இரண்டாம் முறையாக வாகைசூடுவாரா கனிமொழி?... தூத்துக்குடியின் களநிலவரம் இதுதான்!

கனிமொழி கருணாநிதி
கனிமொழி கருணாநிதி

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 2வது முறையாக களமிறங்கியுள்ள திமுகவின் கனிமொழி மீண்டும் வெற்றியை தக்க வைப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

வங்கக் கடலோரம் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம் தென்னகத்தின் நுழைவாயில் என அழைக்கப்படுகிறது. முத்துநகர், திருமந்திர நகர் என பல்வேறு பெயர்களிலும் இந்த நகரம் அழைக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த 1986ம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது. 2009ம் ஆண்டு தொகுதி மறுசீரமைக்கப்பட்டு புதிய தொகுதியாக தூத்துக்குடி உருவானது. அதன் பின்னர் இதுவரை 3 மக்களவைத் தேர்தல்களை இந்த தொகுதி எதிர்கொண்டுள்ளது. 2 முறை திமுகவும், ஒரு முறை அதிமுகவும் இங்கு வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்று எம்.பி.,யாக பதவி வகித்து வருகிறார்.

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்

தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் என 6 சட்டப்பேரவை தொகுதிகள் இந்த மக்களவைத் தொகுதியில் உள்ளது. கடந்த முறை பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் இங்கு வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்த முறை இந்த தொகுதி பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் வேட்பாளராக எஸ்.டி.ஆர்.விஜயசீலன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணியும், நாம் தமிழர் கட்சி சார்பில் ரவீனா ரூத் ஜெயினும் களமிறங்கி உள்ளனர்.

திமுக வேட்பாளர் கனிமொழி, தமாகா வேட்பாளர் விஜயசீலன், அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி
திமுக வேட்பாளர் கனிமொழி, தமாகா வேட்பாளர் விஜயசீலன், அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி

தூத்துக்குடி மாவட்டம் வெயிலுக்கு பெயர் பெற்றது. தற்போது அனல் வெயிலுடன் தேர்தல் சூடும் அதிகரித்துள்ளதால் கடும் போட்டி நிலவு வருகிறது. ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் என்ற அனுபவம் மற்றும் நாடாளுமன்றத்தில் கவனிக்கத்தக்க பேச்சுகளை முன் வைத்தவர் என்ற வகையில் மாவட்டம் முழுவதும் கனிமொழிக்கு நல்ல அறிமுகம் உள்ளது. குறிப்பாக தமிழக தென் மாவட்டங்களை புரட்டி போட்ட அதிகனமழை காலத்தில் நிவாரண பணிகளை முன் நின்று மேற்கொண்டவர் என்ற வகையிலும் அவருக்கு தொகுதிக்குள் ஆதரவு இருக்கிறது.

தூத்துக்குடி
தூத்துக்குடி

இருப்பினும் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ள 2ஜி வழக்கு மற்றும் அறிவித்த வாக்குறுதிகள் நிறைவேற்றாதது போன்றவை அவருக்கு எதிராக இருந்து வருகிறது. கடந்த தேர்தலின் போது அறிவித்த சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முதலமைச்சரின் தங்கையாக அவர் முயற்சிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டை ஒரு தரப்பினர் முன்வைக்கின்றனர். குறிப்பாக தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம், புதிய ரயில் சேவைகளுக்கான கோரிக்கைகள், இ.எஸ்.ஐ.மருத்துவமனை கட்டுமான பணிகள் போன்றவை முழுமையாக நிறைவேறாதது தொகுதி மக்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டுப் படகு மீனவர்கள் (கோப்பு படம்)
நாட்டுப் படகு மீனவர்கள் (கோப்பு படம்)

மேலும் கடலில் மீன் பிடிக்க செல்லும்போது ஏற்படும் விபத்துகளில் இருந்து மீனவர்களை காக்க ’கடல் ஆம்புலன்ஸ்’ திட்டம் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும் தன் தரப்பு சாதனைகளை முன் வைக்கவும் கனிமொழி எம்.பி.,க்கு ஏராளமான வாய்ப்புகள் முன்னிலையில் உள்ளன.

அந்த வகையில் தீப்பெட்டி தொழிலுக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியவர் கனிமொழி என தூத்துக்குடியின் முக்கிய தொழில்களில் ஒன்றாக உள்ள தீப்பெட்டி தொழிலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளதை பாஜக தங்களது சாதனையென கூறிவரும் நிலையில், அதற்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர் என்ற வகையில் கனிமொழிக்கு ஆதரவு இருக்கிறது.

தீப்பெட்டி தொழில்
தீப்பெட்டி தொழில்

அதே சமயம் தீப்பெட்டி தொழிலில் மூலப் பொருட்கள் விலை உயர்ந்து வருவது, தொழிலாளர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரெடிமேட் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்ற இப்பகுதி மக்களை நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற எம்.பி., முயற்சிக்கவில்லை எனவும் கருத்துக்கள் உலாவுகிறது. உப்பளத்தொழிலாளர்களின் ஆதரவு இருப்பது கனிமொழிக்கான சாதகமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் எதிராளிகளை வீழ்த்தி இரண்டாவது முறையாக கனிமொழி எம்.பி.,யாக வெற்றி வாகை சூடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in