'ஒற்றைத் தலைமை' தீர்மானம் நிறைவேறுமா?- உயர் நீதிமன்ற உத்தரவால் ஈபிஎஸ் `டீம்' குழப்பம்

'ஒற்றைத் தலைமை' தீர்மானம் நிறைவேறுமா?- உயர் நீதிமன்ற உத்தரவால் ஈபிஎஸ் `டீம்' குழப்பம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வின் உத்தரவால் எடப்பாடி தரப்பு தீவிரமாக இருந்த 'ஒற்றைத் தலைமை' தீர்மானம் நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடை இல்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை அடுத்து, ஓபிஎஸ் தரப்பு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மேல் முறையீடு செய்திருந்தது. அந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் நேற்று இறுதி செய்யப்பட்டுள்ள 23 தீர்மானங்கள் தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது என உத்தரவிட்டுள்ளனர். மற்ற தீர்மானங்கள் குறித்து விவாதிக்கலாம், ஆனால் முடிவெடுக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதனால் ஈபிஎஸ் தரப்பினர் உறுதியாக இருந்த ஒற்றைத் தலைமை தீர்மானம் பொதுக்குழுவில் கொண்டு வரப்படுவது கடினம். அதனால் அவர்களின் எண்ணம் நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் எடப்பாடி தரப்பினர் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக கட்சியின் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் ஈபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக இருந்தும் இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமையை கொண்டு வரமுடியுமா என்ற நிலையை இந்த தீர்ப்பு உருவாக்கி இருப்பது அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

ஆனாலும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மதிப்போம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் ஓபிஎஸ் தரப்பினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பசுமைவழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தின் முன் திரண்ட அவரது ஆதரவாளர்கள் ஆடிப்பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நீதிமன்ற உத்தரவையும் மீறி ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வரப்படுமா? அப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கும்? என்பதெல்லாம் தொண்டர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in