வேலையில்லா திண்டாட்டம் பாஜகவுக்கு வேட்டு வைக்குமா?

வேலையில்லா திண்டாட்டம் பாஜகவுக்கு வேட்டு வைக்குமா?

‘பாரத் ஜோடா’ எனும் தனது இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் ராகுல் காந்தி முக்கியமாக வைக்கும் முழக்கம், நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தைப் பற்றித் தான். ராகுலின் இந்த கூர்முனை தாக்குதல் பாஜகவை சற்றே அசைத்துப் பார்த்துள்ளது என்பதே உண்மை. அதன் வெளிப்பாடுதான் பிரதமரின் ரோஸ்கர் மேளா - 10 லட்சம் வேலைவாய்பை உருவாக்கும் அறிவிப்பு என்கிறார்கள்.

அடுத்தடுத்து இமாச்சல பிரதேசம், குஜராத், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் வேலையில்லா திண்டாட்டம் பாஜகவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்கிறார்கள்.

குமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி. இந்த யாத்திரையில் பணவீக்கம், விலைவாசி உயர்வு, மதநல்லிணக்கம் குறித்தெல்லாம் அவர் பேசினாலும், மக்களிடம் பெரிய அளவில் எடுபடுவது ‘வேலையில்லா திண்டாட்டம்’ எனும் சர்ஜிகல் ஸ்டிரைக்தான். ராகுலின் இந்தக் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக ஒவ்வொரு மாநிலத்திலும் ‘எங்கள் வேலைக்காக நடக்கிறோம்’ எனும் வாசகங்கள் அடங்கிய டி - ஷர்ட்டை அணிந்து பாரத் ஜோடா யாத்திரையில் இணைந்து வருகிறார்கள் இளைஞர்கள்.

யாத்திரையில் மட்டுமின்றி ட்விட்டர், செய்தியாளர் சந்திப்பு என எல்லா பக்கமும் வேலைவாய்ப்பின்மை குறித்த கேள்விகளை புள்ளிவிவரங்களோடு அடுக்கிக்கொண்டே இருக்கிறார் ராகுல். ‘இந்தியா 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மையை எதிர்கொள்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் வேலையில்லா திண்டாட்டம் 100 சதவீதம் அதிகரித்துள்ளது” என பாய்ன்ட் அவுட் செய்து பாஜகவை திக்குமுக்காட வைக்கிறார் அவர்.

மேலும், 2021-ம் ஆண்டு நிலவரப்படி, 24 வயது வரையிலான இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் உலகிலேயே இந்தியாவில் அதிகபட்சமாக 28.3 சதவீதமாக இருப்பதாக ராகுல் சொல்லி இருக்கிறார். இது பாகிஸ்தானில் 9.4 சதவீதமாகவும், நேபாளத்தில் 9.5 சதவீதமாகவும், இலங்கையில் 26.1 சதவீதமாகவும் இருப்பதாக உலக வங்கி அறிக்கையை மேற்கோள் காட்டி ராகுல் பேசியிருப்பதும் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது.

“2014 மக்களவைத் தேர்தலின் போது ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என மோடி வாக்குறுதி அளித்தார். அப்படியானால் 8 ஆண்டுகளில் 16 கோடி வேலைவாய்ப்புகள் எங்கே? மோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை, வேலைவாய்ப்புகளை அழித்துவிட்டார்” என்ற ராகுலின் பேச்சுக்கு மக்கள் மத்தியில் மட்டுமின்றி பிற எதிர்க்கட்சிகளிடமும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. அதனால் ராகுலின் இந்தக் கேள்வியை இப்போது, மாநில கட்சிகளான தெலங்கானா ராஷ்டிர சமிதி, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், திரிணமூல், ஆம் ஆத்மி போன்ற கட்சிகளும் எழுப்பி வருகின்றன.

பணவீக்கம், விலைவாசி உயர்வுக்கெல்லாம் கரோனா, ரஷ்யா-உக்ரைன் போரைக் காரணம் காட்டி தப்பித்த மத்திய பாஜக அரசால், வேலை வாய்ப்பின்மை பிரச்சினையை அவ்வளவு எளிதாக சமாளிக்க முடியவில்லை. ராகுல் காந்தி சொன்னது போல ஒவ்வொரு வீட்டிலும், வேலையில்லா திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரின் மனதிலும் இந்த கேள்வி எழ ஆரம்பித்துள்ளது. காங்கிரஸ் மட்டுமின்றி டிஆர்எஸ், திரிணமூல், ஆம் ஆத்மி போன்ற கட்சிகளும், மாநிலத்தில் தங்களின் அரசு உருவாக்கித் தந்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையைப் பட்டியலிட்டு, மத்திய அரசின் வேலை வாய்ப்புகள் எங்கே என்ற கேள்வியை எழுப்பத் தொடங்கியுள்ளன. இவை எல்லாம் தான் பாஜகவை இந்த விவகாரத்தின் தாக்கம் குறித்து யோசிக்க வைத்திருக்கிறது.

