அதிமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்குமா மதுரை மாநகராட்சி?

மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவராக  தேர்வு செய்யப்பட்ட சோலைராஜா உள்ளிட்ட கவுன்சிலர்களுடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ.
மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சோலைராஜா உள்ளிட்ட கவுன்சிலர்களுடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ.

மதுரை மாநகராட்சியின் எதிர்க்கட்சி தலைவராக கவுன்சிலர் சோலைராஜாவை தேர்ந்தெடுத்துள்ளது அதிமுக. ஆனால், அதனை மாநகராட்சி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 67 வார்டுகளில் திமுக வெற்றிபெற்றது. அதிமுக 15 இடங்களிலும், காங்கிரஸ் 6, சிபிஎம் 4, மதிமுக 3, விசிக 1, சுயேச்சை 1 இடத்திலும் வெற்றிபெற்றன. திமுக சார்பில் மேயராக இந்திராணியும், துணை மேயராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகராஜனும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில் இன்று அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் தேர்வு, மதுரை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடந்தது. முன்னாள் அமைச்சரும் மாநகர் மாவட்ட செயலாளருமான செல்லூர் கே.ராஜூ தலைமையில் நடந்த கூட்டத்தில், மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவராக சோலைராஜா, துணைத் தலைவராக ரூபிணி குமார், கொறடாவாக சண்முகவள்ளி, துணை கொறடாவாக மாணிக்கம், செயலாளராக மாயத்தேவன், துணைச் செயலாளர்களாக கிருஷ்ணமூர்த்தி, பிரேமா, இணைச் செயலாளராக எஸ்எம்டி ரவி, பொருளாளராக பைக்கரா கருப்புசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தப் பட்டியலை மாமன்றத்துக்கு அனுப்பி வைக்க இருப்பதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த உறுப்பினர்கள் மாமன்றத்தில் பொறுப்பான எதிர்க்கட்சியாக நடந்துகொள்வார்கள் என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

ஆனால், அதிமுக வெறும் 15 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருப்பதால், அதனை அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக மதுரை மாநகராட்சி ஏற்குமா என்பது சந்தேகமே. கடந்த முறை ராஜன்செல்லப்பா மேயராக இருந்தபோது, திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக எம்.எல்.ராஜ் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், 5 ஆண்டுகள் பதவிக்காலம் முடியும் வரையில் அவரை அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவராக மதுரை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in