டெல்லி பயணம்: சொல்லி அடிப்பாரா ஸ்டாலின்?

தந்தை வழியில் தடம் பதிக்கத் துடிக்கும் தளபதி!
கருணாநிதியுடன்...
கருணாநிதியுடன்...

தன்னுடையது திராவிட மாடல் ஆட்சி என்று பறைசாற்றிக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசிய அரசியலைப் பொறுத்தவரை தனது தந்தை கருணாநிதியின் மாடலை பின்பற்றத் தயாராகிவிட்டார் என்பதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன.

யாரை ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அதில் தீவிரமாக இருப்பது கருணாநிதியின் குணாதியசம். அதனையே தற்போது ஸ்டாலினும் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார். 2024 மக்களவைத் தேர்தலில் மத்தியில் பாஜக அரசுக்கு மாற்றான ஒரு அரசை அமைக்க தனது தந்தையின் பாணியைத் தொடங்கியிருக்கிறார்.

2019 மக்களவைத் தேர்தலில் தொடங்கி அண்மையில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரைக்கும் தொடர்ந்து நான்கு தேர்தல்களில் திமுக அணி வெற்றி பெற்றதற்கு திராவிட மாடலே காரணம் என்று நம்பும் ஸ்டாலின், ஒட்டுமொத்த தேசத்திலும் அந்த மாடலை அமல்படுத்த மத்தியில் தான் விரும்பும், அல்லது தனது பங்களிப்புடன் கூடிய ஆட்சி அமையவேண்டும் என்று விரும்புகிறார். அதற்கான முதல் கட்டப் பணிகளைத்தான் தற்போது தொடங்கியிருக்கிறார்.

மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதை முன்னிறுத்தி, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் முதல்வர்களுக்கு கோரிக்கை விடுத்தார் ஸ்டாலின். "எல்லாருக்கும் எல்லாம் என்பதை அடிப்படையாகக் கொண்டதுதான் சமூகநீதியாகும். சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூகநீதி ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் இவற்றை எதிர்த்துப் போரிட முடியும். இது அரசியல் ஆதாயம் பற்றியதல்ல. மாறாக நமது குடியரசு அமையப் பாடுபட்டோர் காண விழைந்த அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்துவது பற்றியது ஆகும்" என்ற அவரது அறைகூவலை கவனித்தால் அதன்பின்னே இருக்கும் மதிநுட்பம் புரியும். மத்திய பாஜக அரசால் பாதிக்கப்படும் பல மாநிலங்கள் தெற்கிலிருந்து எழும் இந்த உரிமைக்குரலை ரசிக்கிறார்கள்.

கருணாநிதியுடன் சோனியா, ராகுல்
கருணாநிதியுடன் சோனியா, ராகுல்

இந்தநிலையில் ஏப்ரல் 2-ம் தேதி டெல்லியில் நடக்கவிருக்கும் திமுக அலுவலகமான அறிவாலயம் திறப்புவிழா அடுத்தகட்ட எதிர்பார்ப்பை தேசிய அரசியலில் ஏற்படுத்தியிருக்கிறது. இவ்விழாவில் மாநில உரிமைகள், கூட்டாட்சி தத்துவம் உட்பட தங்களின் கொள்கைகள் பற்றிய கருத்துகள் ஸ்டாலினின் பேச்சில் மையமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். முடிந்தவரைக்கும் இந்த விழாவை தேசிய அரசியலில் பாஜகவுக்கு எதிரான ஒரு வலுவான அணியை உருவாக்கும் இன்னொரு படிக்கட்டாகப் பயன்படுத்தவே திமுக பார்க்கும்.

அதேசமயம், பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒன்று திரட்ட ஏற்கெனவே மம்தாவும், சந்திரசேகரராவும் களத்தில் உள்ள நிலையில் ஸ்டாலினின் முயற்சி எந்த அளவுக்கு வெற்றிபெறும் என்பதையும் ஆராய வேண்டும். காங்கிரஸை கூட்டணித் தலைமையாக ஏற்றுக்கொள்ள மம்தாவும், ராவும் அவ்வளவாய் விரும்பவில்லை. ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்கவும் அவர்கள் தயாராக இல்லை. எனினும், ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இந்த இரண்டு தலைவர்களையும் சற்றே யோசிக்க வைத்திருக்கிறது.

