சொன்னதைச் செய்பவரா ஸ்டாலின்?

கேள்வி எழுப்பும் உடன்பிறப்புகள்
சொன்னதைச் செய்பவரா ஸ்டாலின்?

‘சொன்னதைச் செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம்’ என்ற தாரக மந்திரம் திமுகவினருக்கு மிகவும் பிடிக்கும். இதற்குக் காரணம் முன்னாள் முதல்வர் கருணாநிதி அடிக்கடி உச்சரித்த வார்த்தை இது! ' சொல்வதை எதையுமே செய்யாதவர்கள் திமுகவினர், தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை இந்த பட்ஜெட்டில் செய்தார்களா?' என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர்களைப் போலவே 'தேர்தலுக்கு முன் ஸ்டாலின் சொன்னதை இன்னும் ஏன் செய்யவில்லை' என திமுகவைச் சேர்ந்த சிலர் கேள்வி எழுப்புவது தான் ஆச்சரியமாக இருக்கிறது. அப்படி என்ன அவர் சொல்லி செய்யவில்லை எனக்கேட்டால், முன்னாள் முதல்வர் பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மீது தேர்தலுக்கு முன் கட்டுக் கட்டாக லஞ்சப்புகார் கொடுத்த ஸ்டாலின் இதுவரை ஒருவர் மீது கூட ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தான் அவர்கள் கூறும் குற்றச்சாட்டு.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "கடந்த 2020 டிசம்பர் 22-ம் தேதி அன்றைய தமிழக ஆளுநரான பன்வாரிலால் புரோகித்திடம் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா உள்ளிட்ட நிர்வாகிகள் மனு வழங்கினர்.

அதில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட எட்டு அமைச்சர்கள் மீது 97 பக்க ஊழல் புகார் மற்றும் அதற்குரிய ஆதாரங்களுக்கான ஆவணங்களைத் தந்தனர். அந்த புகாரின் மீது ஸ்டாலின் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை" என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் அவர்கள் கூறுகையில், "திமுக தந்த புகாரின்படி, எடப்பாடி பழனிசாமி தனது நெருங்கிய உறவினர்களுக்கு 6133.57 கோடி ரூபாய் மதிப்பிலான 6 நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை கொடுத்துள்ளார் என்றும், வருமானத்திற்கு அதிகமாக 200.21 கோடி ரூபாய் அளவுக்கு தனது உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் 19 சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதேபோல ஓ. பன்னீர்செல்வம் மீது ‘காக்னிசன்ட்’ கம்பெனி கட்டுமான அனுமதி ஊழல், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த ஊழல் ஆகிய புகார்களையும், எஸ்.பி. வேலுமணி மீது 9 பினாமி கம்பெனிகளை வைத்து அதிக விலைக்கு கிராம ஊராட்சி மன்றங்களுக்கு எல்.இ.டி விளக்குகளை கொள்முதல் செய்து 875 கோடி ரூபாய் ஊழல் செய்ததாகவும் ஆளுநரிடம் புகார் கொடுத்திருந்தனர்" என்று கூறிய திமுகவினர், இன்னும் பலர் மீது தரப்பட்ட புகார்களைப் பட்டியலிட்டனர்.

பி.தங்கமணி மீது நிலக்கரி இறக்குமதி, தரமற்ற நிலக்கரி வாங்கியது, போலி மின்சாரக் கணக்கில் ஊழல் உள்ளிட்ட 950.26 கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல் செய்ததாகவும், ஆர்.காமராஜ் கரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிய இலவச அரிசி மற்றும் விலை கொடுத்து வாங்கிய அரிசியை வெளிமார்க்கெட்டில் விற்று ஊழல் செய்ததாகவும் திமுக தலைவர்கள் மனுவில் புகார் கூறியிருந்தனர். அத்துடன் அரசு அதிகாரிகள் மாறுதல்கள் மற்றும் நியமனங்களுக்காக சி.விஜயபாஸ்கர் 20.75 கோடி ரூபாய் லஞ்சம் பெற்று வைத்திருந்த கவர்கள் வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டது என்றும், அவர் புதுக்கோட்டையில் கல்குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக கல் வெட்டியெடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி ஊழல் புரிந்ததாகவும், வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சராக இருந்த ஆர்.பி.உதயகுமார் மீது 1,950 கோடி ரூபாய் பாரத் நெட் டெண்டர் ஊழல் புகார் செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், மீன்வளத்துறை அமைச்சராக இருந்த டி.ஜெயக்குமார் மீனவர்களுக்கு வாக்கி டாக்கி கொள்முதல் செய்ததில் 30 கோடி ரூபாய் ஊழல் என்றும் ஸ்டாலின் தலைமையிலான திமுக தலைவர்கள் ஆளுநரிடம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

இதைச்சுட்டிக்காட்டும் திமுகவினர், எதிர்க்கட்சியாக இருந்த போது புகார் சொன்ன தலைவர் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகும் அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பதில் என்ன பிரச்சினை? தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஊழல் செய்த அனைத்து அமைச்சர்களும் சிறைக்கு செல்வார்கள் என்று அவர் பேசியதைச் சுட்டிக்காட்டி, இப்போது அவர் நடவடிக்கை எடுக்க தடையாக இருப்பது எது என்ற கேள்வியை முன் வைக்கின்றனர்.

இதுகுறித்து திமுக சட்டப்பிரிவு நிர்வாகிகளிடம் கேட்ட போது, "கடந்த ஆட்சியில் குற்றம் செய்த யாரும் தப்ப முடியாது. ஏற்கனவே முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோருக்கு சொந்தமான வீடு, நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குவாரிகள், பினாமிகள், உதவியாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி மீதோ, ஓ.பன்னீர்செல்வத்தின் மீதோ நடவடிக்கை எடுக்காமல் அரசு நழுவுகிறது என்ற குற்றச்சாட்டை மறுக்கிறோம். சட்டத்தின் முன் அனைவரும் சமம். எனவே, உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்பு செய்தவர்கள் கட்டாயம் தண்டனை அடைவார்கள்" என்று கூறினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in