மறுபடியும் ஒற்றைத் தலைமை கோஷத்தை எழுப்புவீர்களா?

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
மறுபடியும் ஒற்றைத் தலைமை கோஷத்தை எழுப்புவீர்களா?

மாற்றம் ஒன்றுதான் மாறாதது. ஆனால், எத்தனை பேர் மாற்றத்துக்குத் தயாராகிறார்கள், கடந்த காலத்தை முற்றாக உதறிவிட்டு நிகழ்காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்கிறார்கள், முதல் ஆளாக பழைய இடத்தைக் காலி செய்கிறார்கள் என்பதில்தான் அவர்களது வெற்றி இருக்கிறது.

அப்படி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட மாற்றங்களை வெற்றிகரமாக கையாண்டு, புதிய தலைமையின் ஏகபோக நம்பிக்கையைப் பெற்றவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். மீண்டும் ஒற்றைத் தலைமை, சசிகலா இணைப்பு என்கிற கோஷம் ஒலிக்கிற இந்த நேரத்தில் உதயகுமாரின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. எந்த மாற்றம் என்றாலும் முதலில் அறிந்துவிடுபவரிடம், 'காமதேனு' பேட்டிக்காக பேசினோம்.

சசிகலாவிடம் பணிவாக...
சசிகலாவிடம் பணிவாக...

தொடர்ந்து 4 தேர்தல்களில் அதிமுக தோற்றிருக்கிறது. தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்தீர்களா?

கூட்டணி விஷயத்தில் நாங்கள் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். தேர்தல் நெருக்கத்தில் அதிமுக செய்த சில அறிவிப்புகள் வெவ்வேறு பகுதிகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் கட்சி ஆய்வு செய்திருக்கிறது. அதைவிட முக்கியமான விஷயம், அம்மா என்ற மிகப்பெரிய ஆளுமை தலைமைப் பொறுப்பில் இருந்தபோது, அடுத்த தலைவர் யார் என்பது பற்றி நாங்கள் சிந்தித்ததுகூட கிடையாது. அம்மாவின் திடீர் மறைவு கட்சிக்குப் பேரிழப்பு. ஒரே நாளில் ஒரு தலைமையை உருவாக்கிவிட முடியாது. அம்மாவின் இடத்தை நிரப்பிவிடவும் முடியாது. அதற்கு குறைந்தபட்ச காலஅவகாசம் தேவைப்படும். இப்போது நாமிருப்பது அந்த காலகட்டத்தில்தான். அந்த இடத்தை நிரப்புவதற்கான முயற்சியில் இரு தலைவர்களும் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அம்மா உயிரைக்கொடுத்து உருவாக்கித்தந்த ஆட்சியைத் தக்கவைத்தது சாதாரண விஷயமல்ல. தேர்தலில் வேண்டுமானால் நாங்கள் தோற்றிருக்கலாமே தவிர, அம்மாவின் இழப்பை ஈடுசெய்வதற்கு நாங்கள் எடுத்த முயற்சிகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் ஆதரவாகத்தான் இருக்கிறார்கள்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

"எல்லோரும் சொல்கிறபடி ஓபிஎஸ்சும், ஈபிஎஸ்சும் இரட்டைக்குழல் துப்பாக்கியல்ல. வெறும் தீபாவளித் துப்பாக்கி. அவர்களால்தான் அதிமுக தோற்றது. சின்னம்மா தலைமையேற்க வேண்டும்" என்று ஓபிஎஸ்சின் சகோதரர் ஓ.ராஜாவே கூறியிருக்கிறாரே?

அவருடைய கருத்துக்கு நான் பதில் சொல்லவில்லை, பொதுவாகச் சொல்கிறேன். ஓபிஎஸ், ஈபிஎஸ் இன்று தலைமைப் பொறுப்புக்கு வரவில்லை. அம்மாவின் மறைவையொட்டியே வந்துவிட்டார்கள். அது நடந்து நான்கைந்து ஆண்டுகளாகி விட்டது. எனவே, இது காலம் கடந்த கருத்து. அதேசமயம், தேர்தல் தோல்விக்காக எல்லாம் கட்சித் தலைமையை மாற்றச் சொல்வது திராவிட இயக்கத்துக்கு மரபல்ல. 1960 தேர்தலில் திமுக 50 இடங்களில் வென்றது, ஆனால், அறிஞர் அண்ணா தோற்றுவிட்டார். அதற்காக அவரைப் பதவி விலகவா சொன்னார்கள்? 1977, 1980, 1985 என்று தொடர்ந்து 3 தேர்தல்களில் திமுக தோற்றது. 14 ஆண்டுகள் ஆட்சியிலேயே இல்லை என்பதற்காக யாராவது கருணாநிதியை தலைவர் பொறுப்பில் இருந்து விலகச் சொன்னார்களா? கடமை, கண்ணியம், கட்டுப்பாடுதான் கழகங்களுக்கு அழகு.

ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோதே, "கட்சியும், ஆட்சியும் ஒருவரிடம்தான் இருக்க வேண்டும்" என்று சசிகலாவுக்காக முதல் குரல்கொடுத்தது நீங்கள்தான். பிறகு பழனிசாமியா, சசிகலாவா என்று வந்தபோது பழனிசாமிக்கு ஆதரவாக நின்றதும் நீங்கள்தான். மறுபடியும் ஒற்றைத் தலைமை கோஷத்தை எழுப்புவீர்களா?

போன கேள்வியிலேயே இதற்கான தெளிவான பதிலைச் சொல்லிவிட்டேனே... எங்களை வழிநடத்தும் தலைமைக்குத்தான் கட்சிக்கும், நாட்டுக்கும் எது நல்லது என்பது தெரியும். அவர்கள் எடுக்கிற முடிவின்படிதான் நாங்களும் செயல்படுவோம்.

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது பற்றி ஓபிஎஸ் பேசியதும் முதல் ஆளாக அவரைப் போய்ச் சந்தித்தீர்களே, எடப்பாடியின் தூதுவராகச் சென்றீர்களா? சசிகலாவை சேர்ப்பதற்கு ஆதரவு தெரிவிக்கச் சென்றீர்களா? அவரிடம் என்ன பேசினீர்கள் என்று சொல்லலாமா?

"கட்சிக்கு எது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அந்த நல்ல செய்தியை முறைப்படி 2 பேரும் இணைந்து அறிவிப்பு செய்யுங்கள். எந்த முடிவாக இருந்தாலும் இருவரும் சேர்ந்து முடிவெடுத்து ஒத்த கருத்தோடு அறிவித்தால்தான் அது கட்சிக்கும், நாட்டுக்கும் நன்மை பயக்கும்" என்று சொன்னேன். ஏனென்றால், அதிமுகவின் புதிய சட்டதிட்ட விதிகளின்படி ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்து எடுக்கிற முடிவுகள் மட்டும்தான் செல்லுபடியாகும். தேர்தல் ஆணையமும் ஏற்கும். என் கருத்தை அவரும் ஏற்றுக்கொண்டார்.

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

அதிமுகவின் வாக்கு வங்கியை பாஜக கபளீகரம் செய்துவிட்டது என்கிறார்கள். அதிமுகவை அழித்துத்தான் பாஜக வளர்கிறது என்று நீங்கள் உணர்கிறீர்களா?

பாஜக என்னவோ இன்று தோன்றிய கட்சியைப் போல நீங்கள் சொல்லக்கூடாது. சுதந்திரப் போராட்ட காலத்திலேயே ஒரு சித்தாந்தத்தை விதைத்து, 100 ஆண்டுகளாக அதைப் பிரச்சாரம் செய்து, கொஞ்சம் கொஞ்சமாக எம்பி, எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கையை அதிகரித்து இன்றைய நிலைக்கு வந்திருக்கிறார்கள். அது ஒரு தேசியக்கட்சி. அதை பிராந்தியக் கட்சியுடன் ஒப்பிடுவதே தவறு.

காங்கிரஸ் கட்சி கரைகிறது, அதன் வாக்குவங்கி எல்லாம் பாஜகவுக்குப் போகிறது என்று சொல்வது வேண்டுமானால் சரியாக இருக்கும். பாஜக தலைவர்கள் எல்லாம் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்றுதான் சொல்கிறார்கள். வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு விரோதமானது. அதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று மோடியே கூட சமீபத்தில் பேசியிருக்கிறார். அவர்களுடையே பேச்சே, அவர்கள் யாருடைய வாக்குவங்கியை இலக்காக வைத்துச் செயல்படுகிறார்கள் என்பதைப் பட்டவர்த்தனமாக காட்டுகிறதே?

ஒருபுறம் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை, இன்னொரு புறம் மத்திய அரசின் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை. இதற்குப் பயந்துதான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து தீவிர அரசியல் செய்வதில்லை என்கிறார்களே?

பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் எல்லோருமே எல்லா கேள்விகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும், வழக்குகளுக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள்தான். குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. அப்படி குற்றச்சாட்டுக்களோ, வழக்குகளோ வருகிறபோது அதற்குரிய விளக்கத்தைச் சொல்லி தான் நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும். நடவடிக்கை எடுத்து விடுவார்களோ என்று பயப்படுபவர்களால் பொதுவாழ்க்கையில் இருக்கவே முடியாது.

