வெற்று அறிவிப்புகளைக் கொண்ட விளம்பர அறிக்கை!

பட்ஜெட் குறித்து சீமான் காட்டம்
வெற்று அறிவிப்புகளைக்  கொண்ட விளம்பர அறிக்கை!

"திமுக அரசின் நிதிநிலை அறிக்கை வெற்று அறிவிப்புகளை மட்டுமே கொண்ட ஒரு விளம்பர அறிக்கை" என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "2022-23-ம் ஆண்டுக்கான திமுக அரசின் நிதிநிலை அறிக்கையானது, யாதொரு தொலைநோக்கு திட்டமுமின்றி வெற்று விளம்பர அறிக்கையாக மட்டுமே இருப்பது பெரும் ஏமாற்றமளிக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குரிய அறிவிப்புகளை நிதிநிலை அறிக்கையில் வெளியிடாமல் திமுக அரசு நழுவி வருவது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மாநில பள்ளிக்கல்வித்துறைக்கான ஒதுக்கீடு ஏறத்தாழ 4,298 கோடி ரூபாய் அளவு குறைக்கப்பட்டு அது நேரடி கல்வித்திட்டங்களுக்கு இல்லாமல் மாற்றுத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது" என்று கூறியுள்ளார்.

மேலும், "மகளிருக்கான 1000 ரூபாய் மாத உரிமைத்தொகை, கல்விக்கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, சமையல் எரிவாயு சிலிண்டர் 100 ரூபாய் மானியம் போன்ற வாக்குறுதிகளை தனது தேர்தல் அறிக்கையில் அள்ளி வீசி, மாநில அதிகாரத்தை கைப்பற்றிய திமுக, ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் அவற்றை நிறைவேற்ற எந்தவொரு முன்னெடுப்பையும் செய்யாமல் நிதிநிலை அறிக்கையைத் தயாரித்திருப்பது நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றும் துரோகச்செயலாகும்" என்று அவர் கூறியுள்ளார்.

" 2022-23-ம் ஆண்டில் மாநிலத்தின் மொத்தக்கடன் 6,53,000 கோடி ரூபாய் எனும் நிதியமைச்சரின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. 2022-23-ம் நிதியாண்டில் முதலீட்டுச்செலவுகள் 43 ஆயிரம் கோடி ரூபாய்தான் எனத் தெரிவித்த பிறகு, ஒரே ஆண்டில் மேலும் 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன்கள் அதிகமானது எப்படி என்பது புரியவில்லை. மாநிலத்தின் செலவினங்களை கடந்த ஓராண்டில் திமுக அரசு கட்டுக்குள் வைக்கத் தவறியது கண்கூடாகத் தெரிகிறது. இதுவெல்லாம், திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே படம்பிடித்துக் காட்டுகிறது" என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in