அவைத் தலைவராகிறாரா ஓபிஎஸ்?

ஈபிஎஸ்ஸை வீழ்த்த சசிகலா புதிய வியூகம்!
அவைத் தலைவராகிறாரா ஓபிஎஸ்?
- படம்: கிருஷ்ணா

“திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் சசிகலா போன்றவர்களையும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்” - துக்ளக் ஆண்டு விழாவில் அதன் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சாட்சிக்கு வைத்துக் கொண்டு அதிமுகவுக்கு சொன்ன இந்த யோசனை தமிழக அரசியல் திகில் திருப்புமுனைகளுக்கு தயாராகி விட்டதை திட்டவட்டமாகச் சொல்கிறது.

சசிகலா மற்றும் தினகரனை அதிமுகவில் ஐக்கியப்படுத்த பாஜக எடுத்து வரும் முயற்சிகள் குறித்து காமதேனு இதழில் தொடர்ந்து நாம் சொல்லி வருகிறோம். இப்போது அந்த முயற்சிகளின் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது பாஜக. அதற்கான அறிகுறிதான் ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு. இத்தனைக்கும், “சசிகலாவை மீண்டும் அதிமுகவுக்குள் விடவே கூடாது” என சங்கநாதம் எழுப்பிக் கொண்டிருந்தவர் குருமூர்த்தி. அப்படிப்பட்டவர் திடீரென சசிகலாவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்திருப்பது தமிழக அரசியலை பரப்பாக்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக, அமமுகவினர் இந்த சமிக்ஞையால் உற்சாகத் துள்ளலில் இருக்கிறார்கள்.

“வீடு தீப்பாற்றி எரியும்போது கங்கை நீருக்காகக் காத்திருக்கக் கூடாது. சாக்கடைத் தண்ணீராக இருந்தாலும் எடுத்து ஊற்ற வேண்டும் என பத்திரிகையாளர் அருண் ஷோரி சொல்லி இருக்கிறார். ஆகவே, திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் சசிகலா போன்றவர்களையும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்” - துக்ளக் விழாவில் குருமூர்த்தி இப்படிப் பேசியது வியாழக்கிழமை. அதற்கு முன்பாக சனிக்கிழமையே டெல்லியிலிருந்து வந்திருந்த ஆர்எஸ் எஸ் முக்கிய தலைவர் ஒருவர் குருமூர்த்தியைச் சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது.

அப்போது அதிமுக விஷயத்தில் பாஜக தலைமை இனி இந்த ரூட்டில் தான் பயணிக்கப் போகிறது. இதற்கு ஏற்ப நீங்கள் நடந்து கொள்ளுங்கள் என்று குருமூர்த்திக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் ஆலோசனை வழங்கியதாகச் சொல்கிறார்கள். இதன் பிறகு குருமூர்த்தியும் ஆர்எஸ்எஸ் தலைவரும் காஞ்சி மடம் சென்று விஜயேந்திரரைச் சந்தித்தும் இதுபற்றி பேசியதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது.

சசிகலா
சசிகலா- படம் : கிருஷ்ணா

அமமுகவை அதிமுகவுக்குள் இணைப்பது குறித்து தினகரனுடன் பல்வேறு கட்டமாக பேசி வருகிறது பாஜக தலைமை. பாஜக அழைப்பின் பேரில் அண்மையில் டெல்லி சென்றிருந்த தினகரன் அங்கே ஐந்து நாட்கள் தங்கியிருந்தார். அப்போது பாஜக முக்கியத் தலைவர்களுடன் தினகரன் மூன்று சுற்று பேச்சுவார்த்தை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த சனிக்கிழமை ஜனவரி 9-ல் சென்னை திரும்பினார் தினகரன்.

டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது, ‘எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக எங்களால் ஏற்கமுடியாது’ என்ற கருத்தில் பிடிவாதமாக இருந்தாராம் தினகரன். அதேநேரம் எடப்பாடி யாருக்குப் பதில் வேறு யாரையும் அவர் பரிந்துரைக்க வில்லை என்றும் தினகரன் தரப்பு சொல்கிறது.

ஆனால் பாஜக தரப்பில் பேசுபவர்களோ, “எடப்பாடியார், சசிகலாவை பொதுச் செயலாளராக ஏற்கத் தயார். ஆனால், முதலமைச்சர் வேட்பாளராக என்னை அறிவிக்க வேண்டும் என்று இறங்கி வந்திருக்கிறார். தினகரனோ, சின்னம்மாவை பொதுச்செயலாளராக அங்கீகரித்து தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பிடிவாதம் காட்டுகிறார். யார் முதல்வர் என்பதை தேர்தலுக்குப் பிறகு பேசிக்கொள்ளலாம். முதலில் இரண்டு பார்ட்டிகளையும் இணைக்க சம்மதியுங்கள் என எங்கள் டெல்லி தலைமை இரு தரப்புக்கும் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இதனிடையே, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 18 அல்லது அதற்கு அடுத்த இரண்டொரு நாளில் டெல்லி செல்லவிருக்கிறார். ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு பிரதமரை அழைப்பதற்காக இந்தப் பயணம் என்று வெளியில் சொல்லப்பட்டாலும் உள்ளுக்குள் அரசியல் நகர்வு இருக்கிறது. அதிமுக - அமமுக இணைப்பை இறுதி செய்யத்தான் எடப்பாடியாரை டெல்லிக்கு அழைத்திருக்கிறது பாஜக தலைமை.

