ஈபிஎஸ்சுடன் மீண்டும் இணைந்து செயல்படுவீர்களா?- பேரறிஞர் அண்ணா கூறியதை நினைவுபடுத்திய ஓபிஎஸ்

ஈபிஎஸ்சுடன் மீண்டும் இணைந்து செயல்படுவீர்களா?- பேரறிஞர் அண்ணா கூறியதை நினைவுபடுத்திய ஓபிஎஸ்

ஈபிஎஸ்சுடன் மீண்டும் இணைந்து செயல்படுவீர்களா? என்ற கேள்விக்கு தலைமை பண்பு குறித்து பேரறிஞர் அண்ணா கூறியதை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நினைவுபடுத்தினார்.

ஜூலை 11–ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரின் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், "சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் அசாதாரணமான சூழல் ஏற்பட்டது. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியப்படி வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த கால நிகழ்வுகளை இரு பொதுக்குழு என்ற பெயரில் நடத்தப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட எந்த தீர்மானமும் செல்லாது என்றும் கடந்த ஜூலை 23-ம் தேதி அதிமுகவில் என்ன நிலைமையோ அதுவே நீடிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

இந்த தீர்ப்பை அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு நாங்கள் காணிக்கையாக அளிக்கிறோம். தொண்டர்கள் என்ன விரும்பினார்களோ, அது இன்றைக்கு நடந்திருக்கிறது. ஏனென்று சொன்னால், இந்த இயக்கம் தொண்டர்களின் இயக்கம். தொண்டர்களின் இயக்கத்தை யார் பிளவுபடுத்த நினைத்தாலும் அது நடக்காது. யார் சர்வாதிகாரியாக, தனி நபர் குழுவிற்கோ, தனி நபருக்கோ அல்லது குழுவிற்கோ அல்லது ஒரு குடும்பத்திற்கோ இந்த இயக்கத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தால் அதுவும் நடக்காது என்றுதான் இன்று அளித்த தீர்ப்பின் மூலமாக அதிமுகவுக்கு நீதி கிடைத்திருக்கிறது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் இந்த இயக்கத்தை தொண்டர்களுக்கான இயக்கமாக உருவாக்கி வளர்த்தார்கள். இது தற்போது நிரூபணமாகி இருக்கிறது. இது அதிமுகவுக்கு கிடைத்த முழுமையான வெற்றி.

கட்சியில் இருந்து பிளவுபட்டு சென்றவர்களுக்கு ஏற்கெனவே நாங்கள் அறிக்கை மூலமாக தெரிவித்து இருக்கிறோம். அனைவரும் ஒன்றுபட வேண்டும். யாரெல்லாம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்களோ அவர்களையெல்லாம் கட்சியில் சேர்ப்போம் என்று சொல்லியிருக்கிறோம். யாரெல்லாம் அதிமுகவின் கொள்கைகளுக்கு கேட்பாடுகளுக்கு இசைந்து வருகிறார்களே அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

சென்னை உயர் நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில் கடந்த ஜூலை 23-ம் தேதிக்கு முன்பு அதிமுக என்ன நிலையில் இருந்ததோ அதே நிலை நீடிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதற்கு நாங்கள் மதிப்பளித்து நடப்போம்" என்றார்.

ஈபிஎஸ்சுடன் மீண்டும் இணைந்து செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், அதிமுக ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், பேரறிஞர் அண்ணா சொல்லியப்படி விமர்சனங்களை தாங்கிக் கொள்கிற மனப்பக்குவம் அவர்களுக்கு இருக்க வேண்டும். தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் மீது யார் அவமானங்களை ஏற்படுத்தினாலும் அனைவரையும் அரவணைத்து செல்வதுதான் ஒரு தலைமை பொறுப்பில் இருப்பவர்களின் பண்பு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு தொண்டர்கள் அளித்திருக்கின்றன பொறுப்பு ஒருங்கிணைப்பாளர். ஆக, அனைவரையும் ஒருங்கிணைந்து அதிமுகவை கொண்டு செல்வேன்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in