பண்ருட்டியார் சந்திப்பு...
பண்ருட்டியார் சந்திப்பு...

பண்ருட்டியாருடன் சந்திப்பு; சாதுர்யமாக காய்நகர்த்தும் சசிகலா!

அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும்?

தமிழக அரசியல் சதுரங்கத்தில் தற்போது வெட்டப்படும் காயாக இருக்கிறது அதிமுக. அந்தக் கட்சியை ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் என நான்கு தலைகள் நான்கு மூலைக்கு இழுக்கிறார்கள். இவர்களில் வலுவான அணியாக இருக்கும் ஈபிஎஸ்சுக்கு மத்தியிலிருந்து வரும் அழுத்தம் அந்த தரப்பை நிம்மதியிழக்கச் செய்திருக்கிறது. இந்தநிலையில், மற்ற மூன்று தரப்பும் ஒன்றிணைவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது தெரியத் தொடங்கி இருக்கின்றன.

சசிகலா
சசிகலா

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தினகரனுக்கு அளித்த வரவேற்பும், பண்ருட்டி ராமச்சந்திரனை சசிகலா சந்தித்ததும் அதன் ஒருபகுதியாகவே பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் சசிகலா, இன்னொருபக்கம் தினகரன் என மன்னார்குடி குடும்பம் மீண்டும் களத்தில் மும்முரமாக செயல்பட்டு தங்களுக்கான ஆதரவை ஒன்றிணைக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறது. தினகரன் தனியாக ஒரு கட்சியை நடத்திக்கொண்டே ஓபிஎஸ் ஆதரவாளர் களை திரட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். சசிகலாவோ ஈபிஎஸ் முகாமிலிருந்தே தனக்கான ஆதரவாளர்களைத் திரட்டும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார். இந்த இரண்டு நகர்வுகளும் இப்போதைக்குத் தனித்தனி பாதையாகத் தெரிந்தாலும் பின்னாளில் ஒற்றைப் புள்ளியில் ஒன்றிணையும் போது அதற்கான பலன் பெரிய அளவில் இருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சிறை மீண்ட சமயத்தில் உற்சாகமாகவே இருந்த சசிகலா, அதற்கடுத்த நாட்களில் அமைதியானார். ஒருகட்டத்தில், அரசியலில் இருந்தே ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்தார். பிறகு, சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்காக வாய்ஸ் கொடுத்தார். எங்கிருந்தோ வந்த அழுத்தத்தின் காரணமாக இப்படி மாறிமாறி முடிவுகளை எடுத்த சசிகலா, தற்போது எதற்கும் துணிந்துவிட்டார். அடித்து ஆடாமல் இன்னமும் அமைதிப் புயலாக இருந்தால் எல்லாம் கைமீறிப் போய்விடும் என்பதால் எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் துணிந்து அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் வேகம்காட்டத் தொடங்கி இருக்கிறார் சசிகலா.

சசிகலாவைக் கொஞ்சம் அடக்கிவைப்பதற்காக அமலாக்கத்துறை மூலம் அவரது 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி பயம் காட்டியது பாஜக. ஆனாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொண்டர் தரிசனத்துக்குப் புறப்பட்டுவிட்டார். மாவட்ட வாரியாக தனது ஆதரவாளர்களை சந்தித்து வரும் சசிகலா, அதிமுகவிலிருந்து ஒதுங்கி இருக்கும் மக்கள் செல்வாக்கான மனிதர்கள் பலரையும் தொடர்பு கொண்டு பேசிவருகிறார். அதற்கு முன்னதாக, தம்பி திவாகரனின் கட்சியைக் கலைக்கவைத்து அவரை தனக்கு அருகில் வைத்துக்கொண்டார்.

திவாகரன் கட்சியை இணைத்தபோது...
திவாகரன் கட்சியை இணைத்தபோது...

இப்போது ஈபிஎஸ் தரப்புக்கு தலைவலி கொடுக்கும் வேலையையும் கச்சிதமாக திட்டமிட்டு காலம் பார்த்து கையிலெடுத்திருக்கிறார் சசிகலா. தன்னை அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என்ற உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு செய்திருப்பதுகூட ஒருவகையில் பார்த்தால் ராஜதந்திரமான முயற்சிதான் என்கிறார்கள். ஈபிஎஸ்சுடன் முட்டிக்கொண்டு நிற்பதால் நீதிமன்றத்தில் இப்போது தனக்கு எதிரான பழைய வாதங்களை முன்வைக்காது ஓபிஎஸ் தரப்பு என்பது சசிகலாவின் கணிப்பு.

மத்திய அரசு ஈபிஎஸ்சுக்கு கொடுக்கும் நெருக்கடிகளும் தங்களுக்கு சாதகமான விளைவைத் தரும் என்பதும் சசிகலாவின் எதிர்பார்ப்பு. அதிமுக தலைகளுக்கு எதிரான குட்கா வழக்கு, நெடுஞ்சாலைத் துறை ஊழல் உள்ளிட்டவற்றில் மத்திய அரசு திடீர் வேகம் காட்டுவது ஈபிஎஸ் தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இப்படி பலமுனை தாக்குதல்கள் மூலம் ஈபிஎஸ் முகாம் கலகலக்கும் நேரம் பார்த்து அதிமுகவுக்குள் அடியெடுத்துவைக்க வேண்டும் என்பது சசிகலாவின் திட்டம். ஈபிஎஸ் தரப்பு நெருக்கடிக்குள் இருக்கும்போது அதிமுக தொண்டர்கள் நிச்சயம் தன்னை ஏற்றுக்கொள்வார்கள் என்பதும் சசிகலாவின் எதிர்பார்ப்பு என்கிறார்கள்.

