வயநாடு கள நிலவரம்... அமேதியிலும் களமிறங்குவாரா ராகுல்?

ராகுல்காந்தி - ஆனி ராஜா
ராகுல்காந்தி - ஆனி ராஜா

கேரளத்தில் ராகுல் போட்டியிடும் வயநாடு தொகுதியில் பெரும் பரபரப்புக்கு மத்தியில் வாக்குப் பதிவு நடந்து முடிந்திருக்கிறது. இது ராகுலின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தல் எனச் சொல்லப்படும் நிலையில் கடந்த தேர்தலைப் போல இம்முறையும் அவருக்கு வயநாடு கைகொடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்க்கும் தொகுதிகளில் ஒன்று வயநாடு. காரணம், இங்கு இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி.

பினராயி விஜயன் - ராகுல் காந்தி
பினராயி விஜயன் - ராகுல் காந்தி

‘இந்தியா கூட்டணி’ என்ற குடையின் கீழ் நாட்டின் பிற மாநிலங்களில் ஒன்றாக நிற்கும் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளும் இங்கு எதிர் எதிர் துருவங்களாக தேர்தலை எதிர்கொள்கிறார்கள். இதுவே பாஜக கூட்டணியின் பகடிக்கு ஆளாகி இருக்கும் நிலையில், இரண்டு அணிகளும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் போட்டி வேட்பாளர்களை அறிவித்து களத்தில் நிற்கின்றன.

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட்
காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட்

இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ”பாஜகவை விரட்டியடிக்க வேண்டும் என்பதே இடதுசாரிகளின் உறுதியான நிலைப்பாடு. கேரளத்தில் சிபிஎம் மற்றும் காங்கிரஸ் பாஜகவை எதிர்ப்பதில் ஒரு புள்ளியில் இருக்கிறோம் என்பது உண்மை. அதேசமயம் கேரளத்தில் இல்லவே இல்லாத பாஜகவை எதிர்ப்பதற்காக நாங்கள் அணி சேர்ந்தால், பாஜக இரண்டாவது இடத்தில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் நிலை வரும். அந்த வாய்ப்பைக்கூட பாஜகவுக்குக் கொடுக்கக் கூடாது என்பதற்காக தான் இங்கு போட்டியே” என்று தந்திரமாக பதில் அளித்தார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

கூட்டணி தர்மத்துக்காக பினராயியாவது இப்படி நழுவிப் பேசினார். ஆனால் ராகுல் காந்தியோ, “அமலாக்கத்துறை ஏன் இன்னும் பினராயி விஜயனை கைது செய்யாமல் இருக்கிறது?” என அதிரடி கேள்வி எழுப்பி, தனக்கு வாக்கு வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணிக்குள் குண்டை தூக்கி வீசினார். இதுவும் பாஜகவின் பரிகாசப் பேச்சுக்கு ஆளானது.

2016 சட்டப்பேரவை தேர்தலின் போது, கேரளாவில் பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2021 தேர்தலில் அதுவும் இல்லாமல் போனது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய பினராயி விஜயன், “கடந்த முறை கேரளாவில் கணக்கைத் தொட ங்கிய பாஜகவை இந்த முறை கணக்கு முடித்து இருக்கிறோம்” என்றார்.

வயநாட்டில் ராகுலை எதிர்த்து இடதுசாரி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா களத்தில் நிற்கிறார். இவர்களுக்கு இடையே போட்டி வலுவாக இருக்கும் நிலையில் கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரனை இங்கே களமிறக்கி இருக்கிறது பாஜக.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் கேரள சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரப்போகிறது என்பதால் அதற்கான முன்னோட்டமாக மக்களவைத் தேர்தலை இடதுசாரிகள் பார்க்கிறார்கள். கடந்த முறை கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. அதுபோன்ற நிலை இப்போது வரக்கூடாது என்பதாலும் தெளிவாக காய் நகர்த்து கிறார்கள் இடதுசாரிகள். அதனால், ராகுலுக்கு எதிராக ஆனி ராஜா மூலம் வலுவான போட்டியை உருவாக்கி இருக்கிறார்கள்.

வயநாட்டில் ராகுல் காந்தி ரோடு ஷோ
வயநாட்டில் ராகுல் காந்தி ரோடு ஷோ

இந்தியா கூட்டணியின் வெற்றியில் ராகுல் காந்தியின் வெற்றியும் பிரதானமாக எதிர்பார்க்கப்படும் நிலையில், வயநாட்டில் காங்கிரஸ் கட்சி இம்முறை சற்று உதறலில் தான் இருக்கிறது. இதையறிந்து தான் பிரதமர் மோடியும் ராகுலை வம்புக்கு இழுத்திருக்கிறார். “அமேதி தொகுதியில் தோல்வி அடைந்து விடுவோம் என்று தெரிந்து தான் ராகுல் காந்தி வயநாட்டை தேர்வு செய்தார். இப்போது வயநாட்டிலும் தோல்வி என்ற முடிவுக்கு வந்துவிட்டால் ராகுல் காந்திக்காக காங்கிரஸ் வேறு தொகுதியைத் தேடவேண்டும்” என்று மோடி நையாண்டி செய்யுமளவுக்கு இருக்கிறது வயநாட்டில் ராகுலின் நிலைமை.

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி

காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதிக்கு காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்காமல் இருக்கிறது. இதைவைத்து, வயநாடு கள நிலவரத்தின் அடிப்படையில் ராகுல் காந்தி அமேதியிலும் போட்டியிடலாம் என்று சொல்லப்படுகிறது.

அப்படி ஒரு முடிவெடுத்தால் வயநாட்டில் ஆனி ராஜா ஏற்படுத்திய போட்டிக்கு நிகரான போட்டியை ராகுலுக்குக் கொடுக்க இம்முறையும் அங்கு தாமரைச் சின்னத்துடன் களத்தில் நிற்கிறார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in