மீண்டு(ம்) வருவாரா சுரேஷ்ராஜன்?

பழிதீர்த்தது பாஜக பாசமா... பங்காளிகளின் பகையா?
சுரேஷ் ராஜன் (நடுவில்)
சுரேஷ் ராஜன் (நடுவில்)

கால் நூற்றாண்டாக கன்னியாகுமரி மாவட்ட திமுகவை கட்டிக் காத்த முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனை நாகர்கோவில் மாநகர மேயருக்கான தேர்தல் நடந்து கொண்டிருந்த நாளில் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவித்து அதிரடி காட்டியது திமுக தலைமை.

நாகர்கோவில் மாநகராட்சியில் வெறும் 18 வார்டுகளை மட்டுமே கைப்பற்றியிருந்த பாஜக கூட்டணி மேயர் தேர்தலில் 24 வாக்குகளைக் கைப்பற்றும் சூழல் அமைந்ததே இந்த பதவி நீக்கத்தின் மையமானது. துணை மேயர் தேர்தலில் சுரேஷ்ராஜனின் ஆதரவாளரான ராமகிருஷ்ணன் போட்டி வேட்பாளராக களமிறங்கியதும் மேயர், துணை மேயர் தேர்தல்களில் பாஜக, திமுக போட்டி வேட்பாளர்கள் ஒரே எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்றதும் சர்ச்சையானது!

குமரி மாவட்டத்தின் 25 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் சுரேஷ்ராஜனின் படம் இல்லாமல் முதன்முதலாக திமுக போஸ்டர்கள் பளிச்சிடுகின்றன. தலைமையிடம் தன் கருத்தை விளக்க சுரேஷ்ராஜன் தொடர் முயற்சியில் இருப்பதாக தகவல்கள் அலையடிக்கும் நிலையில், அவர் பழையபடி திமுகவில் வலம் வருவாரா என்னும் எதிர்பார்ப்பும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மறைமுகத் தேர்தல் அன்று சுரேஷ்ராஜனுடன், மகேஷ் .
மறைமுகத் தேர்தல் அன்று சுரேஷ்ராஜனுடன், மகேஷ் .

திராவிட இயக்கத்தின் மீது கொள்கைப்பிடிப்புக் கொண்ட சுரேஷ்ராஜன், பல நெருக்கடியான தருணங்களில் குமரியில் திமுகவை தாங்கிப் பிடித்தவர். சுரேஷ்ராஜனின் மகன் தமிழுக்கும், மறைந்த திமுக சட்ட மேலவை உறுப்பினர் சங்கரலிங்கத்தின் பேத்திக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. மகன் திருமணத்தை மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்த திட்டமிட்டிருந்தவர் திடீரென திமுக பொறுப்பைத் தூக்கியதால் நிலைகுலைந்து போய்விட்டார்.

சுரேஷ்ராஜனின் தற்போதைய நிலை குறித்து நம்மிடம் பேசிய அவரது ஆதரவாளர்கள் சிலர், “சுரேஷ்ராஜன் இதுவரை கண்கலங்கிப் பார்த்ததே இல்லை. தலைமை அவரை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து தூக்கிய அன்று அவர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். கட்சியில் தீவிரமாக செயல்பட்டதால் அதிமுக ஆட்சியில் அவர் மீது மட்டுமன்றி, அவரது அம்மா, அப்பா பெயரையும் சேர்த்து சொத்துக்குவிப்பு வழக்குப் போட்டார்கள். அவரின் அம்மா, அப்பா மறையும் வரை அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்படவில்லை. இன்னமும் அந்த வழக்கு முடியவில்லை. மு.க.அழகிரியால் தளபதிக்கு கட்சிக்குள் சிக்கல் வந்தபோது குமரி மாவட்டத்தில் தளபதியின் போர்வாளாக நின்றவர் சுரேஷ்ராஜன். அப்படிப்பட்டவரை ஆரம்பகட்ட விசாரணை கூட இல்லாமல் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டது வருத்தம் தான்” என்றனர்.

மனைவியுடன் சுரேஷ்ராஜன்
மனைவியுடன் சுரேஷ்ராஜன்

மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினும், சுரேஷ்ராஜனின் மனைவி பாரதியும் நெருங்கிய தோழிகள். தென்மாவட்டங்களில் ஆன்மிக யாத்திரை சேர்ந்து செல்லும் அளவுக்கு இருவரும் நெருக்கம். சுரேஷ்ராஜன் நீக்கப்பட்ட அன்று இரவே, துர்கா ஸ்டாலினிடம் பாரதி தங்கள் தரப்பு நியாயத்தைச் சொன்னாராம். அதற்கு, “இப்போது அவர் கோபத்தில் இருக்கிறார். சீக்கிரமே உங்கள் தரப்பு விளக்கத்தைச் சொல்ல ஏற்பாடு செய்கிறேன்” என வாக்குறுதி கொடுத்தாராம்.

