`போதை பொருள் சந்தை தமிழ்நாடு; பெண் காவலருக்கு பாதுகாப்பு இல்லை'- வெளிநடப்பு செய்த ஈபிஎஸ் குற்றச்சாட்டு

`போதை பொருள் சந்தை தமிழ்நாடு; பெண் காவலருக்கு பாதுகாப்பு இல்லை'- வெளிநடப்பு செய்த ஈபிஎஸ் குற்றச்சாட்டு

"பெண் காவலருக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. சட்டம், ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துவிட்டது" என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. நாள்தோறும் பத்திரிகை, ஊடகங்களில் கொலை, கொள்ளை, திருட்டு, செயின் பறிப்பு, பாலியல் தொல்லை என்ற செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதை தடுக்க இந்த அரசு தவறிவிட்டது என்ற செய்தியை கவனத்திற்கு கொண்டு செல்ல நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால் சட்டப்பேரவை தலைவர் பேச எங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. தினந்தோறும் பத்திரிகைகள், ஊடகங்களில் வந்த செய்தியைத்தான் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்.

அரசு விரைந்து இதற்கு நடவடிக்கை எடுத்து இப்படிப்பட்ட நிகழ்வுகள் தமிழகத்தில் நடக்கக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் இந்த செய்தியை அவையில் வைத்தோம். அதோடு சென்னை சாலிகிராமத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்காக பெண் காவலர் சென்றிருந்தார். அந்தப் பெண் காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திமுகவைச் சேர்ந்த 2 பேர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். உடனே அந்த பெண் காவலர் கண்ணீர் மல்க காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்திருக்கிறார். உடனே அந்த கூட்டத்திற்கு வந்திருந்த திமுக முக்கிய பிரமுகர்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள. இது பத்திரிகைகளில் செய்தியாக வந்திருக்கிறது. இதை மறைக்க முடியாது.

அதோடு, இரண்டு நாட்களுக்கு பிறகுத்தான் வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்திருக்கிறார்கள். ஒரு பெண் காவலர் புகார் கொடுத்து உடனே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் டிஜிபி என்ன சொல்கிறார் என்றால், அதை விசாரித்து நடவடிக்கை எடுப்போம் என்று சொல்கிறார். ஒரு பிரச்சினை ஏற்பட்டால் காவல் நிலையத்தில் தான் புகார் செய்கிறோம். பெண் காவலரே புகார் செய்தும்கூட அதை நம்பாமல் விசாரணை செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சொல்வதென்றால் சட்டம்- ஒழுங்கும் தமிழகத்தில் எப்படி இருக்கிறது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பெண் காவலருக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. சட்டம், ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துவிட்டது. அதைத்தான் இந்த அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். அங்கேயும் பேச அனுமதி அளிக்க மறுத்து விட்டார்கள். அதோடு தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு போதை பொருள் சந்தைக்களமாக மாறி உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு கடல் வழியாக போதை பொருள் கடத்தல் சம்பவம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. போதைப் பொருள்கள் பல்வேறு வடிவத்தில் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் அருகிலேயே கஞ்சா அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அதிகளவில் போதை பொருளை பயன்படுத்தி சீரழிந்துக் கொண்டிருக்கிற சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது. இதை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். ஆனால் எங்களைப் பேச சட்டப்பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக சபாநாயகரிடம் எடுத்துக் கூறியும் நாங்கள் நடுநிலையோடு செயல்படுகிறோம் என்று சொல்கிறார். நடுநிலையோடு செயல்படக்கூடிய சட்டப்பேரவை தலைவரை இன்று தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in