காங்கிரசுக்கு சாதகமான பகுதிகளில் மட்டும் ராகுல் நடைபயணம் போவதால் என்ன பிரயோஜனம்?

கேள்வி எழுப்பும் தமிழக காங்கிரஸார்!
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை நடைபயணத்தை செப்டம்பர் 7-ம் தேதி தொடங்குகிறார் ராகுல்காந்தி. இந்தப் பயணத்தை பெரும் கனவுடன் திட்டமிடுகிறது காங்கிரஸ். ஆனால், ஆரம்பிக்கும் முன்னதாகவே இந்தப் பயணம் சர்ச்சைக்கு அச்சாரம் போட்டிருக்கிறது!

குமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமைப் பயணத்தை மேற்கொள்ளும் ராகுல், 3,750 கிலோ மீட்டர் தூரத்துக்கு 12 மாநிலங்களில் பயணிக்க திட்டமிடுகிறார். மொத்தம் 150 நாட்கள் பயணம் செய்கிறார். 7-ம் தேதி குமரி வரும் ராகுல், 11-ம் தேதி இங்கிருந்து திருவனந்தபுரம் செல்கிறார். குமரி மாவட்டத்தில் நான்கு நாட்கள் பயணம் செய்யும் ராகுல், கேரளத்துக்கு 18 நாட்கள் ஒதுக்கி இருக்கிறார்.

இந்த நிலையில், அவரது இந்தப் பயணத் திட்டம் குறித்து காமதேனு இணையத்திடம் பேசிய குமரி மாவட்ட காங்கிரஸார், “தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. இங்கு மொத்தமே 4 நாட்கள் தான் ராகுல்காந்தி நடைபயணம் செய்கிறார். கேரளத்தில் 20 தொகுதிகள் தான் உள்ளன அங்கு மட்டும் 18 நாட்கள் நடைபயணம் செல்கிறார். அதுகூட பிரச்சினை இல்லை. ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் வலுவாக இருக்கும் மாவட்டம் கன்னியாகுமரி. இங்கே காங்கிரசுக்கு மூன்று எம்எல்ஏ-க்கள் உள்ளனர். எம்பி தொகுதியும் காங்கிரஸ் வசம் தான் இருக்கிறது.

ஆக, இங்கே காங்கிரசை வளர்க்க பெரிதாக மெனக்கிட வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக காங்கிரசை எந்தப் பகுதியில் வளர்த்தெடுக்க வேண்டுமோ அந்தப் பகுதியிலிருந்து ராகுல் தனது பயணத்தைத் தொடங்க திட்டமிட்டிருக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் வலுவாக இருக்கும் பகுதியில் தொடங்கினால் தான் கூட்டம் கூட்டிக்காட்ட முடியும் என்பதால் அவரை குமரி மாவட்டத்துக்குள் முடக்கிவிட்டார்கள் இங்குள்ள காங்கிரஸ்காரர்கள்.

கேரளத்தில் 2019 மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளில் ஜெயித்தது. தமிழகத்தை ஒப்பிடுகையில் அங்கே காங்கிரஸ் கட்சி மிக வலுவாகவே உள்ளது. ஆனால், அங்கும் 18 நாள்களை ராகுலின் பயணத்திற்கு ஒதுக்கியுள்ளனர். இதையெல்லாம் பார்க்கும்போது காங்கிரசுக்கு வலுவான அடித்தளம் இருக்கும் பகுதிகள் வழியாகவே ராகுலின் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இப்படிச் செய்வதால் கூட்டம் கூட்டிக் காட்ட முடியுமே தவிர கட்சிக்கு பெரிதாக பலம் சேர்க்க முடியாது.

ராகுலின் குமரி மாவட்ட நடைபயணத்தில் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் குறிப்பிட்ட தூரத்துக்கு பகுதி பகுதியாகக் கலந்துகொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மாவட்ட காங்கிரஸாரும் இந்தப் பயணத்தில் பங்கெடுப்பார்கள் என்றாலும் நிகழ்வு என்னவோ கன்னியாகுமரி தொகுதியில் மட்டும்தான். தேசிய அளவில் ஒரு தலைவர் இதுபோல நடைப் பயணம் செல்லும்போது பெரும்பாலும் அனைத்து மாவட்டங் களையும் தொட்டுச் செல்லும்படியாகத்தான் திட்டமிடல் இருக்க வேண்டும். அப்படியில்லாமல், ஒரே மாவட்டத்தை மட்டும் குறிவைத்து நடைப்பயணம் அமையவிருப்பது தமிழக காங்கிரசுக்கு எந்தளவுக்கு கைகொடுக்கும் என்று சொல்வதற்கில்லை” என்றார்கள்.

ராகுலின் பயணத் திட்டத்தை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏ-க்கள், மாவட்ட தலைவர்கள் என பலரும் தங்களது ஆதரவாளர்கள் சகிதம் குமரியில் முகாமிட்டு வருகிறார்கள். ராகுலின் நடைப்பயணத்தில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இவர்கள் கூட்டம் திரட்டிக்காட்டி தங்களது செல்வாக்கை நிலைநிறுத்த முயற்சிப்பதாகச் சொல்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கும் இந்தத் தருணத்தில் திட்டமிடப்படும் ராகுலின் இந்த நடைபயணம் கட்சியினரிடையே புதிய எழுச்சியை உண்டாக்கும்; அதன் தாக்கம் மக்கள் மத்தியிலும் எதிரொலிக்கும் என்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.

என்ன நடக்கிறது என்பதை 7-ம் தேதிக்குப் பிறகு பார்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in