மகனின் செயலால் நொந்துபோன திருச்சி சிவா: திமுக தலைமை என்ன நினைக்கிறது?

பாஜகவில் இணைந்த சூர்யா
பாஜகவில் இணைந்த சூர்யா

``என் காரை எடுத்துக்கொண்டு போங்கள், ஆனால் கமலாலயம் மட்டும் போய்விடாதீர்கள்'' என்று எடப்பாடி பழனிச்சாமியை பார்த்துச் சொன்ன உதயநிதியிடம், இப்போது யார் கமலாலயம் போனார்கள் பார்த்தீர்களா? என்று கேள்விகளால் துளைக்கிறார்கள் அதிமுகவினர். உங்கள் எம்.எல்.ஏக்கள் இரண்டுபேர் எங்களிடம் பேச்சுவார்த்தையில் இருக்கிறார்கள். இப்போது நினைத்தாலும் அவர்களை திமுகவுக்கு தூக்கிவிடுவோம் என்று பாஜகவை பார்த்து சூளுரைக்கிறார் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்.

திருச்சி சிவா
திருச்சி சிவா

இப்படி தமிழக அரசியல் களத்தை சூடாக்கியிருக்கிறது பாஜகவில் சேர்ந்திருக்கும் சூர்யாவின் செயல். அந்த சூர்யா வேறு யாருமல்ல, திமுகவின் கொள்கைபரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன். அவரை தங்கள் கட்சிக்கு கொண்டுவந்ததில் வெற்றிப் பெருமிதம் காட்டி சிரிக்கிறது தமிழக பாஜக. மகனின் இந்த தாவல் திருச்சி சிவாவுக்கு சிக்கலை ஏற்படுத்துமா என்பதுதான் விவரம் அறிந்தவர்களின் கேள்வியாக இருக்கிறது.

பாஜகவில் சேரப்போகும் முன்னரே சூர்யா செய்த காரியம் சிவாவின் தனிமனித ஒழுக்கம் பற்றிய பொதுக்கருத்தை சிதைத்ததுதான். சசிகலா புஷ்பாவுடன் சிவா சேர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அவை போலியானவை என்று அப்போது விளக்கம் தரப்பட்டது. ஆனால் பாஜகவில் சேரப்போகிறார் என்று கேள்விப்பட்டு அவரிடம் பேசியபோதே அவையெல்லாம் உண்மைதான் என்று அடித்துச் சொல்கிற சூர்யா, தந்தையின் இன்னொரு முகத்தை வெளிச்சம் போட்டு காட்டத் தொடங்கியிருக்கிறார். மகனே சொல்வதால் சமூகத்தில் அதற்கு மகத்துவம் இருக்கத்தான் செய்யும்.

இன்னொரு பக்கம் கட்சியில் அவருக்கான இடத்தையும் இது கேள்விக்குறியாக்கலாம் என்கிறார்கள். சிவாவை மட்டும் அசிங்கப்படுத்துவதோடு சூர்யா நிறுத்திவிடவில்லை. மாறாக திமுக மீதும் கடும் பாய்ச்சல் பாய்கிறார். அந்த கட்சி சர்வாதிகாரத்தோடு செயல்படுவதாகவும், விரைவில் தமிழகத்தில் திமுக இல்லாமல் போகும் என்றும் குற்றம்சாட்டும் அவர், கனிமொழிதான் எதிர்காலத்தில் அந்த கட்சியை வழிநடத்துவார் என்றும் திருவாய் மொழிந்திருக்கிறார். இதுவெல்லாம் கட்சித்தலைமையை மிகவும் கோபப்படுத்தியுள்ளதாம். சிவாவை தொடர்பு கொண்டு இதுகுறித்து கோபமாக பேசியதாகவும் சொல்கிறார்கள்.

மகனை ஏன் விலக்கினார் சிவா?

திருச்சி சிவா முனைவர் பட்டத்துக்காக ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வழிகாட்டியாக பேராசிரியை ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அந்த பேராசிரியை சிவாவின் வீட்டிற்கு வந்து பாடக்கருத்துக்களுக்கான ஆலோசனைகளை வழங்குவார். ஒரு கட்டத்தில் குடும்ப நண்பராகவே ஆகிவிட்டார். அதன்பின்னர் சில சமயங்களில் பேராசிரியை தனது மகளுடன் சிவாவின் வீட்டுக்கு வருவது வழக்கம். அப்படி வீட்டுக்கு வந்த பேராசிரியையின் மகளைத்தான் சூர்யா விரும்பினார். இது சிவாவுக்கு தெரியவந்தபோது கடும் கோபம் கொண்டார்.

கனிமொழியுடன்  சூர்யா
கனிமொழியுடன் சூர்யா

ஆனால் அந்தப்பெண்ணையே திருமணம் செய்து கொள்ளப்போவதாக தந்தையிடம் உறுதியாக கூறினார் சூர்யா. சிவா மறுத்தார். அதன் விளைவாக தந்தையின் எதிர்ப்பையும் மீறி அந்தப் பெண்ணை கைப்பிடித்தார் சூர்யா. அன்றோடு தந்தை மகன் உறவு அறுந்து போனது. அதிலிருந்து இன்று வரை தனது மாமியாரான பேராசிரியையின் வீட்டில் தான் வசித்து வருகிறார் சூர்யா.