இந்த நவம்பர் தொடங்கி 2024 மக்களவைத் தேர்தல் வரை இமாச்சல பிரதேசம், குஜராத், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, கர்நாடகா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட 11 மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கெல்லாம் பாஜகவுக்கு இணையான சமபலத்துடன் எதிர்க்கட்சிகளும் தற்போதைய ஆளும் கட்சிகளும் உள்ளன. எனவே, இந்த மாநில தேர்தல்களில் நிச்சயமாக வேலைவாய்ப்பின்மை என்பது பிரதானப் பிரச்சினையாக உருவெடுக்கும் என்பதை பாஜக உணர்ந்துள்ளது. அதன் வெளிப்பாடுதான் பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு அறிவிப்பு.

மத்திய அரசின் 38 துறைகளில், அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ரோஸ்கர் மேளா திட்டத்தை தீபாவளி சமயத்தில் அறிவித்தார் பிரதமர் மோடி. அதன்படி முதல்கட்டமாக 75 ஆயிரம் வேலைவாய்ப்புகளுக்கான ஆணைகளை வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் அவர்.

ரோஸ்கர் மேளா அறிவிப்புகள் வந்ததிலிருந்து காங்கிரஸ் கட்சிக்குள் உற்சாகம் கரைபுரளத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, “இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையே இல்லை என்று பேசிக்கொண்டிருந்த மத்திய அரசு இப்போது முதன் முறையாக அதனை ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, ரோஸ்கர் மேளா வேலை வாய்ப்பு அறிவிப்புகள் முழுக்க முழுக்க ராகுல் காந்திக்கு கிடைத்த வெற்றி. பாரத் ஜோடா யாத்திரையில் பல்லாயிரம் இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் குறித்து ராகுல் குரல் எழுப்பியதால்தான் பாஜக அரசு இப்போது இறங்கி வந்துள்ளது” என்று சொல்லி ரோஸ்கர் மேளாவுக்கான கிரெடிட்டை தன்பக்கம் திருப்பும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.

அடுத்த மாதம் இமாச்சல பிரதேசம், குஜராத் மாநில பேரவைத் தேர்தல்களை பாஜக எதிர்கொள்கிறது. இரண்டுமே அக்கட்சி ஆளும் மாநிலங்கள். இவ்விரண்டும் கல்வியறிவு, பொருளாதார காரணிகளின் அடிப்படையில் வளர்ந்த மாநிலங்கள் என்பதால், இம்மாநிலங்களில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையை வீரியமாக எழுப்பி வருகின்றன. பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி, மதநல்லிணக்கம், விலைவாசி உயர்வு போன்றவற்றை எல்லாம் சமூக பிரச்சினைகள் என மாற்றிவிட வாய்ப்புள்ளது. ஆனால், வேலைவாய்ப்பின்மை என்பது தனிநபர் பிரச்சினையாக உள்ளதாலும், தனிப்பட்ட குடும்பங்களின் பிரச்சினையாக இருப்பதாலும் அது நிச்சயமாக தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.

2015-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 2021 செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான 6 ஆண்டுகளில் சுமார் 9 லட்சம் பேர் இந்திய குடியுரிமையைக் கைவிட்டு 106-க்கும் மேற்பட்ட நாடுகளின் குடிமக்களாக மாறியுள்ளனர். வெளியுறவு அமைச்சகத்தின் தகவல்களின் படி, மொத்தம் 1,33,83,718 இந்தியர்கள் தற்போது வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி ஒவ்வொரு நாளும் 350 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், வேலையில்லாத் திண்டாட்டம்தான்.

உயர் கல்விக்காகவும், வேலை தேடியும் வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள், அங்கே நல்ல வேலை கிடைக்கும் பட்சத்தில் அங்கேயே தங்கிவிடுகின்றனர். இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.3 சதவீதமாக உயர்ந்தது. பண்டிகை காலம் என்பதால் பல தற்காலிக வேலைகள் உருவாகி இந்த விகிதம் செப்டம்பரில் சற்றே குறைந்துள்ளது. இனிவரும் மாதங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மாநில தேர்தல்கள் நெருங்கி வரும் நேரத்தில் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற கலக்கத்தில் இருக்கிறது பாஜக.

எதற்கும் அசராமல் இருந்த மத்திய பாஜக அரசு, முதல் முறையாக வேலைவாய்ப்பின்மை விஷயத்தில் சற்றே ஷேக் ஆகி இருக்கிறது. 2014-ல் காங்கிரஸை வீழ்த்துவதற்காக, ‘புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம், நாட்டின் வளர்ச்சியை கட்டமைப்போம்’ என்று பிரகடனம் செய்தது பாஜக. அது இப்போது பூமராங் கணக்காய் பாஜகவையே பதம் பார்க்கும் நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. எப்படிச் சமாளிக்கிறார்கள் என்று பார்க்கலாம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in