திமுக கூட்டணிக்கும் திகில் கொடுக்கிறதா அதிமுக?

திமுக கூட்டணிக்கும் திகில் கொடுக்கிறதா அதிமுக?
Updated on
4 min read

ஆளும் திமுக மக்களவைத் தேர்தலுக்கு ஆளுக்கு முன்பாக தயாராகிவிட்டது. மண்டலவாரியாக அடுத்தடுத்து பூத்கமிட்டி முகவர்களின் கூட்டங்களை நடத்திவரும் அக்கட்சி, அடுத்தகட்டமாக தனது கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் இட ஒதுக்கீட்டு பேச்சுவார்த்தையையும் தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டுள்ள அதிமுக, தனது தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதிமுகவின் இந்த முடிவால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அங்கேயே நீடிக்குமா...  தொகுதிப் பங்கீடுகள் சுமூகமாக நடக்குமா? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் ரெக்கை கட்டத் தொடங்கியுள்ளன.

“புதிய கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம்” என அதிமுக அறிவித்த அதேநாளில் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் பூர்வாங்க தேர்தல் பேச்சுவார்த்தையை தொடங்கியிருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. அதிமுக - பாஜக  கூட்டணி முறிவால் திமுகவின் கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

மக்களவைத் தேர்தலில் 30 இடங்களில் போட்டியிட திமுக தீர்மானம் வைத்திருக்கிறது. எஞ்சிய இடங்களில் காங்கிரஸுக்கு கணிசமான தொகுதிகளைத் தந்துவிட்டு பிற கட்சிகளுக்கு தலா ஒரு சீட் வீதம் தரலாம் என்பதும் திமுகவின் கணக்கு. இதை மனதில் வைத்தே சமீபத்தில் கூட்டணிக் கட்சிகள் கேட்கும் தொகுதிகளில் அந்த கட்சிகள் அமைத்துள்ள பூத் கமிட்டி லிஸ்ட்டை கேட்டு திமுக தலைமை அறிவுறுத்தியது. கூடுதல் சீட்களை கேட்கும் கூட்டணிக் கட்சிகளின் உண்மையான செல்வாக்கை அவர்களுக்கு உணர்த்துவதற்காகவே இந்த ஏற்பாடு என்கிறார்கள். ஆனால், திமுகவின் இந்த ’உணர்த்தலை’ கூட்டணிக் கட்சிகள் அவ்வளவாக ரசிக்கவில்லை.

ஆனாலும், திமுகவை விட்டால் வேறு வழியில்லை என்பதால் இதையெல்லாம் கூட்டணி தோழர்கள் இதுவரை சகித்துக் கொண்டார்கள். ஆனால், இனிமேல் அப்படி இருப்பார்களா என்று சொல்வதற்கில்லை. தங்களுக்கான பங்கீட்டை திமுக தரமறுத்தால் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு தாவக்கூடும். அதற்கான கதவுகள் அவர்களுக்கு இப்போது விசாலமாக திறந்திருக்கின்றன.           

ஆனால், அதிமுகவிடம் சென்றால் ஓரிரு இடங்கள் கூடுதலாக கிடைக்கலாம் என்பது மட்டுமே சாதகமான விஷயம் என்றாலும் கிடைத்த இடங்களில் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு சாதாரணமில்லை என்பதும் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு தெரியும். அதேசமயம், திமுக கூட்டணியில் ஒரு சீட் கிடைத்தாலும் அதை வெல்வதற்கான அனைத்து உபாயங்களையும் திமுகவே கவனித்துக்கொள்ளும்.   

அதேசமயம் வெறும் சீட்டுக்கான உறவாக இல்லாமல் கூட்டணிக் கட்சிகளுடன் உணர்வுபூர்வமாக நெருக்கம் காட்டிவரும் திமுக தலைவர் ஸ்டாலின், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் இணைப்பையும் பந்தத்தையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார். அதனால்தான் கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என்ற பேச்சுக்கள் எழுந்த வேகத்திலேயே கூட்டணிக் கட்சிகள் சார்பில் திமுக ஆதரவு பேச்சுக்கள் அழுத்தமாக வந்து விழுந்திருக்கின்றன. 

விசிக சார்பில் இதுகுறித்துப் பேசிய வன்னி அரசு, “2021-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களுக்கு 6 இடங்களே ஒதுக்கப்பட்ட போதும், பாஜகவை வீழ்த்தவே திமுக கூட்டணியில் இடம்பெற்றோம். ஆகவே, திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக இடம்பெற்றிருப்பது நாட்டை பாதுகாக்கவே.

ஆனால், பாஜகவுவுடன் அதிமுகவுக்கு கூட்டு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்ததுமே, விசிக அதிமுக கூட்டணிக்கு வரப்போகிறது என அரசியல் புரோக்கர்கள் ஜோசியம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். பாஜகவை அதிமுக இப்போது எதிர்ப்பது கோட்பாட்டு அடிப்படையில் இல்லை என்பதை விசிக சரியாக புரிந்துகொண்டுள்ளோம். எங்களிடம் எந்த ஊசலாட்டமும் இல்லை. திமுக தலைமையிலான கூட்டணியால் மட்டுமே பாஜக எனும் தீய சக்தியை அழித்தொழிக்க முடியும்” என தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசனும், “எந்தக் காலத்திலும் அதிமுகவுடன் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைப்பதற்கு வாய்ப்பில்லை” என்று சொல்லி இருக்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ, “திமுக கூட்டணியில்தான் மதிமுக இருக்கிறது. கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை” என்று குறிப்பிட்டார். இதுபோலவே மற்ற கட்சிகளின் தலைவர்களும் தாங்கள் திமுகவுடன்தான் நிற்போம் என்பதை உறுதியாகச் சொல்லிவருகிறார்கள். 