இப்போது இங்குள்ள பலரது குடுமி டெல்லியின் கையில் வசமாக சிக்கி இருக்கிறது. எனவே நிச்சயம் எடப்பாடியார் டெல்லியிலிருந்து சென்னை திரும்பும் போது பாஜகவின் அன்புக் கட்டளைக்குப் அடிபணிந்திருப்பார். அவர் சென்னை திரும்பியதும் அடுத்த வாரத்தில் தினகரனையும் பாஜக டெல்லிக்கு அழைகும். அநேகமாக அந்தப் பயணம் ஜனவரி 25-ம் தேதிக்குள் இருக்கலாம். எடப்பாடியாரிடம் பேசியதை வைத்து தினகரனுக்கும் சில சிக்கல் சிக்னல்கள் தரப்படலாம். அதைப் பார்த்துவிட்டு அவர், ஓபிஎஸ்ஸை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவும் சம்மதம் தெரிவிக்கலாம்”என்கிறார்கள்.

ஆக, அடுத்து வரப்போகும் நாட்கள் அதிமுகவில் மட்டுமல்ல... தமிழக அரசியலிலும் திடுக்கிடும் திருப்பங்களைத் தந்துவிட்டுப் போகலாம்!

பசும்பொன் செல்லும் சசிகலா?

ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சிறைக்கு வெளியே அவரை வைத்து பாஜக எடுத்து வரும் அரசியல் நகர்வுகள் ஒருபுறமிருக்க, சசிகலாவின் விடுதலையை சரித்திர பதிவாக மாற்றவும் சசிகலா தரப்பில் சில முயற்சிகள் எடுக்கப்பட்டதாம்.

அதன்படி, சிறையிலிருந்து விடுதலையானதும் சசிகலாவுக்கு பிரம்மாண்ட வரவேற்புக் கொடுத்து அவரை கமுதியிலுள்ள பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதற்கான பணிகளை (சசிகலா) எம்.நடராஜனின் உடன் பிறப்புகள் முன்னெடுத்தார்கள். பெங்களூருவிலிருந்து காரில் புறப்படும் சசிகலாவை எந்த வழியில் எப்படி அழைத்துவரவேண்டும், எந்தெந்த இடங்களில் அவருக்கு எப்படியெல்லாம் வரவேற்பு கொடுக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் பேசிமுடிவெடுக்கப்பட்டன. அத்துடன் பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கும் விசிட் அடித்த நடராஜனின் உறவினர்கள் அங்கும் இதுகுறித்து ஆலோசனை நடத்திச் சென்றனர்.

நான்கு ஆண்டுகளாக அரசியல் தொடர்பில்லாமல் சிறைக்குள் இருந்துவிட்டு வெளியில் வரும் சசிகலாவுக்கு புதுத் தொடக்கம் கொடுக்க நினைக்கும் நடராஜனின் சொந்தபந்தங்கள், அதற்கு ஒரே வழி அவருக்குப் பின்னால், ‘நான் தேவர் வீட்டுப் பொண்ணு’ என்ற பிம்பத்தை உருவாக்குவதுதான் என தீர்மானித்தனர். இதன் மூலம் கட்சிக்குள் சசிகலா இழந்த செல்வாக்கை மீண்டும் பெறமுடியும் என்பது அவர்களின் கணக்கு. ஆனால், இப்போது பாஜகவே சசிகலாவை அதிமுகவுக்குள் கொண்டுவர முழு முயற்சி எடுப்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்க நினைக்கிறதாம் நடராஜன் தரப்பு. இதனால், சசிகலாவை பசும்பொன்னுக்கு அழைத்துச் செல்லும் திட்டம் அநேகமாக இருக்காது என்கிறார்கள்.

அதேநேரம், முன்பு சசிகலாவுக்கு ஆதரவான கருத்துகளை சொல்லவே தயங்கிய அதிமுக தலைகள் எல்லாம் இது ஆட்சியின் அந்திமகாலம் என்பதால் மெல்ல சசிகலாவுக்கு ஆதரவாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். “அவர்கள் எங்கிருந்தாலும் நாங்கள் மரியாதைக்குரிய வகையிலே போற்றக் கூடியவர்கள். அம்மாவுக்காக தவவாழ்க்கை வாழ்ந்தவர்கள்” என்று முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா சசிகலா பாமாலை பாடியிருப்பதுகூட அப்படித்தான்.

இது தொடக்கம் தான் இன்னும் பலர் இப்படிப் கிளம்பக் காத்திருக்கிறார்கள். ஆக, தற்போது சசிகலாவுக்கு ஆதரவாக பாஜக காட்டும் சிக்னல்கள் அதிமுகவுக்குள் சசிகலாவின் இழந்த செல்வாக்கை மீண்டும் தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in