இங்கே யாரும் எடுத்தவுடன் அமைச்சராகி விடவில்லை. பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று, சிறை சென்று, தியாகத் தழும்புகளுடன்தான் இந்த இடத்தில் இருக்கிறோம். 1996, 2006 என்று திமுக ஆட்சிக்கு வந்த போதெல்லாம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதெல்லாம் வழக்குப் போட்டார்கள். அந்தக் குற்றச்சாட்டில் இருந்து நிரபராதி என்று நிரூபித்து வெளியே வரவில்லையா? ரகுபதி, ராஜகண்ணப்பன், முத்துச்சாமி, செந்தில்பாலாஜி என்று பலர் இன்று திமுகவில் அமைச்சர்களாக இருக்கிறார்களே?

கொங்கு மண்டலத்தில் மட்டும் அதிக ரெய்டுகளை நடத்துவதன் மூலம், அதிமுக முன்னாள் அமைச்சர்களையே பிரித்தாள நினைக்கிறதா திமுக அரசு?

உங்கள் மீது மரியாதை வைத்திருப்பதால்தான் பேட்டிக்கே சம்மதித்தேன். நீங்கள் இவ்வளவு மோசமான கேள்வியைக் கேட்பீர்கள் என்று நினைக்கவில்லை. வருத்தமாக இருக்கிறது.

திமுகவின் 10 மாத ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகவும் தெரியவில்லை. ஏற்கெனவே அம்மா ஆட்சியில் இருந்த திட்டங்களான மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி, தாலிக்குத் தங்கம், அம்மா இருசக்கர வாகனம் போன்றவற்றை தொடர்ந்து நடைமுறைப்படுத்தியதாகவும் தெரியவில்லை. கேட்டால், கடைசி வருடத்தில் இதை எல்லாம் நீங்கள் கொடுத்தீர்களா என்று கேட்கிறார்கள்.

கரோனா காலத்தில் உலகம் முழுக்க லேப்டாப் உள்ளிட்டவற்றின் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது என்பதும், தங்கச் சுரங்கத்தைக்கூட மூடிவிட்டார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதானே? கடந்த அரசை குறைசொல்லித்தானே ஆட்சிக்கு வந்தார்கள்... பொறுப்புக்கு வந்த பிறகும் குறை மட்டுமே சொல்லிக்கொண்டிருப்பது எப்படிச் சரியாகும்?

முதல்வர் மு.க.ஸ்டாலினை நிறைய பாராட்டுகிறார்கள். உங்கள் பார்வையில் அவரது செயல்பாடு எப்படி?

சுறுசுறுப்பான, பொதுமக்கள் எளிதில் அணுகுகிற, சாமானிய முதலமைச்சராக இருந்து எடப்பாடி பழனிசாமி நிறைய சாதித்திருக்கிறார். அவரை மாற்றிவிட்டு மு.க.ஸ்டாலினை மக்கள் முதல்வராக்கியிருக்கிறார்கள் என்றால், இன்னும் அதிகம் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றுதானே அர்த்தம்? மிக நீண்ட போராட்டத்துக்குப் பிறகு முதல்வராகியிருக்கிற ஸ்டாலின், அதை எல்லாம் உணர்ந்திருக்கிறாரா என்று தெரியவில்லை.

பெரிய பெரிய நிபுணர்களைக்கொண்டு குழுக்கள் எல்லாம் அமைத்தீர்களே, என்ன செய்திருக்கிறீர்கள்? மற்றதை விடுங்கள். தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினை பற்றி முதல்வர் வாயே திறப்பதில்லையே? இவரது புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்த கேரள முதல்வரிடம் இதுபற்றிப் பேசியிருக்கலாமே? உரிமைகளைப் பறிகொடுத்து, உறவை மேம்படுத்துவதை மக்கள் எப்படி ஏற்பார்கள்? இவ்வளவு வேலைகள் இருக்கும்போது, பழிவாங்கும் நடவடிக்கையில் மட்டும் கவனம் செலுத்துவீர்கள் என்றால், 2001-ல் மக்கள் என்ன தீர்ப்பு வழங்கினார்களோ அதையே திரும்பவும் அளிப்பார்கள் என்கிற வரலாற்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

திமுக, அதிமுக, பாஜக என்கிற இந்த வரிசை 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படி மாறும் என்று நினைக்கிறீர்கள்?

ஒவ்வொரு கட்சியும் எப்படியாவது மக்களுடைய நம்பிக்கையைப் பெற்று, ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அதற்காகத்தான் கட்சி நடத்துகிறார்கள். மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்பதுதான் எங்களுடைய இலக்கும். ஆனால், யாருக்கு எந்த இடம் என்பதை மக்கள்தானே தீர்மானிக்கணும்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in