திமுக கூட்டணியில் தங்களது இருப்பை உறுதிசெய்திருக்கும் அதன் கூட்டணிக் கட்சிகள், “அதிமுக - பாஜக கூட்டணி முறிவு என்பது திட்டமிட்ட நாடகம். பாஜகவுடன் இருந்தால் சிறுபான்மையினர் வாக்குகள் தங்களுக்குக் கிடைக்காது என்பதால் அதிமுக பாஜகவை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிறது. பாஜக தலைமையின் ஒப்புதலுடனேயே இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். பாஜக இல்லாமல் போட்டியிட்டால் குறைந்தது 10 தொகுதிகளிலாவது தங்களால் வெல்ல முடியும் என நம்புகிறது அதிமுக. இருவரும் கூட்டாக நின்று அனைத்துத் தொகுதிகளிலும் தோற்பதைவிட அதிமுக தனித்து நின்று எத்தனை தொகுதிகளில் வென்றாலும் அது தங்களுக்கு சாதகமே என பாஜகவும் கருதுகிறது. இப்படியெல்லாம் திட்டம் போட்டுத்தான் பிரிவு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்” என்கின்றன.

அதுமட்டுமின்றி, திமுக  கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த பிரிவு நாடகத்தை நடத்தியிருக்கிறார்கள் என்றும் உறுதியாகச் சொல்லும் திமுக கூட்டணிக் கட்சிகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விசிக தலைவர் திருமாவளவனை எடப்பாடி பழனிசாமி அக்கறையுடன் நலம் விசாரித்ததையும் சுட்டிக்காட்டுகிறார்கள். ஏற்கெனவே இருவரும் நட்பில் இருப்பதால் திருமாவளவன் அதிமுக கூட்டணிக்கு செல்லக்கூடும் என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குவதாக திமுகவின் தோழமைக் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. 

திமுகவுக்குள்ளும் தேர்தலை முன்னிறுத்தி பிரச்சினைகள் தலைதூக்கி இருக்கின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணிக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அது நிச்சயமானால் மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு கோவை தொகுதியைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் வரலாம். அப்படியொரு சூழல் வந்தால் அந்தத் தொகுதியை இப்போது கையில் வைத்திருக்கும் மார்க்சிஸ்ட்களுக்கு எந்தத் தொகுதியை ஒதுக்குவது என்ற சர்ச்சை வெடிக்கலாம்.

அதேபோல் கடந்த முறை ராமநாதபுரம் தொகுதியை முஸ்லிம் லீக் கட்சிக்குக் கொடுத்த திமுக, இம்முறை அந்தத் தொகுதியில் தானே களமிறங்க கணக்குப் போடுகிறது. அதற்குப் பதிலாக வேலூர் தொகுதி லீக்கிற்கு ஒதுக்கப்படலாம் என்கிறார்கள். அப்படி நடந்தால், தற்போது வேலூரின் சிட்டிங் எம்பி-யாக இருக்கும் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு என்ன செய்வது என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது.

இதுகுறித்து எல்லாம் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பேசினோம்.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

”1967-ல் தொடங்கி இதுவரை திமுக அமைத்த கூட்டணிகளிலேயே தற்போதைய திமுக தலைவர் அமைத்திருக்கும் கூட்டணி போல தொடர்ந்து ஐந்தாண்டுகள் நிலைத்து நீடித்த கூட்டணி எதுவும் இல்லை என்பது அரசியல் வரலாறு.  எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால்... திமுக கூட்டணிக்குள் எந்தவிதமான குழப்பமும் சிக்கல்களும் இதுவரை இல்லை; இனியும் ஏற்படாது.  அனைத்துக் கட்சிகளுமே ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டிருக்கிறோம்.  கூட்டணியில் குழப்பம் ஏற்படும் எனதற்காகத்தான் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த அன்றே நாங்கள் தேர்தல் பேச்சை தொடங்கினோம் என்பது தவறான கருத்து.                                          

தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இதெல்லாம் இன்னும் தொடங்கப்படவே இல்லை. திமுகவுக்கென்று ஒரு முறை இருக்கிறது.  பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்து அந்தக் குழு மூலமாக ஒவ்வொரு கட்சியாக அழைத்துப் பேசுவோம். அப்படி இருக்கும்போது திடீரென்று நாங்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டோம் என்று சொல்வது தவறு. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் அவர்கள் கட்சியின் பவள விழா அழைப்பிதழை கொடுப்பதற்காக வந்தார்கள். அவ்வளவுதான். 

கோவையில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட கமல்ஹாசன் இடம் கேட்கிறார் என்பதெல்லாம் யூகங்கள். பத்திரிகைகள் எதை வேண்டுமானாலும் யூகித்து எழுதலாம். தேர்தலுக்குள் இதுபோல ஆயிரம் யூகங்கள் வரும். அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. ஆனால், திமுக கூட்டணிக்குள் எந்தவித குழப்பமும் வரவே வராது என்பது மட்டும் உறுதி” என்று அடித்துச் சொன்னார் ஆர்.எஸ்.பாரதி. 

தங்கள் கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் வராது என திமுக தரப்பில் அடித்துச் சொல்கிறார்கள். ஆனால் அந்த உறுதியைத் தகர்க்கும் விதமாக, திமுக கூட்டணியில் இருக்கும் சிறு கட்சிகளுக் கெல்லாம் மறைமுக தூது அனுப்ப ஆரம்பித்துவிட்டது அதிமுக. தேர்தல் நெருங்க நெருங்க இந்த நடவடிக்கைகளை அதிமுக இன்னும் துரிதப்படுத்தும். அதை எப்பாடி சாதுர்யமாக சமாளிக்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது திமுகவினரின் அரசியல் சாணக்கியம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in