சுரேஷ்ராஜனின் மகனின் திருமணத்திற்கு மு.க.ஸ்டாலின் வராவிட்டாலும், துர்கா செல்வதற்கு தடை சொல்லமாட்டார் என நம்பிக் கொண்டிருக்கிறது சுரேஷ்ராஜன் தரப்பு. அதே வேளையில், பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த சுரேஷ்ராஜனை பதவியிலிருந்து நீக்கி இருப்பதால் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களை திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயமும் திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகின்றனர்.

அமைச்சர் மனோதங்கராஜ். உடன் மகேஷ்
அமைச்சர் மனோதங்கராஜ். உடன் மகேஷ்

உள்ளாட்சித் தேர்தலில் அப்படி என்னதான் உள்குத்து நடந்தது என சுரேஷ்ராஜனின் நெருங்கிய நட்புவட்டத்தில் பேசினோம். “சட்டப் பேரவைத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டார் சுரேஷ்ராஜன். இப்போது பொறுப்பில் இருப்பவர்களே அப்போது சுரேஷ்ராஜனுக்கு எதிராக உள்ளடி வேலைகளைச் செய்தனர். ‘அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று சொல்லியே பாஜகவை வீழ்த்துவதற்காக வியூகங்களை வகுக்க விடாமல் அவரை முடக்கினார்கள். சுரேஷ்ராஜன் தோற்றது பாஜகவிடம் இல்லை; திமுகவின் உள்ளடி வேலைகளில் தான். இப்போது மாவட்ட பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் மகேஷை காங்கிரசிலிருந்து திமுகவுக்கு அழைத்து வந்ததே சுரேஷ்ராஜன் தான். முன்னாள் அமைச்சர் ஆஸ்டினை தேமுதிகவில் இருந்து திமுகவுக்கு அழைத்து வந்ததும் சுரேஷ்ராஜன் தான்.

மீனா தேவ்
மீனா தேவ்

உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு அனுசரணையாக சுரேஷ்ராஜன் செயல்பட்டார் என்பது அபாண்டம். பாஜக நிறுத்திய மேயர் வேட்பாளர் மீனா தேவ் ஏற்கனவே இருமுறை நாகர்கோவில் நகரசபைத் தலைவராக இருந்தவர். 52 வார்டுகளாக இருந்த அப்போதைய நாகர்கோவில் நகராட்சியில் பாஜகவுக்கு 9 கவுன்சிலர்கள் மட்டுமே இருந்தார்கள். ஆனாலும் தனது சாதுர்யத்தால் எந்தக் குழப்பமும் இல்லாமல் அனைவருக்கும் நல்லவராக இருந்து நகராட்சி நிர்வாகத்தை நடத்தினார் மீனா தேவ். இவரைவிட இவரது கணவர் தேவ் ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்துவதில் கில்லாடி

திமுக அதிக இடங்களை வென்றிருந்தாலும் மகேஷ் மேயராக வருவதில் திமுகவில் பலருக்கும் விருப்பம் இல்லை. காரணம், மகேஷ் மேயராக உட்கார்ந்ததால் தங்களது தேவைகள் முறையாக கவனிக்கப்படாது. அதற்கு பதிலாக மீனா தேவ் மேயரானால் நாம் ஒவ்வொருவருமே மேயர் கணக்காய் அதிகாரம் செலுத்தலாம் என அவர்கள் கணக்குப் போட்டார்கள். இதையெல்லாம் தெரிந்ததால் தான் மகேஷுக்குப் பதிலாக வேறு யாரையாவது மேயராக்கலாம் என தலைமைக்கு தகவல் சொன்னார் சுரேஷ்ராஜன். ஆனால், அவர் பேச்சு எடுபடவில்லை. மகேஷையே வேட்பாளராக அறிவித்தது தலைமை. அதனால் தான் வாக்குகள் சிதறியதே தவிர சுரேஷ்ராஜனால் அல்ல” என்கிறார்கள் சுரேஷ்ராஜனுக்கு நெருக்கமானவர்கள்.

ஆனால் திமுகவில் இன்னொரு தரப்போ, மேயருக்கு போட்டியிட்ட பாஜக, துணை மேயர் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை. திமுகவும், திமுகவின் போட்டி வேட்பாளரும் மோதிக்கொண்ட துணை மேயர் தேர்தலில் போட்டி வேட்பாளரை பாஜக முன்மொழிந்தன் ரகசியம் என்ன?” என்றெல்லாம் கேள்விகளை அடுக்குகிறார்கள்.

பாஜகவுக்கு அனுசரணையாக இருந்ததாக கட்சிப் பொறுப்பில் இருந்து கட்டம் கட்டப்பட்டிருக்கிறார் சுரேஷ்ராஜன். ஆனால் தன்னைச் சுற்றி சதிவலை பின்னப்பட்டு வீழ்த்தப்பட்டதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பிவரும் சுரேஷ்ராஜன், தலைமையிடம் தன் தரப்பு விளக்கத்தைச் சொல்ல தூதுமேல் தூதுவிட்டுக் கொண்டிருக்கிறாராம். மகன் தமிழின் திருமணத்தை முன்னிட்டு தன் தரப்பு நியாயத்தைச் சொல்ல, தனக்கும் ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என நம்பிக் கொண்டிருக்கிறார்.

பார்க்கலாம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in