மம்தா
மம்தா

அதனால் தான் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடத் தயாராக இருப்பதாக மம்தா வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார். இவரைப் போலவே சந்திரசேகரராவும் தமது எண்ணத்தை மாற்றிக் கொண்டிருக்கக்கூடும். காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரும் பாஜகவுக்கு எதிரான அணியில் கைகோர்க்கவே தயாராய் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், தமிழக முதல்வரின் டெல்லி பயணம் பாஜகவுக்கு எதிரான அரசியல் சக்திகளை ஒன்றிணைக்கும் ஒரு இணைப்புப் பாலமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியில் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை அமைத்ததும், ஆட்சியிலிருந்து விழுந்து கிடந்த காங்கிரசை எதிர்க்கட்சிகளின் துணையுடன் ஆட்சியில் அமர்த்தியதும் ஏற்கெனவே கருணாநிதி சாதித்துக் காட்டியதுதான். 1969-ல் காங்கிரஸ் கட்சி ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என பிளவுபட்டபோது, தன் வசம் 25 எம்பி-க்களை வைத்திருந்த கருணாநிதி அப்போது இந்திரா காந்தியின் பக்கம் நின்றார். அதே ஆண்டில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரசின் அதிகாரபூர்வ வேட்பாளருக்கு எதிராக இந்திரா நிறுத்திய வேட்பாளரையே ஆதரித்தார் கருணாநிதி.

எமர்ஜென்சி காலத்தில் இந்திராவை கடுமையாக எதிர்த்த கருணாநிதி தான், மீண்டும் 1980-ல், ‘நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சி தருக’ என்று அழைத்து இந்திரா காந்தி ஆட்சியில் அமரவும் உதவினார். ராஜிவ் காந்தியிடம் இருந்து விலகி வந்தபின், 1989-ல் தேசிய முன்னணி அரசை வி.பி.சிங் அமைப்பதற்கு கருணாநிதி முக்கியப் பங்காற்றினார். 1996-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காதபோது ஜனதாதளம் தலைமையில் 13 கட்சிகளை ஒன்றிணைத்து மத்தியில் ஒரு புதிய கூட்டணி ஆட்சியை அமைக்க காரணமாக இருந்ததும் கருணாநிதிதான்.

இந்திராவுடன் கருணாநிதி
இந்திராவுடன் கருணாநிதி

அப்போது காங்கிரஸ் ஆதரவில் ஐக்கிய முன்னணி அரசு அமைந்தது. 1997-ல் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொண்டது. அப்போது உடனடியாக தேர்தல் வருவதை தவிர்ப்பதற்காக தேவகவுடாவுக்குப் பதிலாக ஐ.கே.குஜராலை பிரதமராக அமரவைத்தார்கள். இதில் கருணாநிதிக்கும் பெரும்பங்குண்டு. ஆனால், அந்த ஆட்சியும் ஒரு வருடம்கூட நீடிக்கவில்லை. அதனால் 1998-ல் மீண்டும் மக்களவைக்கு தேர்தல் வந்து பாஜகவின் வாஜ்பாய் பிரதமரானார்.

காவிரி விவகாரத்தில் ஜெயலலிதாவால் வாஜ்பாய் அரசு கவிழ்க்கப்பட்டது. அடுத்து வந்த 1999 நாடாளுமன்ற தேர்தலில் மதவாத கோஷத்தை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு ராஜதந்திரமாக செயல்பட்ட கருணாநிதி, பாஜகவுடன் கூட்டணி வைத்தார். அப்போது வாஜ்பாய் தலைமையில் பாஜக அரசு அமைந்ததற்கும் கருணாநிதியும், அவரது கூட்டணித் தோழர்களும் காரணமாக இருந்தார்கள். இந்த காலகட்டங்களில் திமுகவுக்கான கூடுதல் அமைச்சர்களையும் முக்கிய இலாக்காக்களையும் கேட்டுப்பெற்றது கருணாநிதியின் இன்னொரு சாதுர்யம்.

இருப்பினும் நான்கே ஆண்டுகளில் பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியே வந்த கருணாநிதி, 2004-ல் மீண்டும் காங்கிரசுடன் கைகோத்தார். ஆக, 1996 முதல் 2014 வரை, இடையில் 13 மாதங்கள் தவிர மீதமுள்ள ஆண்டுகளில் மத்திய அரசை தீர்மானிக்கும் சக்திகளில் ஒருவராக கருணாநிதியும் இருந்தார்.

ராகுலும், ஸ்டாலினும்
ராகுலும், ஸ்டாலினும்

இந்த வரலாற்றை மீண்டும் திருப்ப முயலும் ஸ்டாலின் இதற்கான பணிகளை 2018 -ல் சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவின்போதே துவங்கிவிட்டார். ஆம், அந்த விழாவில் தான் பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிந்தார் ஸ்டாலின். இது அப்போது மற்ற மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு பிடிக்காமல் தான் இருந்தார்கள். ஆனால் இப்போது, அவர்களும் இதிலுள்ள நியாயத்தை உணர ஆரம்பித்திருக்கிறார்கள். என்னதான் மாநிலத்தில் தாங்கள் வலுவாக இருந்தாலும் மத்தியில் ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்றால் அதற்கு காங்கிரஸ் தயவும் தேவை என்பதை இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவர்கள் நன்றாகவே உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.

இத்தகைய தருணத்தில் தான் திமுக தலைவர் டெல்லிக்குப் புறப்படுகிறார். அவருக்கான பயணம் சிறக்குமா... டெல்லியை தென்னகம் ஆண்ட அந்த பழைய அரசியல் திரும்புமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in