திருமணத்துக்குப் பின் கட்சியில் தானும் ஒரு ஆளாகிவிட வேண்டும் என்று மும்முரம் காட்டிவந்தார் சூர்யா. ஆனால் ஒருவரும் மதிக்கவில்லை. கே.என். நேருவின் ஆதரவாளராக மாறி அவரையே சுற்றி வந்தார். அதனால் ஏதும்பயன் இல்லை. அதனையடுத்து கனிமொழி இல்லத்திற்குச் சென்று வந்து கனிமொழி ஆதரவாளராக தன்னை காட்டிக் கொண்டார். அதனாலும் பெரிதாக பயன் ஒன்றுமில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதிக்கு பணம் கட்டினார். அதற்காக கனிமொழி, உதயநிதி ஆகியோரை அடிக்கடி சென்று சந்தித்தார். ஆனாலும் அவர் விரும்பியது நடக்கவில்லை. அதனால் மனம் வெறுத்துப் போயிருந்தார்.

இந்த நிலையில்தான் பாஜகவில் ஆள்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. அதில் இவருக்கும் தூது வந்தது. திமுகவிலிருந்து பாஜகவுக்கு சென்ற மதுரை டாக்டர் சரவணன் மூலமாக இவருக்கு அழைப்பு வந்தது. சில நாட்கள் யோசித்தவர் பாஜகவுக்கு செல்ல ஒப்புக் கொண்டார். மாநில அளவிலான ஒரு பதவி தரப்படலாம் என்று ஆசைவார்த்தை அளிக்கப்பட்டது. அதன்விளைவாக தற்போது பாஜகவில் இணைந்திருக்கிறார் சூர்யா.

சூர்யா பாஜகவுக்கு சென்றுவிட்டதால் திருச்சியில் திமுகவுக்கு எதுவும் பாதிப்பா என்றால் சிறிய பாதிப்பு கூட இல்லையென்றே சொல்லலாம். சூர்யாவுக்கென்று தனிப்பட்ட ஆதரவாளர்கள் யாரும் இல்லை. ஒருசில நண்பர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும் கட்சிக்காரர்கள் இல்லை. அதேநேரத்தில் அவர் போனதால் திமுகவுக்கு கொஞ்சம் நிம்மதிதான் என்கிறார்கள். ஏனெனில் தனிப்பட்ட விதத்திலும் சூர்யாவிற்கு திருச்சியில் நல்ல பெயரில்லை. அடிதடி வழக்குகளில் சிக்கி இருக்கிறார். சென்னையிலும் நட்சத்திர ஓட்டலில் தகராறு செய்ததாக அவர் மீது புகார் உண்டு. இப்படி வம்பு வழக்குகளில் ஈடுபடுவதால் கட்சிக்கு கெட்டபெயர் ஏற்பட்டது. அதனால் அவர் போனவரை சரிதான் என்கிறார்கள்.

தன் பேச்சை மீறி திருமணம் செய்தது மட்டுமில்லாமல் சிவாவின் தனிப்பட்ட இந்தமாதிரியான பழக்க வழங்கங்களும் சிவாவுக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் அவரை விட்டு முழுவதுமாக விலகியே இருந்தார். பலமுறை பஞ்சாயத்து வந்தபோதும் அவர் மகனை தன்னுடன் இணைத்துக் கொள்ளவில்லை. செலவுக்குப் பண கேட்டு ஆள் வந்தால்கூட தனக்குப்பிறகு தனது சொத்துகள் அவனுக்குத்தானே என்று சொல்லி அப்போதைக்கு எதுவும் தர மறுத்துவிடுவாராம்.

சூர்யா பாஜகவுக்கு செல்லப் போவதாக தெரிந்த உடனேயே அவன் எப்படியாவது போகட்டும், எங்கேயாவது போய் தொலையட்டும் என்று தான் சொன்னாராம். அதற்கெல்லாம் அவர் கவலைப்படவும் தயாராகயில்லை. ஆனால் அவர் சென்ற பிறகு திமுகவை பலரும் கிண்டல் செய்வதும், சூர்யாவே திமுகவை கடுமையாக தாக்குவதும் கட்சித் தலைமையை வருத்தம் கொள்ளச் செய்திருக்கிறது. சிவாவிடம் தொடர்பு கொண்டு இது குறித்து பேசியதாகச் சொல்கிறார்கள். அதனால் இப்போது மிகவும் நொந்து போயிருக்கிறார் என்கிறார்கள். இதுகுறித்து யாரிடமும் எதுவும் பேசாமல் தவிர்க்கிறாராம்.

சூர்யாவின் இந்தசெயல் சிவாவின் சொந்த விருப்பத்தையும் சிதைத்துவிடும் அளவுக்குக் கொண்டுவந்திருக்கிறது. கட்சியில் தற்போது நிர்வாகிகள் தேர்தல் நடந்து வரும் நிலையில், தனக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை தாண்டி இன்னும் முக்கிய பதவியைத் தரவேண்டும் என்று தலைமையிடம் கேட்டிருந்தாராம். தனக்கு சமகாலத்தவர்களான பலரும் கட்சியில் முக்கிய பதவியில் இருக்கும்போது தனக்கும் அதுபோன்ற முக்கியத்துவம் உள்ள பதவி தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். தலைமையும் பரிசீலித்து வந்தது.

இந்த நிலையில்தான் சிவாவின் மகன் பாஜகவுக்கு பாய்ந்திருக்கிறார். இது சிவாவுக்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. சசிகலா புஷ்பாவுடன் இணைத்துப் பேசப்பட்ட தனது தந்தை மீது திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மாறாக மறுமுறையும் அவருக்கு மாநிலங்களவை பதவி கொடுத்து அழகு பார்த்தது என்று சூர்யா குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், கட்சியின் முக்கியத்துவம் வாய்ந்த பதவியை சிவாவுக்கு வழங்க திமுக முன்வருமா? என்பது கேள்விக்குறிதான்.

இங்கே மகன் தந்தைக்காற்றும் உதவி தந்தையை அம்பலப்படுத்துவதும், அவரது நிலையிலிருந்து குறையச் செய்வதுமாக இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in