
சிங்கப்பூரில் வெற்றிகரமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு சமீபத்தில் நாடு திரும்பிய லாலுபிரசாத் யாதவ், பாஜக மீதான தனது தாக்குதலை மீண்டும் தொடங்கினார். பாஜக நாட்டை சாதி மற்றும் மத அடிப்படையில் பிளவுபடுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தனது டெல்லி இல்லத்தில் இருந்து ஆர்ஜேடி அங்கம் வகிக்கும் மகாகத்பந்தன் கூட்டணியின் பேரணியில் காணொலி மூலம் உரையாற்றினார். அதில், “ பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நாட்டில் சிறுபான்மையினர் மற்றும் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு எதிரானது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இரண்டும் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவை. அவை அரசியலமைப்பை மாற்றி இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கின்றன. 2024 லோக்சபா மற்றும் 2025 சட்டமன்றத் தேர்தல்களில் நாங்கள் பாஜகவை துடைத்தெறிவோம். பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற பிஹார் முன்முயற்சி எடுத்துள்ளது. பாஜக வரும் தேர்தலில் நாடு முழுவதிலுமிருந்து அகற்றப்படும்" என்று கூறினார்.
தனது உடல்நிலை குறித்து பேசிய லாலு பிரசாத் யாதவ், "இந்த பேரணியில் கலந்து கொள்ள விரும்பினாலும், எனது உடல்நிலை என்னை அனுமதிக்கவில்லை. நான் நன்றாக குணமடைந்து வருகிறேன். உங்கள் பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. எனது மகள் ரோகினி ஆச்சார்யாவுக்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருப்பேன். அவர் தன் ஒரு சிறுநீரகத்தை எனக்கு தானம் செய்தவர்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.