நீலகிரி மாவட்ட பேரூராட்சியை அலங்கரிக்கும் பெண் தலைவர்கள்

பிக்கட்டி பேரூராட்சி தலைவராகிறார் சந்திரலேகா
நீலகிரி மாவட்ட பேரூராட்சியை அலங்கரிக்கும் பெண் தலைவர்கள்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளிலும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பிக்கட்டி பேரூராட்சி தலைவர் பதவி காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டதால், அந்த பேரூராட்சியில் 6ம் வார்டில் வெற்றி பெற்ற எம்.சந்திரலேகா தலைவராகிறார்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. இந்நிலையில், நாளை (மார்ச் 4) தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நடக்கவுள்ள நிலையில், திமுக சார்பில் தலைவர் மற்றும் துணை தலைவர் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், போட்டியின்றி தலைவர் மற்றும் துணை தலைவர்கள் தேர்வாகவுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் நெல்லியாளம் நகராட்சிகளை திமுக தன்வசம் வைத்துக்கொண்டுள்ளது. உதகை நகராட்சி தலைவர் வேட்பாளராக வாணீஸ்வரி, குன்னூர் தலைவர் வேட்பாளராக ஷீலா கேத்தரின், கூடலூர் தலைவர் வேட்பாளராக வெண்ணிலா மற்றும் நெல்லியாளம் தலைவர் வேட்பாளராக சிவகாமி அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கூடலூர் நகராட்சி துணை தலைவர் பதவி காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் வார்டு 1ல் வெற்றி பெற்ற சிவராஜ் துணை தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளார். மாவட்டத்தில் உள்ள 11 பேரூராட்சிகளில் பிக்கட்டியை தவிர பிற 10 பேரூராட்சிகள் திமுக தன்வசம் வைத்துக்கொண்டுள்ளது. பிக்கட்டி பேரூராட்சி காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பிக்கட்டி பேரூராட்சி தலைவர் பதவி பெண் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அந்த பேரூராட்சியில் 6ம் வார்டில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் எம்.சந்திரலேகா தலைவராகிறார்.

இவர் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர். விவசாயத்தை தொழிலாக செய்து வரும் இவரது கணவர் சுரேஷ், பிக்கட்டியில் 3 முறை கவுன்சிலராக பதவி வகித்துள்ளார். சந்திரலேகா வட்டார பொது செயலாளராகவும், அவரது கணவர் சுரேஷ் வட்டார துணை தலைவராகவும் கட்சியில் பதவி வகிக்கின்றனர். இவர்களுக்கு சந்திரேஸ்வர் என்ற 2 வயது மகன் உள்ளார். கீழ்குந்தா மற்றும் ஜெகதளா பேரூராட்சிகளில் துணை தலைவர் பதவிகள் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. கீழ்குந்தா பேரூராட்சியில் 5வது வார்டில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் பி.நேருவும், ஜெகதளா பேரூராட்சியில் 10வது வார்டில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜெயசங்கரும் துணை தலைவராகின்றனர். அதே போல ஓவேலி பேரூராட்சி துணை தலைவர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பேரூராட்சியில் 3வது வார்டில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் க.சகாதேவன் துணை தலைவராகிறார்.

மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் நடுவட்டம் பேரூராட்சியை தவிர பிற 10 பேரூராட்சிகளின் தலைவர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சியில், மாவட்டத்தில் மொத்தமுள்ள 294 பதவிகளில் 151 பதவிகளில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு, 4 நகராட்சிகளில் 55 பேரும், 11 பேரூராட்சிகளில் 96 பேரும் கவுன்சிலர்களாக உள்ளனர். இதில், நகராட்சிகளில் 2 பழங்குடியின பெண்கள், 18 ஆதிதிராவிட பெண்களும், 35 பொதுப்பிரிவு பெண்களும் கவுன்சிலர்களாக உள்ளனர். 11 பேரூராட்சிகளில் 3 பழங்குடியின பெண்களும், 41 ஆதிதிராவிட பெண்களும், 52 பொதுப்பிரிவு பெண்களும் கவுன்சிலர்களாக உள்ளனர். மாவட்டத்தில் ஏற்கெனவே நடந்து முடிந்து ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் மாவட்டத்தில் உள்ள 6 வார்டுகளில் 3 பெண்களும், 3 வார்டுகளில் ஆண்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.

நான்கு ஊராட்சி ஒன்றியங்களில், குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய மூன்று ஊராட்சி ஒன்றியங்களிலும் பெண்களே தலைவர்களாக உள்ளனர். அதேபோல, மாவட்டத்தில் உள்ள 35 கிராம ஊராட்சிகளிலும் 58 சதவீத பெண்களே உறுப்பினர்களாக உள்ளனர்.

Related Stories

No stories found.