தார். பின்னர், பட்டாச்சாரியார்கள், பக்தர்களுடன், புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது, ஏனநல்லூர் கூட்டுறவு வங்கி தலைவர் என்.ரமேஷ்கண்ணன், செங்கோலையும், உலோகத்தாலான திருச்செந்தூர் முருகன் சிலையையும், சசிகலாவுக்கு வழங்கினார்.

அதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட சசிகலா திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு ஸ்வாமி தரிசனம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in