
"ஒரு தீர்ப்பு அவருக்கு எதிராக வந்துவிட்டது என்பதற்காக என்னோடு வாங்க என்று சொல்கிற அளவுக்கு நான் அப்படிப்பட்ட மனிதன் கிடையாது. ஓபிஎஸ் என்ன பண்ணப் போகிறார் என்று பார்ப்போம்" என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமியோடு இருப்பது உண்மையான அதிமுக தொண்டர்கள் அல்ல. அது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களாக இருக்கிறது. இன்றைக்கு பணபலத்தை கொண்ட அதிமுக என்ற கட்சி நடந்து கொண்டிருக்கிறது. வரும் காலத்தில் அம்மாவினுடைய கொள்கைகளை, லட்சியங்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். அது தொடர்ந்து செயல்படும்.
இந்த தீர்ப்புக்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்துக்கு எந்த பாதிப்பும் வராது. அதேபோல தான் இந்த தீர்ப்பு. ஓபிஎஸ் என்னுடைய பழைய நண்பர். மூன்று முறை முதல்வராக இருந்தவர். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார். அதிமுக பொதுக்குழு தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருக்கிறார். அதிமுக தீர்மானங்கள் எல்லாம் செல்லாது என்று நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது எல்லாம் இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு ஒரு தீர்ப்பு அவருக்கு எதிராக வந்துவிட்டது என்பதற்காக என்னோடு வாங்க என்று சொல்கிற அளவுக்கு நான் அப்படிப்பட்ட மனிதன் கிடையாது. ஓபிஎஸ் என்ன பண்ணப் போகிறார் என்று பார்ப்போம்" என்றார்.