
திருச்சி மாநாடு திருப்புமுனை தராத நிலையில், நம்பியவர்கள் எல்லாம் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க, யாரை எதிர்த்துத் தர்மயுத்தம் நடத்தினாரோ அவருடனேயே கைகுலுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார் தர்மயுத்த நாயகன் ஓபிஎஸ்!
2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஜெயலலிதா நினைவிடத்தில் தர்மயுத்தம் தொடங்கி தமிழக அரசியலில் பரபரப்பை பற்றவைத்தவர் ஓபிஎஸ். அப்போது அவர் கூறிய பல கருத்துகள் அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அடுக்கிய ஓபிஎஸ், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் சந்தேகம் கிளப்பி சசிகலா வகையறாக்களுக்கு எதிராக தமிழகத்தையே கொந்தளிக்க வைத்தார். அன்றைக்கு யாருக்கு எதிராக சங்கநாதம் எழுப்பினாரோ அவர்களுடனேயே இன்றைக்கு கைகோத்திருக்கிறார் ஓபிஎஸ். கேட்டால், “அதெல்லாம் பழைய கதை” என்கிறார். “நடந்ததையெல்லாம் பேசிக்கொண்டே இருந்தால் முரண்பாடு தான் மிஞ்சும்” என்று முட்டுக் கொடுக்கிறார் தற்போது ஓபிஎஸ்ஸுக்கு அரசியல் வழிகாட்டியாக வாய்த்திருக்கும் முன்னாள் அமைச்சர் பண்ருட்டியார்.
தினகரனைச் சந்தித்த பின், “நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தைக் காக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளதால் தான் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது’’ என்று சொல்லி இருக்கிறார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ்ஸின் இந்த முயற்சி அவரது அரசியல் எதிர்காலத்தை மறுபடியும் பிரகாசமாக்குமா என்ற கேள்வியுடன் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் பேசினோம்.
“ஓபிஎஸ் - டிடிவி ஸார் சந்திப்பு சந்தர்ப்பவாத சந்திப்பு. இதனால் தமிழகத்தில் எவ்வித தாக்கமும் ஏற்படப்போவதில்லை. அதனால் இதை நாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் இப்போது தன்னுடைய அடையாளத்தைத் தொலைத்துவிடக்கூடாது என்பதற்காக அடைக்கலம் தேடிச் சென்றிருக்கிறார்.
நேற்று கட்சியில் இருந்து நீக்கி இன்று இந்தச் சந்திப்பு நிகழவில்லை. கடந்த 10 மாதங்களாக நீதிமன்றம் சென்று ஓபிஎஸ் வைத்த வாதங்கள் தோல்வியடைந்த பின்னர், தொண்டர்களிடத்தில், மக்களிடத்தில் நம்பிக்கை இழந்த பின்னர், யாரை எதிர்த்தாரோ... எந்தக் குடும்பம் அதிமுகவில் இருக்கக்கூடாது என்று தர்மயுத்தம் நடத்தினாரோ அந்தக் குடும்பத்திடம் சரணாகதி அடைந்திருக்கிறார்.
‘சின்னம்மான்னா யாரும்மா?’ என்று கேட்டவர் இன்றைக்கு மூச்சுக்கு முந்நூறு முறை ‘சின்னம்மா’ என்கிறார். இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மக்களின் அங்கீகாரத்தைப் பெற முடியாமல் தோற்றுப்போன தலைவர்கள் இருவர் சந்தித்துள்ளனர். இதனால் எந்தவிதத்திலும் தாக்கம் ஏற்படாது. எம்ஜிஆர் கண்ட வெற்றிச் சின்னமான இரட்டை இலை எங்களிடம் இருக்கும் வரை அவர்களால் நிச்சயம் எங்களை ஒன்றும் செய்யமுடியாது’’ என்றார் அவர்.
ஆர்.பி.உதயகுமாரின் கருத்தை அமமுக துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழனிடம் சொன்னோம். பலமாக சிரித்தவர், ‘’அதிமுகவினர் தற்போது பதற்றத்தில் உள்ளனர். எது நடந்துவிடக் கூடாது என நினைத்தார்களோ அது இன்றைக்கு நடந்துள்ளது. அதைச் ஜீரணித்துக் கொள்ள முடியாமல் வாய்க்கு வந்ததை எல்லாம் உளறுகிறார்கள்.
இவர்கள் வலுவடைந்துவிட்டால் நாம் இல்லாமல் போய்விடுவோமோ என்ற அச்சத்தில் பேசுகிறார்கள். இணைந்து செயல்பட வேண்டுமென தொண்டர்கள், நிர்வாகிகள் விரும்பினார்கள். அதுதான் இன்றைக்கு நடந்துள்ளது. குறிப்பிட்ட சாதிக்குள் எங்கள் பொதுச்செயலாளரை அடக்கிவிட முடியாது. அமமுக ஒரு வலுவான இயக்கம் என்பதை ஓபிஎஸ் உணர்ந்துள்ளார்; மற்றவர்களும் விரைவில் உணர்வார்கள். இந்த இருவரின் சந்திப்பு தாக்கத்தை ஏற்படுத்தாது எனக் கூறுபவர்கள் சீக்கிரமே இதன் தாக்கத்தை உணர்வார்கள்” என்றார்.
ஓபிஎஸ் - தினகரன் சந்திப்பின் பின்னணியில் பாஜக இருப்பதாகவும் ஒரு பேச்சு உண்டு. ஐந்து வயதுப் பிள்ளையான அமமுக தேர்தலுக்குத் தேர்தல் பேசப்படும் கட்சியாக தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதற்கு முந்தைய மக்களவைத் தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அமமுக, குறிப்பிட்ட சதவீத வாக்குகளையும் பெற்றது. இந்த இரண்டு தேர்தல்களிலும் ஓரிடத்தில்கூட வெற்றி கிட்டவில்லை என்றாலும் கணிசமான வாக்குகளை பெற்றது அமமுக. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 40 இடங்களில் அதிமுக தோற்றுப் போனதற்கு அமமுகவும் ஒரு காரணம் எனச் சொல்லப்பட்டது.
இந்த நிலையில், ஓபிஎஸ் - தினகரன் சந்திப்பானது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக நீடிப்பதாக அமித் ஷாவே சொன்ன பிறகும் அதிமுக தரப்பிலிருந்து அண்ணாமலைக்கு எதிரான அட்டாக் இன்னும் ஓயவில்லை. இப்படியெல்லாம் இரண்டாம் கட்ட நிர்வாகிகளை வைத்து பாஜகவை சீண்டிக்கொண்டே இருந்தால் அந்தக் கட்சி தங்களைவிட்டு தானாகவே போய்விடும் என்று அதிமுக முக்கிய தலைகள் சிலர் விரும்புகிறார்கள். ஒருவேளை அப்படியான தருணம் அமையும் பட்சத்தில், டிடிவி - ஓபிஎஸ் கூட்டணிக்கு மவுசு கூடலாம்.
அது நடக்குமா?