தொண்டர் தரிசனத்தில் சசிகலா...
தொண்டர் தரிசனத்தில் சசிகலா...

சசிகலாவின் சாதுர்யமான அரசியல் ஆட்டம் இப்படி இருக்க, தினகரனும் களத்தில் சுறுசுறுப்பாகி இருக்கிறார். பேரவைத் தேர்தலுக்குப் பிறகு கட்சி நடவடிக்கைகளில் அவ்வளவாய் ஆர்வம்காட்டாமல் இருந்த தினகரன், இப்போது மாவட்ட வாரியாக அமமுக செயல்வீரர் கூட்டங்களை நடத்தி வருகிறார். அப்படியே, தனது பழைய சகாவான ஓபிஎஸ்சையும் அவரது ஆதரவாளர்களையும் தனது வட்டத்துக்குள் இழுக்கும் வேலைகளையும் கச்சிதமாகச் செய்கிறார். அதற்கான தொடக்கம் தான் தேனி மாவட்டத்தில் தினகரனை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சந்தித்த நிகழ்வு. ஏற்கெனவே, ஓபிஎஸ்சுக்கும் தினகரனுக்கும் மறைமுக நட்பு உண்டு என்று பேசப்படும் நிலையில், இப்போது தனக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டை சமாளிக்க ஓபிஎஸ் தினகரனை பட்டவர்த்தனமாகச் சந்தித்துப் பேசினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த இடத்தில், ’’இதுவரை ஓபிஎஸ் - டிடிவி தினகரன் சந்திப்பு நடக்கவில்லை. இனிமேல் சந்திப்பார்களா என்பதையும் தற்போது சொல்ல முடியாது. ஆனால், தொண்டர்கள் நினைப்பது நடக்கும்” என்று ஓபிஎஸ்சின் மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி., கூறியிருப்பதையும் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.

தினகரனுக்கு வரவேற்பளித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்...
தினகரனுக்கு வரவேற்பளித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்...

தினகரன், சசிகலா, ஓபிஎஸ் - இந்த மூவரும் சாதி அடிப்படையில், மனக்கசப்புகளை மறந்து கைகோக்க வேண்டும் என முக்குலத்தோர் அமைப்புக்களும் முனைப்புக் காட்டுகின்றன. இதை வலியுறுத்தி அந்த அமைப்புகள் இந்த மூவருக்கும் கடிதம் எழுதி இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

அப்படி இந்த மூவரும் கைகோத்தால் அது கொங்கு அரசியல் நடத்தும் ஈபிஎஸ் அணிக்கு நிச்சயம் சவாலை உண்டாக்கும். அதைவைத்து பாஜகவின் பார்வையையும் தங்கள் பக்கம் திருப்பமுடியும் என நினைக்கிறார்கள். இன்றைய தேதியில் பாஜக யார் பக்கம் நிற்கிறதோ அந்த அணி தான் தாக்குப்பிடிக்க முடியும். சசிகலா தரப்புக்கு ஆதரவாக பாஜக காய்நகர்த்துகிறது என்று தெரிந்தாலே ஈபிஎஸ் முகாமிலிருந்து பலரும் அந்தப் பக்கம் தாவிவிடுவார்கள். அதன் பிறகு கட்சி எளிதில் சசிகலா கைக்குள் வந்துவிடும் என்பது முக்குலத்தோர் அமைப்புகளின் கணிப்பு.

சசிகலாவுடன் தினகரன்
சசிகலாவுடன் தினகரன்

இந்த நிலையில், சசிகலாவுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், ‘’பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பாக இடைக்காலம், கடைக்காலம் என்பதெல்லாம் தற்காலிகம்தான். மக்கள் யாரை நம்புகிறார்கள் என்பதுதான் முக்கியம். எல்லா பொதுக்குழு உறுப்பினர்களும் சேர்ந்துதான் எம்ஜிஆரை கட்சியை விட்டு வெளியேற்றினர். அதனால் என்ன நடந்து விட்டது?” என்று கேட்டதுடன், “எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்டவர்கள் தான் அவரைப் பொதுச்செயலாளராக தேர்வு செய்தனர். தற்போது கட்சியில் உள்ள நிர்வாகிகள் முறைப்படி கட்சி உறுப்பினர்களால் தேர்வானவர்கள் இல்லை. சாணியில் பிள்ளையார் பிடித்து, அந்தப் பிள்ளையாரை செய்தவர்களே அதை விழுந்து கும்படுவது போலதான் தற்போது பொதுச் செயலாளர் நியமனம் உள்ளது” என்று ஈபிஎஸ்சை கடுமையாகச் சாடினார்.

அரசியல் சாணக்கியரான பண்ருட்டியாரின் சாதுர்யம் தமிழக அரசியல் அறியாதது அல்ல. அப்படிப்பட்டவர் சசிகலாவை சந்தித்துப் பேசியதையும் அவர் சொன்ன கருத்துகளையும் அத்தனை எளிதாக கடந்துவிடமுடியாது. பண்ருட்டியாரின் யோசனைப்படி இன்னும் சில அதிமுக முன்னோடிகளையும் தேடிச் சென்று சந்திக்கும் பிளானும் சசிகலா வசம் இருப்பதாகச் சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானர்கள். இவை அனைத்தும் கைகூடினால் அதிமுகவும் சசிகலாவுக்கு தொட்டும்விடும் தூரம் தான்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in