குமரியில் இடதுசாரிகளின் காயத்துக்கு மருந்து தடவுமா உள்ளாட்சித் தேர்தல்?

உளவுத்துறை அதிர்ச்சித் தகவல்
குமரியில் இடதுசாரிகளின் காயத்துக்கு மருந்து தடவுமா உள்ளாட்சித் தேர்தல்?

குமரி மாவட்டத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி, சமீபகாலமாக அரசியல் ரீதியாக போதிய அங்கீகாரம் இன்றி குமரியில் தவித்து வந்தது. அந்தக் காயத்துக்கு உள்ளாட்சித் தேர்தல் மருந்து தடவும் வாய்ப்பு தெரிவதால், தேர்தல் முடிவை எதிர்நோக்கி உற்சாகமாகக் காத்திருக்கின்றனர் மார்க்சிஸ்ட் கட்சியினர்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 எம்எல்ஏக்கள், எம்பி என பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு இணையாக வலம்வந்த கட்சி மார்க்சிஸ்ட். ஒருகட்டத்தில் திருவட்டாறு, விளவங்கோடு தொகுதிகள் மார்க்சிஸ்ட் வசம் இருந்தன. இந்த சுற்றுவட்டாரப் பகுதியில் அதிகமாக இருக்கும் ரப்பர், முந்திரி தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு சாதகமாக இருப்பதே காரணம்.

திமுக, காங்கிரஸ் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சியின் பெல்லார்மின், இங்கு எம்பியாக 14-வது மக்களவையில் இருந்தார். தொகுதி மறுசீரமைப்பில் திருவட்டாறு தொகுதி நீக்கப்பட கம்யூனிஸ்டுகளின் வலுவான வாக்குவங்கி சிதறிப்போனது. அதன்பின்பும் விளவங்கோடு தொகுதி கம்யூனிஸ்டுகளின் கோட்டையாகவே இருந்துவந்தது. கடந்த 2016-ம் ஆண்டு மக்கள் நலக்கூட்டணியில் தங்களுக்கு செல்வாக்குள்ள தொகுதி என்பதால், விளவங்கோட்டை கேட்டுப் பெற்றது மார்க்சிஸ்ட் கட்சி. ஆனால், விளவங்கோட்டில் கணிசமான வாக்கைப் பெற்றாலும் வைப்புத்தொகையையே பறிகொடுத்தது மார்க்சிஸ்ட்.

2021-ம் ஆண்டு திமுக கூட்டணியில், அதே விளவங்கோடு தொகுதியை எதிர்பார்த்தது மார்க்சிஸ்ட் கட்சி. ஆனால், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு விளவங்கோடு ஒதுக்கப்பட, காங்கிரஸ் கட்சியின் விஜயதரணி அதே தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டார். மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் வரலாற்றிலேயே, குமரி மாவட்டத்தில் அந்தக் கட்சி போட்டியிடாத முதல் தேர்தலாகவும் அந்தத் தேர்தல் அமைந்தது. குமரி அரசியல் பயணத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதிநிதித்துவம் இல்லாமல் இப்போதுதான் அரசியல் நகர்ந்துவருகிறது.

இந்நிலையில்தான் இப்போது உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. திமுக கூட்டணியில் குமரி மாவட்டத்தில் முறிவு ஏற்பட்டு, மார்க்சிஸ்ட் கட்சியினர் நாகர்கோவில் மாநகராட்சியில் தனித்தே போட்டியிட்டுள்ளனர். இதேபோல் குளச்சல், கொல்லங்கோடு, பத்மநாபபுரம், குழித்துறை ஆகிய நான்கு நகராட்சிகளிலும் தேர்தலை சந்தித்துள்ளது சி.பி.எம்! இதில் உளவுத்துறையின் அறிக்கைப்படி, குழித்துறை நகராட்சியை மார்க்சிஸ்ட் கைப்பற்றும் என யூகித்துள்ளனர். இதேபோல் பத்மநாபபுரம், கொல்லங்கோடு நகரசபைகளிலும் கணிசமான கவுன்சிலர் இடங்களைக் கைப்பற்றும் எனவும் கூறப்படுகிறது. இதனால் மார்க்சிஸ்ட் கட்சியினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in