ஆதாயம் தருமா சசிகலாவின் ஆன்மிக பயணம்?

ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் சசிகலா
ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் சசிகலா

இழந்ததை மீட்கவும், எதிரிகளை அழிக்கவும் வல்ல சக்தியைத் தரும் தெய்வங்களைத் தேடி இன்று ஒருநாள் புயல்வேக ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் சசிகலா.

எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்து விட்டுப் போன ஆட்சியும் கட்சியும் மீண்டும் தன்னிடம் வரும் என்று சிறையில் இருந்து வந்த சசிகலா ஆவலோடு எதிர்பார்த்து இருந்தார். ஆனால் அதற்கான வாய்ப்புக்கள் மிகமிகக் குறைந்து போன நிலையில் அதிமுகவை கையகப்படுத்த அரசியல் ரீதியாகவும் ஆன்மிக வகையிலும் பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து செய்துவருகிறார் சசிகலா.

அதற்காக தற்போது ஒவ்வொரு பகுதியாக ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு கோயில்களுக்குச் சென்று வருவதோடு, அப்பகுதியில் உள்ள ஆதரவாளர்களை சந்திப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அதன்படி தென் மாவட்டங்களுக்கு சென்ற சசிகலாவை ஓபிஎஸ் சகோதரர் ராஜா உள்ளிட்ட அதிமுகவினர் சந்தித்தனர்.

அந்த வகையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தஞ்சைக்கு வந்திருக்கும் சசிகலா தனது கணவர் நடராஜனின் நினைவு நாளான நேற்று விளார் சாலையில் இருக்கும் நடராஜனின் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார். அதோடு நேற்று வேறு எந்த பயணங்களையும் மேற்கொள்ளாத சசிகலா, ராகு கேது பெயர்ச்சி நாளான இன்று தனது ஆன்மிகப் பயணத்தை அதிகாலையிலேயே தொடங்கினார்.

ராகுகாலம் காலை ஏழு முப்பது மணிக்கு தொடங்கும் என்பதால் அதற்கு முன்பாகவே காலை 7.10 மணிக்கெல்லாம் தஞ்சையில் இருந்து கிளம்பிவிட்ட சசிகலா, 9 மணிக்கு ராகுகாலம் முடிந்த பிறகு கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலுக்கு வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனை முடித்துக்கொண்டு சாரங்கபாணி கோயில், சக்கரபாணி கோயில் என ஒரு சுற்று சுற்றி விட்டு, அங்கிருந்து சூரியனார் கோயிலுக்கும் சென்று வழிபடுகிறார். அதன் பின்னர் சுக்கிரன் தலமான கஞ்சனூருக்கும் செல்கிறார். மதியத்திற்குள் இந்த கோயில்களை முடித்துக்கொண்டு ராகு கேது பெயர்ச்சி நேரமான 3.13க்கு திருநாகேஸ்வரம் ராகு கோயிலில் இருக்கும் வகையில் தனது பயணத் திட்டத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார்.

இங்கு சிறப்பு வழிபாடுகளை முடித்துக்கொண்டு அதன் பின்னர் அங்கிருந்து அய்யாவாடி செல்கிறார். அங்கு அந்த சாம்ராஜ்யத்தை மீட்கவும் எதிரிகளை அழிக்கவும் வல்ல நிகும்பலா யாகம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதில் சசிகலா கலந்து கொள்கிறார். 1996-ல் ஆட்சியை இழந்த பிறகு ஜெயலலிதாவை அழைத்துக் கொண்டு வந்து 2000-மாவது ஆண்டில் இந்த அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி கோயிலில் நிகும்பலா யாகத்தை இருவரும் சேர்ந்து செய்தார்கள்.

அதன் பின்னர் 2001-ல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியைக் கைப்பற்றினார் என்பது கடந்த கால வரலாறு. அதன்படி பஞ்சபாண்டவர்கள் உட்பட பலருக்கும் எதிரிகளை அழிக்கவும் இழந்ததை மீட்கவும் அருள்பாலித்த நிகும்பலா யாகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பின் தற்போது இரண்டாவது முறையாகவும் சசிகலா கலந்து கொள்கிறார். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் தஞ்சாவூர் வந்திருந்தபோது இதேபோல நிகும்பலா யாகத்தை அவர் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரே நாளில் நவக்கிரக தலங்களில் 4 தலங்களுக்கும், எதிரிகளை அழிக்க வல்ல பிரத்தியங்கரா தேவி கோயில் உட்பட பல்வேறு கோயில்களுக்கும் சென்று வரும் சசிகலாவின் இந்த ஆன்மிக பயணம், அவருக்கு அரசியலில் ஆதாயத்தை பெற்றுத் தருமா என்பதற்கு பதில் போகப்போகத்தான் தெரியும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in