அக்னி பரிட்சைக்குக் காத்திருக்கும் ஹேமந்த் சோரன்: பாஜக திட்டத்தை முறியடிக்குமா முக்தி மோர்ச்சா?

அக்னி பரிட்சைக்குக் காத்திருக்கும் ஹேமந்த் சோரன்: பாஜக திட்டத்தை முறியடிக்குமா முக்தி மோர்ச்சா?

ஜார்கண்ட் சட்டப் பேரவையில் இன்று நடைபெறும் சிறப்பு கூட்டத் தொடரில், ஹேமந்த் சோரன் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதையொட்டி சத்தீஸ்கரில் முகாமிட்டிருந்த ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் தனி விமானத்தில் நேற்று மாலை ராஞ்சி திரும்பினர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முக்தி மோர்ச்சா கட்சி தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. தனது பதவியைப் பயன்படுத்தி ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைநகர் ராஞ்சியில் உள்ள சுரங்கத்தைச் சட்ட விரோதமாகக் குத்தகைக்கு எடுத்து ஆதாயம் அடைந்ததாகப் புகார் எழுந்துள்ளது. எனவே அவரின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்யக் கோரி தேர்தல் ஆணையத்திடம் பாஜக முறையிட்டது. இதை ஏற்று ஹேமந்த் சோரனின் சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் தகுதிநீக்கம் செய்யுமாறு ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பைஸுக்கு தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் 25-ல் பரிந்துரைத்ததாகத் தெரிகிறது.

இந்தச் சூழலில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் ஜார்க்கண்டில் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே ஆளும் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் சுமார் 30 பேரும், காங்கிரஸ் ஆளும் மாநிலமான சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூருக்கு தனி விமானத்தில் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். ஜார்க்கண்ட் சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத் தொடர் இன்று கூடவுள்ள நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரன் நம்பிக்கை வாக்கு கோரவுள்ளார். இதையொட்டி சத்தீஸ்கரில் முகாமிட்டிருந்த 30 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 40 பேர் ராய்ப்பூரிலிருந்து நேற்று மாலை தனி விமானத்தில் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு வந்தடைந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in