தனிக்கட்சித் தொடங்குவீர்களா?- ஓபிஎஸ் கொந்தளிப்புடன் அளித்த அதிரடி பதில்

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

தனிக்கட்சித் தொடங்குவீர்களா? என்ற கேள்விக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆவேசத்துடன் பதில் அளித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பொதுவாகவே ஒரு வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் இருந்தால் அந்த வழக்கின் தீர்ப்பில் திருப்தி இல்லை என்றால் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு செல்வார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அந்த வழக்கை விசாரிப்பார். அதிலும் ஒரு தீர்ப்பளித்தால் அமர்வில் முறையீடு செய்யலாம். அதிலும் திருப்தி இல்லை என்றால் உச்சநீதிமன்றத்திற்கு செல்லலாம். என்ன நோக்கத்திற்காக உச்சநீதிமன்றம் சென்றார்களோ வேறு வகையான தீர்ப்பு அங்கு வழங்கப்படும் என்றால் அரசியல் முடிவு என்ன எடுக்கப் போகிறோம் என்று கேட்கிறீர்கள். மக்களை நாடிச் செல்கின்ற நிலையில் இருக்கின்றோம். மக்களிடம் நீதி கேட்போம்.

பண்ருட்டி ராமச்சந்திரன்- ஓபிஎஸ்
பண்ருட்டி ராமச்சந்திரன்- ஓபிஎஸ்

புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 50 ஆண்டுகாலம் இந்த இயக்கத்தை தங்கள் உயிரை கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள். புரட்சித்தலைவர் வகுத்துத் தந்த சட்ட விதியை அம்மா அவர்கள் காப்பாற்றினார். இந்த இரண்டு தலைவர்களும் காப்பாற்றிய சட்ட விதிகள் தான் நாங்கள் காப்பாற்றுவதற்கு இன்று போராடிக் கொண்டிருக்கிறோம். அம்மா அவர்கள் காலமானதற்கு பின்னால் அவர்தான் நிரந்தர பொதுச் செயலாளர். அவர் எவ்வளவு வேதனைகளை சந்தித்து எந்த இயக்கத்தை காப்பாற்றி இருக்கிறார். அதனால் தான் அவர் கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் என்று நாங்கள் மானசீகமாக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். அந்த தீர்மானத்தை ரத்து செய்வதற்கு யாருக்கு அதிகாரம் இருக்கிறது. யாருக்குமே கிடையாது.

இந்த இயக்கத்தை தொண்டனுக்காகவே புரட்சித்தலைவர் உருவாக்கினார். இன்றைக்கு வரை தொண்டர்களை காப்பாற்ற கூடிய இயக்கமாகத்தான் இருந்து வருகிறது. அதனால்தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அடிப்படையாக கழகத்தின் உச்சப் பதவியில் இருப்பவர்களை உறுப்பினர்கள் வாக்குப் போட்டு தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சட்ட விதியை கொண்டு வந்தார். இன்று என்னவென்றால் 10 மாவட்டச் செயலாளர் முன்மொழிய வேண்டும், 10 மாவட்டச் செயலாளர்கள் வழியும் மொழிய வேண்டும், ஐந்து வருடம் கட்சியில் இருக்க வேண்டும் என்று விதியை வகுத்து இருக்கிறார்கள். பணம் இருந்தால்தான் இது எல்லாம் நடக்கும். எப்படி கூவத்தூரில் நடந்ததோ அதேப்போல இந்த கட்சியை கைப்பற்றி தன் கைக்குள் வைத்து கொள்ளலாம் என்று நினைத்து இருக்கிறார்கள். நாங்கள் ஏன் தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பேட்டி
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பேட்டி

இது ஓபிஎஸ் தாத்தா மாடசாமி தேவர் ஆரம்பித்த கட்சி அல்ல. பழனிசாமி தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல. தொண்டர்களுக்காகவே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி. அதற்காகத்தான் நாங்கள் இன்றைக்கு தர்மயுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். மக்கள் மன்றத்தை நாடி செல்வதற்கு எங்கள் படை புறப்பட்டு விட்டது. உறுதியாக மக்களிடம் நல்ல தீர்ப்பு கிடைக்கும். உச்சநீதிமன்றம் தற்போது அளித்துள்ள தீர்ப்பால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. இந்த தீர்ப்பு வந்ததற்கு பின்னால்தான் எங்களுடைய தொண்டர்கள் மிகப்பெரிய எழுச்சியுடன் இருக்கிறார்கள். நாங்கள் திமுகவின் பிடீம் என்றால் தங்கமணி, வேலுமணி மீதான வழக்கு, கோடநாடு வழக்கு என்ன ஆனது. எடப்பாடி அணிதான் திமுகவின் ஏ முதல் இசட் டீம் எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி அணிதான். ஆயிரம் தகவல் இருக்கிறது. இனி கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரும்.

கட்சி உடைந்து விடக்கூடாது என பொறுமை காத்துக் கொண்டிருக்கிறோம். தற்போது எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். சின்னம்மாவையும், டிடிவிதினகரனையும், ஓபிஎஸ்ஸையும் கட்சியில் சேர்க்க மாட்டோம் என்று. இவர் ஆரம்பித்த கட்சியா அது. இல்லையென்றால் இவர் தாத்தா ஆரம்பித்த கட்சியா? இதை சொல்வதற்கு இவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. ஆணவத்தின் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறார். அந்த ஆணவத்தை அடக்குகின்ற சக்தி அதிமுக தொண்டர்களிடமும் மக்களிடம் இருக்கிறது. அது நிரூபணமாகப் போவதை அதை நீங்கள் கண்கூடாகப் பார்க்கப் போகிறீர்கள்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in